2024 ஐபிஎல் தொடரானது முக்கியமான கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. ஒவ்வொரு அணிகளும் 4 போட்டிகளை சந்தித்துள்ளதால் விறுவிறுப்பான கட்டத்திற்கு ஐபிஎல் நகர்ந்துள்ளது.
இந்நிலையில் இன்றைய முக்கியமான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லக்னோவில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற LSG அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது.
முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணிக்கு எதிராக அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய குஜராத் பவுலர்கள் 3 ஓவருக்குள்ளாகவே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி நல்ல தொடக்கம் கொடுத்தனர். 3வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த கேப்டன் ராகுல் மற்றும் ஸ்டோய்னிஸ் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
3வது விக்கெட்டுக்கு 73 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்ட இந்த ஜோடியை, கேஎல் ராகுலை 33 ரன்னில் வெளியேற்றி பிரித்துவைத்தார் தர்ஷன் நல்கண்டே. என்ன தான் குஜராத் டைட்டன்ஸ் அணி டைட்டாக பந்துவீசினாலும், இறுதிவரை களத்தில் இருந்த ஸ்டோய்னிஸ் 4 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் விளாசி 58 ரன்கள் அடித்தார். உடன் 3 சிக்சர்களை விளாசிய பூரன் 32 ரன்கள் அடிக்க, 20 ஓவர் முடிவில் 163 ரன்கள் சேர்த்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி.
164 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் அணியில், தொடக்க வீரர்களாக களமிறங்கிய சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் இருவரும் அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். விக்கெட்டையே விட்டுக்கொடுக்காமல் முதல் 6 ஓவருக்கு 54 ரன்கள் சேர்த்த இந்த ஜோடி வலுவான தொடக்கத்தை கொடுத்தது. ஆனால் ஒரு ஸ்லாட்டில் விழுந்த பந்துக்கு சுமாரான ஷாட் ஆடிய சுப்மன் கில் 19 ரன்னில் போல்டாகி வெளியேறினார்.
சுப்மன் கில்லை யாஷ் தக்கூர் வெளியேற்ற, களத்திற்கு வந்த கேன் வில்லியம்சனை 1 ரன்னிலேயே வெளியேற்றிய ரவி பிஸ்னோய் கலக்கிப்போட்டார். உடன் அடுத்த ஓவரில் பந்துவீச வந்த க்ருணால் பாண்டியா நிலைத்து நின்ற சாய்சுதர்சனை வெளியேற்றியது மட்டுமில்லாமல், விக்கெட் கீப்பர் சரத்தையும் வெளியேற்றி ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை எடுத்துவந்து கலக்கிப்போட்டார்.
க்ருணால் பாண்டியா 4 ஓவரில் 11 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்த, விஜய் சங்கர் மற்றும் ராகுல் திவேத்திய முதலிய முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்திய யாஷ் தக்கூர் ஐபிஎல்லில் தனது முதல் 5 விக்கெட்டை பதிவுசெய்து அசத்தினார்.
இறுதிவரை போராடிய திவேத்தியா 30 ரன்கள் அடித்து வெளியேற, போட்டியின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த குஜராத் டைட்டன்ஸ் அணி 130 ரன்கள் மட்டுமே எடுத்தது. 33 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமான வெற்றியை பதிவுசெய்தது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி.