ஐபிஎல்லுக்குப் பிறகு உலக ரசிகர்களுக்கு விருந்து படைக்கப்போகும் டி20 உலகக்கோப்பை போட்டிகள் தொடங்க இருக்கின்றன. அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெற இருக்கும் இத்தொடர் ஜூன் 2ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்தத் தொடரின் தூதர்களாக ஏற்கெனவே வெஸ்ட் இண்டீஸின் கிறிஸ் கெய்ல் மற்றும் அதிவேக ஓட்டப்பந்தய வீரரான உசைன் போல்ட் ஆகியோர் தூதர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங்கும் தூதராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
இந்த நிலையில், டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற வேண்டிய வீரர்கள் மற்றும் விராட் கோலி, ரோகித் சர்மாவின் எதிர்காலம் குறித்தும் யுவராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், “இந்திய அணியின் மிக முக்கிய வீரர்களில் ஒருவராக சூர்யகுமார் யாதவ் நிச்சயம் இருப்பார். ஏனென்றால், அவர் மிகவும் அருமையாக விளையாடுகிறார். அவரால் வெறும் 15 பந்துகளில் ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிட முடியும். இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வெல்ல வேண்டுமென்றால், அவர் கண்டிப்பாக அணியில் இடம்பெற வேண்டும். பந்துவீச்சை பொறுத்தவரையில் ஜஸ்பிரித் பும்ரா, இந்திய அணிக்கு பலம் சேர்ப்பதாக உள்ளார். யுஸ்வேந்திர சாஹல் உண்மையில் சிறப்பாக பந்துவீசுகிறார். அவரும் அணியில் இடம்பெற வேண்டும்.
அதேபோல அனுபவ வீரர் தினேஷ் கார்த்திக்குக்கும் ஆடும் லெவனில் வாய்ப்பு வழங்கப்படும் என்றால் அணியில் எடுக்கலாம். அப்படி இல்லாதபட்சத்தில் அந்த இடத்தில் இளம் வீரருக்கு வாய்ப்பு வழங்கலாம். ரிஷப் பண்ட் மற்றும் சஞ்சு சாம்சன் நல்ல ஃபார்மில் உள்ளனர். இந்திய அணியில் இந்த தொடரில் ஷிவம் துபேவை நான் பார்க்க விரும்புகிறேன். அவருக்கு அணியில் தொடர் வாய்ப்புகள் இல்லை. இந்த ஐபிஎல் சீசனில் அவர் சிறப்பாக பேட் செய்து வருகிறார். அவர் ஒரு கேம் சேஞ்சர். அவர் அணியில் இடம்பெற வேண்டும்.
வயதாகும்போது உங்களது ஃபார்ம் குறித்து பேசுவதைவிட வயது குறித்தே அதிகம் பேசுவார்கள். விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் சிறந்த வீரர்கள். அவர்கள் எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பதை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். டி20 போட்டிகளில் அதிக அளவில் இளம் வீரர்கள் விளையாட வேண்டும். டி20 போட்டிகளில் இளம் வீரர்கள் அதிகம் விளையாடுவது மூத்த வீரர்கள் மீதான சுமையை குறைக்கும். இந்த டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு அதிக அளவிலான இளம் வீரர்கள் இந்திய அணியில் இடம்பிடிப்பார்கள் என நம்புகிறேன். அது அடுத்த டி20 உலகக் கோப்பை தொடருக்கான அணியை கட்டமைக்க உதவும். அனுபவ வீரர்கள் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடலாம்” எனத் தெரிவித்துள்ளார்.