எதிர்வரும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் துணை பிராந்திய ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இன்று நடைபெற்ற போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் காம்பியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய பென்னெட் மற்றும் மருமணி இருவரும் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி வலுவான தொடக்கத்தை அமைத்தனர். சிக்சர் பவுண்டரி என துவம்சம் செய்த இந்த ஜோடி 6 ஓவருக்கு 103 ரன்களை குவித்து மிரட்டியது.
இதுவரை பார்த்தது எல்லாம் சாம்பிள்தான் என 4வது வீரராக களத்திற்கு வந்த கேப்டன் சிக்கந்தர் ராசா, கருணையே காட்டாமல் காட்டடி அடிக்க ஆரம்பித்தார். சிக்கந்தர் ராசாவின் மரண அடியால் 10 ஓவர்களுக்கு 150 ரன்களை எட்டியது ஜிம்பாப்வே அணி.
ஆனால் போகப்போக ருத்ரதாண்டவம் ஆடிய சிக்கந்தர் 7 பவுண்டரிகள் 15 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்டி 43 பந்துகளில் 133 ரன்கள் குவித்து மிரட்ட, 20 ஓவர் முடிவில் 344 ரன்கள் குவித்தது ஜிம்பாப்வே.
344 ரன்கள்: சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை அடிக்கப்பட்ட அதிகபட்ச டோட்டலாக 344 ரன்கள் பதிவுசெய்யப்பட்டது. இதற்கு முன்னர் கடந்தாண்டு மங்கோலியா அணிக்கு எதிராக நேபாள் அடித்த 314 ரன்களே சர்வதேச டி20 போட்டியில் அடிக்கப்பட்ட அதிகபட்ச டோட்டலாக இருந்தது. அதனை தற்போது ஜிம்பாப்வே உடைத்துள்ளது.
டி20 கிரிக்கெட்டில் அதிகபட்ச டோட்டல்:
* ஜிம்பாப்வே - 344 ரன்கள் vs காம்பியா - 2024
* நேபாள் - 314 ரன்கள் vs மங்கோலியா - 2023
* இந்தியா - 297 ரன்கள் vs வங்கதேசம் - 2024
290 ரன்கள்: ஜிம்பாப்வே நிர்ணயித்த 345 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய காம்பியா அணி 54 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் 290 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற ஜிம்பாப்வே, அதிகபட்ச மார்ஜின் வித்தியாசத்தில் ஒரு டி20 போட்டியை வென்ற அணி என்ற உலக சாதனையை படைத்து அசத்தியது.
அதிகபட்ச மார்ஜின் வித்தியாசத்தில் வெற்றி:
* ஜிம்பாப்வே - 290 ரன்கள் வித்தியாசம் vs காம்பியா - 2024
* நேபாள் - 273 ரன்கள் வித்தியாசம் vs மங்கோலியா - 2023
* செக் குடியரசு - 257 ரன்கள் வித்தியாசம் vs துருக்கி - 2019