இந்திய கிரிக்கெட் அணிக்காக தன்னுடைய மொத்த ஆற்றலை கொடுத்து அபாரமாக பந்துவீசினாலும், இதுவரை உலகக்கோப்பை போட்டிகளில் வாய்ப்பே கிடைக்காமல் இருந்துவரும் ஒரு துரதிருஷ்ட வீரராக யுஸ்வேந்திர சாஹல் இருந்துவருகிறார்.
இப்போதெல்லாம் ஐபிஎல்லில் 4 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுவிட்டால் டி20 உலகக்கோப்பைக்கு தகுதியான வீரர்களாக பல வீரர்கள் இந்திய அணியில் சேர்க்கப்படுகின்றனர். ஆனால் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக (96) அதிக விக்கெட்டுகள், ஐபிஎல் வரலாற்றில் (200*) அதிக விக்கெட்டுகள் என இரண்டு மாபெரும் சாதனைகளை வைத்திருக்கும் யுஸ்வேந்திர சாஹல் ஒரு டி20 உலகக்கோப்பையில் கூட இடம்பெறவில்லை என்ற சம்பவம் இந்திய கிரிக்கெட்டில் மட்டும்தான் நடந்துவருகிறது.
2007-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியால் ஏன் அதற்கு பிறகு ஒரு டி20 உலகக்கோப்பையை கூட வெல்ல முடியவில்லை? 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடர் உலகில் நம்பர் 1 டி20 லீக்காக இருந்துவரும்போதும், எதனால் இந்திய அணியால் டி20 உலகக்கோப்பையை வெல்ல முடியவில்லை? என்ற கேள்விகளுக்கு ஒவ்வொரு முறையும் இந்திய அணி வீரர்கள் தேர்வில் செய்யும் பெரிய தவறே காரணமாக அமைந்துவருகிறது.
எந்த வீரர்களை எடுக்காமல் இந்திய அணி உலகக்கோப்பைக்குள் செல்கிறதோ, அவர்களுடைய இருப்பு இல்லாமல்தான் இந்திய அணி இதுவரை உலகக்கோப்பையில் கோட்டை விட்டு வருகிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய இன்றைய போட்டியில், மும்பை அணி வீரர் முகமது நபியின் விக்கெட்டை கைப்பற்றிய யுஸ்வேந்திர சாஹல் ஐபிஎல் கிரிக்கெட்டில் 200வது விக்கெட்டை பதிவுசெய்தார்.
இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் 200 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் பந்துவீச்சாளர் என்ற இமாலய சாதனையை படைத்தார் யுஸ்வேந்திர சாஹல்.
ஐபிஎல்லில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள்:
1. யுஸ்வேந்திர சாஹல் - 200* விக்கெட்டுகள் - 152 இன்னிங்ஸ்கள்
2. டிவைன் பிராவோ - 183 விக்கெட்டுகள் - 158 இன்னிங்ஸ்கள்
3. பியூவ்ஸ் சாவ்லா - 181* விக்கெட்டுகள் - 184 இன்னிங்ஸ்கள்
4. புவனேஷ் குமார் - 174* விக்கெட்டுகள் - 167 இன்னிங்ஸ்கள்
5. அமித் மிஸ்ரா - 171* விக்கெட்டுகள் - 161 இன்னிங்ஸ்கள்