”வீரர்களின் திறமைகளைப் பற்றிப் பேசாமல் ஆடுகளம் குறித்து பேசுவது வருத்தமளிக்கிறது” என இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே, கடந்த 9ஆம் தேதி தொடங்கிய பார்டர்-கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 5 நாட்கள் கொண்ட இந்தப் போட்டியானது 3 நாட்களில் முடிவுற்றதால், ஆடுகளம் குறித்த விமர்சனம் எழுந்தது. ஆடுகளம், இந்திய வீரர்களின் அறிவுறுத்தலின்படி கடைசி நேரத்தில் மாற்றப்பட்டதாகவும், சில பகுதிகளில் மட்டும் பந்து நன்றாக திரும்பும் வகையில் அமைக்கப்பட்டிருந்ததாகவும் ஆஸ்திரேலியா ஊடகங்கள் குற்றஞ்சாட்டி செய்திகள் வெளியிட்டிருந்தன. அதேநேரத்தில், இதற்கு நேர்மாறாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர், உஸ்மான் கவஜா ஆகியோர் வேகப்பந்து வீச்சுக்கு ஆட்டம் இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து போட்டி முடிந்த பிறகு கேப்டன் ரோகித் சர்மாவும், மூத்த பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினும் விவாதித்தனர். இந்த வீடியோவை பிசிசிஐ பகிர்ந்துள்ளது. அதில் ரோகித் சர்மா, “இரு அணியினரும் விளையாடியது அதே ஆடுகளம்தான். ஆடுகளத்தைப் பற்றிய சர்ச்சை ஏன் எழுகிறது என்று எனக்கு உண்மையில் புரியவில்லை. போட்டியில் வெற்றி என்பது களத்தில் வீரர்கள் எப்படிச் செயல்படுகிறார்கள் மற்றும் அவர்களின் திறன் சார்ந்தது. வீரர்களின் திறமைகளைப் பற்றிப் பேசாமல் ஆடுகளம் குறித்து பேசுவது வருத்தமளிக்கிறது. ஆஸ்திரேலிய அணியின் மனநிலை குறித்து எனக்கு தெரியாது.
எங்கள் அணியினர் நல்ல நிலையில் உள்ளனர். இதுபோன்ற ஆடுகளங்களில் நாங்கள் விளையாட விரும்புகிறோம். கடந்த 3-4 ஆண்டுகளாக இதுபோன்ற ஆடுகளங்களில்தான் நாங்கள் விளையாடி வருகிறோம். சிறுவயது முதல் நாங்கள் இதுபோன்ற ஆடுகளங்களில் விளையாடிப் பழகியவர்கள். இதனால் ஆடுகளம் குறித்து வீரர்கள் அறையில் பேசுவதில்லை. இந்த போட்டிக்கு முன்பு நாங்கள் நிறைய பயிற்சிகள் எடுத்து தயாரானோம். நீங்கள் நன்றாக தயாராகும் பட்சத்தில் கிரிக்கெட் மட்டுமின்றி எல்லா விஷயங்களிலும் நம்பிக்கையுடன் செயல்பட முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பாக, முதல் இன்னிங்ஸில் புஜாராவுக்குப் பதிலாக, நைட் வாட்ச்மேன் ஆக அஸ்வினை ரோகித் சர்மா களம் இறக்கினார். இதன்மூலம் அஸ்வின்கூட இந்த ஆடுகளத்தில் நன்றாக விளையாடுகிறார் என்பதை ஆஸ்திரேலியா வீரர்களுக்கு தெரியப்படுத்தும் விதமாகத்தான் ரோகித் சர்மா இப்படி ஒரு முடிவை எடுத்ததாகவும் பேசப்பட்டது. முன்னதாக இந்த டெஸ்டில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, முதலில் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 177 ரன்கள் எடுத்திருந்தது. அதிகபட்சமாக லபுஸ்சேன் 49 ரன்கள் எடுத்திருந்தார். இந்திய அணி தரப்பில் ஜடேஜா 5 விக்கெட்களையும் அஸ்வின் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
பின்னர் முதல் இன்னிங்ஸ் ஆடிய இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, டெஸ்டில் 9வது சதம் அடித்ததுடன், 120 ரன்கள் எடுத்தார். அவருக்கு அடுத்தபடியாக ரவீந்திர ஜடேஜா 70 ரன்களும், அக்சர் பட்டேல் 84 ரன்களும் எடுத்து இந்திய அணி முதல் இன்னிங்சில் 400 ரன்கள் எடுக்க உதவினர். இதையடுத்து, இந்திய அணி ஆஸ்திரேலியாவைவிட 223 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. இதைத் தொடர்ந்து 2வது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணி, அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோரின் சுழல்பந்து வீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் சுருண்டது. இறுதியாக ஆஸ்திரேலிய அணி 32.1 ஓவர்களில் 91 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியில் அஸ்வின் 5 விக்கெட்களையும் ஜடேஜா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
- ஜெ.பிரகாஷ்