நவீன கால கிரிக்கெட் என்பது பேட்ஸ்மேன்களின் ராஜாங்கமாகவும், அதில் டி20 வடிவமென்பது சாதனைகளின் கூடாரமாகவும் மாறிவருகிறது. அதிகபட்ச டோட்டல், குறைவான பந்துகளில் அதிக ரன்கள், ஒரே ஓவரில் 5-6 சிக்சர்கள் என ஒவ்வொரு டி20 போட்டியும் சுவாரசியங்களுக்கு பஞ்சம் இல்லாத வகையிலேயே தற்போது நடந்துவருகிறது.
அந்தவகையில் சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிராக இந்திய அணி 297 ரன்களை குவித்த நிலையில், தற்போது ஜிம்பாப்வே அணி 20 ஓவர் போட்டியில் 344 ரன்களை குவித்து புதிய உலக சாதனை படைத்துள்ளது.
எதிர்வரும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் துணை பிராந்திய ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இன்று நடைபெற்ற போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் காம்பியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய பென்னெட் மற்றும் மருமணி இருவரும் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி வலுவான தொடக்கத்தை அமைத்தனர். சிக்சர் பவுண்டரி என துவம்சம் செய்த இந்த ஜோடி 6 ஓவருக்கு 103 ரன்களை குவித்து மிரட்டியது.
இதுவரை பார்த்தது எல்லாம் சாம்பிள் தான் என 4வது வீரராக களத்திற்கு வந்த கேப்டன் சிக்கந்தர் ராசா, கருணையே காட்டாமல் காட்டடி அடிக்க ஆரம்பித்தார். சிக்கந்தர் ராசாவின் மரண அடியால் 10 ஓவர்களுக்கு 150 ரன்களை எட்டியது ஜிம்பாப்வே அணி.
ஆனால் போகப்போக ருத்ரதாண்டவம் ஆடிய சிக்கந்தர் 7 பவுண்டரிகள் 15 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்டி 43 பந்துகளில் 133 ரன்கள் குவித்து மிரட்ட, 20 ஓவர் முடிவில் 344 ரன்கள் குவித்தது ஜிம்பாப்வே.
ஒரு சர்வதேச டி20 போட்டியில் 314 ரன்கள் அடிக்கப்பட்டதே அதிகபட்ச டோட்டலாக இருந்த நிலையில், 344 ரன்களை குவித்து புதிய உலகசாதனையை தங்கள் பெயரில் எழுதியுள்ளது ஜிம்பாப்வே அணி.
345 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய காம்பியா அணி 54 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 290 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.