டெஸ்ட் போட்டிக்கும் டி20 பிளேயர்ஸ் தானா? ரஞ்சி தொடரை எதுக்கு நடத்திகிட்டு! இவர்களின் நிலை?

டெஸ்ட் போட்டிக்கும் டி20 பிளேயர்ஸ் தானா? ரஞ்சி தொடரை எதுக்கு நடத்திகிட்டு! இவர்களின் நிலை?
டெஸ்ட் போட்டிக்கும் டி20 பிளேயர்ஸ் தானா? ரஞ்சி தொடரை எதுக்கு நடத்திகிட்டு! இவர்களின் நிலை?
Published on

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கான இந்திய அணியை அறிவித்துள்ளது பிசிசிஐ. இந்நிலையில், ரஞ்சிக்கோப்பையில் சிறப்பாக விளையாடி வரும் வீரர்களை விட்டுவிட்டு, டெஸ்ட் அணிக்குள் டி20 வீரர்களை எடுப்பது என்பது ரஞ்சிகோப்பையையே அசிங்கப்படுத்துவது போலவும், பின் எதற்காக ரஞ்சிக்கோப்பை போன்ற தொடரை நடத்தவேண்டும் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்.

இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு பிறகு, இந்திய அணி நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான தொடர்களில் அடுத்தடுத்து பங்குபெற்று விளையாடவிருக்கிறது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து அணி ஜனவரி 18 அன்று தொடங்கி பிப்ரவரி 1ஆம் தேதிவரை, 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் பங்குபெற்று விளையாடுகிறது. அதைத்தொடர்ந்து இந்தியா வரும் ஆஸ்திரேலியா அணி பிப்.09ல் தொடங்கி மார்ச் 22 வரை 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்குபெற்று விளையாடுகிறது. இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நுழைவதற்கான பெரிய வாய்ப்பாக இந்த ஹோம் டெஸ்ட் சீரிஸ் பார்க்கப்படுகிறது. டேபிள் டாப்பராக இருக்கும் ஆஸ்திரேலியாவை 3-1 என வெற்றிபெற்றால் இறுதிப்போட்டிக்குள் எந்தவிதமான இடையூறும் இல்லாமல் இந்திய அணி நுழையும் வாய்ப்பை பெறும்.

இந்நிலையில், இரண்டு அணிகளுக்கும் எதிராக விளையாடவிருக்கும் இந்திய அணியை அறிவித்துள்ளது பிசிசிஐ. அதில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணியில், டி20யில் சிறப்பாக விளையாடி வரும் சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் இருவரையும் அணிக்குள் எடுத்துவந்திருக்கிறது பிசிசிஐ. பிசிசிஐயின் இந்த முடிவானது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கும், முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வர்ணனையாளர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் கடந்த காலங்களாக ரஞ்சிக்கோப்பையில் பல திறமையான வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர், அப்படியிருக்க எதற்காக டி20 வீரர்களை அணிக்குள் எடுக்க வேண்டும் என்றும், பின் எதற்காக ரஞ்சிக்கோப்பையை நடத்துகிறீர்கள், இப்படி ரஞ்சிக்கோப்பையை விட்டுவிட்டு டி20 வீரர்களை எடுப்பது, ரஞ்சிக்கோப்பையை அவமதிப்பது போல இருப்பதாக பல இந்திய ரசிகர்கள் டிவிட்டரில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ரஞ்சிக்கோப்பையில் இருந்து இரண்டு வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கவனம் ஈர்த்திருக்கின்றனர். அந்த வரிசையில் முதல் இரண்டு இடத்தில் இருப்பது ஷர்பராஸ் கான் மற்றும் அபிமன்யூ ஈஸ்வரன் இருவரும் இருக்கின்றனர்.

ரஞ்சிக்கோப்பையில் சர்பராஸ்கான்!

2019ஆம் வருடத்தில் இருந்து சிறப்பான ஆட்டத்தை வெளீப்படுத்தி வரும் ஷர்பராஸ் கான், 22 போட்டிகளில் 134 சராசரியுடன் 2289 ரன்களை குவித்துள்ளார். 3 முறை இரட்டை சதங்களை விளாசி இருக்கும் ஷர்பராஸ், ஒருமுறை 300 ரன்களையும் குவித்துள்ளார். மற்றும் 9 சதங்களுடன் 5 அரைசதங்களை அடித்துள்ளார் ஷர்பராஸ். அதிகபட்ச ரன்களாக 301* ரன்களை குவித்துள்ளார்.

ரஞ்சிக்கோப்பையில் அபிமன்யூ ஈஸ்வரன்!

முதல் தர போட்டிகளில் 139 இன்னிங்ஸ்களில் விளையாடி இருக்கும் அபிமன்யூ ஈஸ்வரன் 48 சராசரியுடன் 20 சதங்கள், 24 அரைசதங்களை விளாசி 6024 ரன்களை குவித்துள்ளார். கடைசி 5 முதல் தர போட்டிகளில் விளையாடி இருக்கும் அபிமன்யூ ஈஸ்வரன் 165, 170, 157, 141, 122 என தொடர்ந்து சதங்களை குவித்துள்ளார்.

இந்நிலையில், சர்பராஸ் மற்றும் அபிமன்யூவை தவிர்த்துவிட்டு சூர்யகுமார் மற்றும் இஷான் கிஷன் தேர்வுசெய்யப்பட்டிருப்பது பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சர்பராஸை விடுத்து சூர்யகுமார் எடுக்கப்பட்டிருப்பதை விமர்சித்திருக்கும் ரசிகர் ஒருவர், “டெஸ்டில் சர்பராஸ் கானை விட்டுவிட்டு சூர்யகுமார் யாதவை தேர்வு செய்திருப்பது ரஞ்சி கோப்பையை அவமதிப்பதாகும், சர்பராஸ் மிக சிறப்பான முதல் தர ரன்களையும், ஆட்டத்தையும் கொண்டுள்ளார். எந்த வீரரை விடவும் அவர் டெஸ்ட் அணிக்குள் தகுதியான வீரர். இந்த இந்திய அணியின் தேர்வு குழுவும் குழுப்ப குழுவாக உள்ளதாக” விமர்சித்துள்ளார்.

அபிமன்யூவை விடுத்து டி20 வீரர்களை எடுத்திருப்பதை விமர்சித்திருக்கும் ரசிகர் ஒருவர், “ முதல் தர போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அபிமன்யூவிற்கு ஒரு வாய்ப்பளியுங்கல், பின்னர் அவர் சிறப்பாக விளையாடாவிட்டால், டிராப் செய்துவிடுங்கள். டி20 ஆட்டத்தை பொறுத்து நீங்கள் டெஸ்ட் அணியை தேர்வு செய்தால், டெஸ்ட் அணியில் சிறப்பாக விளையாடும் புஜாராவையும் டி20 அணியில் விளையாட வையுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்சா போக்ளே, “முதல் தர கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி இந்திய அணியின் தேர்வு குழு கதவை தட்டியிருக்கும் சர்பராஸ் கானிற்கு இது கடினமான ஒன்று. இதைவிட அணிக்குள் நுழைய சிறப்பான பங்களிப்பை கொடுக்கமுடியாது” என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து டெஸ்ட் அணித்தேர்வு குறித்த அதிருப்தியை வைத்து வருகின்றனர் இந்திய ரசிகர்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com