அமெரிக்க அணி தங்கள் முதல் டி20 உலகக் கோப்பை போட்டியில் கனடாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. முதலில் ஆடிய கனடா அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 194 ரன்கள் விளாசியது. மிகவும் கடினமான இலக்காக இருக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், 17.4 ஓவர்களிலேயே அந்த இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெற்றது.
ஆண்ட்ரே கஸ், அரோன் ஜோன்ஸ் கூட்டணி மிகச் சிறப்பாக செயல்பட்டு 131 ரன்கள் குவித்தனர். அதிலும் சூறாவளி ஆட்டம் ஆடிய ஆரோன் ஜோன்ஸ் வெறும் 40 பந்துகளில் 94 ரன்கள் குவித்தார். 4 ஃபோர்கள் அடித்த, 10 சிக்ஸர்கள் பறக்கவிட்டார். இவர்கள் தவிர்த்து டக் அவுட் ஆன ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஸ்டீவன் டெய்லரும் கூட இதே போன்ற அதிரடியான ஆட்டத்தை ஆடக் கூடியவர். போக, கோரி ஆண்டர்சன் போன்ற அனுபவம் வாய்ந்த ஒரு டி20 ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனும் இருக்கிறார்.
இப்படி பலம் வாய்ந்த ஒரு பேட்டிங் யூனிட்டை அந்த அணி கொண்டிருக்கிறது. நிச்சயம் அவர்களால் பாகிஸ்தான் பௌலர்களுக்கு சவால் கொடுக்க முடியும். பந்துவீச்சில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களான சௌரப் நெட்ரவால்கர், ஜஸ்தீப் சிங், ஹர்மீத் சிங் ஆகியோர் அந்த அணிக்கு நம்பிக்கை கொடுப்பார்கள். சொந்த மண்ணில், தங்கள் முதல் போட்டியிலேயே பெரிய இலக்கை சேஸ் செய்து வென்றிருப்பதால் அந்த மொத்த அணியுமே நம்பிக்கையுடனேயே காணப்படுகிறது.
பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரை வழக்கம்போல் ஒரு தெளிவு இல்லாமலேயே இந்தத் தொடருக்குள் நுழைந்திறது. ஷஹீன் அப்ரிடி துணைக் கேப்டன் பதவியை வேண்டாம் என்று சொல்ல, ஓப்பனர் ஸ்லாட்டுக்கு பல வீரர்களை அந்த அணி முயற்சி செய்து பார்த்து எதுவும் வேலைக்காமல் போக, விக்கெட் கீப்பர் ஆசம் கான் இத்தொடருக்கு முன் பெரும் விமர்சனங்களை சந்திக்க, ஆல்ரவுண்டர் இமாத் வசீம் காயமடைய... பாகிஸ்தான் அணிக்கான பஞ்சாயத்துக்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.
போதாததற்கு காலம் காலமாகத் தொடரும் கேப்டன் பாபர் ஆசமின் ஸ்டிரைக் ரேட் பஞ்சாயத்து. இதையெல்லாம் சரிசெய்து அந்த அணி நல்லபடியாக உலகக் கோப்பையைத் தொடங்கவேண்டும்.
அமெரிக்கா: ஸ்டீவன் டெய்லர், மோனான்க் படேல் (கேப்டன்), ஆண்ட்ரே கஸ் (விக்கெட் கீப்பர்), ஆரோன் ஜோன்ஸ், நித்திஷ் குமார், கோரி ஆண்டர்சன், ஹர்மீத் சிங், ஷேட்லி வேன் ஷ்கேல்விக், அலி கான், சௌரப் நெட்ரவால்கர்.
பாகிஸ்தான்: முகமது ரிஸ்வான், பாபர் ஆசம் (கேப்டன்), உஸ்மான் கான், ஃபகர் ஜமான், ஆசம் கான் (விக்கெட் கீப்பர்), இஃப்திகார் அஹமது, ஷதாப் கான், ஷஹீன் அஃப்ரிடி, ஹாரிஸ் ராஃப், முகமது அமீர், அப்ரார் அஹமது.
அமெரிக்கா - கோரி ஆண்டர்சன்: பாகிஸ்தான் போன்ற ஒரு பெரிய அணிக்கு எதிராக அனுபவம் என்பது மிக மிக மிக முக்கியம். கோரி ஆண்டர்சனால் அமெரிக்க அணிக்கு அந்த அனுபவத்தைக் கொடுக்க முடியும். பேட்டிங், பௌலிங் இரண்டிலுமே தனிப்பட்ட முறையிலும் அவரால் பங்களிக்க முடியும்.
பாகிஸ்தான் - பாபர் ஆசம்: கேப்டனாகவும் சரி, பேட்ஸ்மேனாகவும் சரி பாபர் ஆசம் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தன் மீதான விமர்சனங்களுக்கும் அவர் பதில் கொடுக்க வேண்டிய தேவை இருக்கிறது.
கணிப்பு: எல்லாம் சரியாகப் போகும் பட்சத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெறவேண்டும்.