ஹர்திக் பாண்டியாவை மும்பை அணிக்கு அழைத்துவரும் மும்பை அணி நிர்வாகத்தின் ஒரேயொரு முடிவு, 2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இரண்டு அணிகளையும் அழிவின் பாதைக்கு அழைத்துச்சென்றுள்ளது. தலைசிறந்த வீரர்கள் இருந்தும் மும்பை இந்தியன்ஸ் அணியால் பிளே ஆஃப்க்கான தங்களுடைய வாய்ப்பை தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை.
மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டன்சி மாற்றம் என்பது சொந்த அணிக்குள்ளாகவே இரண்டு குழுக்களாக பிரியும் நிலைக்கு சென்று, தற்போது சிறந்த வீரர்கள் இருந்தும் சொதப்பும் நிலைக்கு சென்றுள்ளது. அடுத்த ஐபிஎல் தொடரிலாவது அனைத்து பிரச்னைகளையும் கலைந்து மீண்டும் சிறந்த அணியாக மும்பை திரும்ப வேண்டும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் இருந்துவருகிறது.
இந்நிலையில், 2024 ஐபிஎல் தொடரில் அதிக போட்டிகளில் விளையாடி குறைவான வெற்றிகளை பெற்றுள்ள போதும், இன்னும் அதிகாரப்பூர்வமாக மும்பை இந்தியன்ஸ் அணி வெளியேறாமல் இருந்துவருகிறது. இன்று நடக்கவிருக்கும் சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையேயான மோதலின் முடிவுக்கு பிறகு, மும்பை இந்தியன்ஸ் அதிகாரப்பூர்வமாக வெளியேறும் என கூறப்படுகிறது.
சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சூர்யகுமார் யாதவின் அபாரமான சதத்தின் உதவியால் தங்களுடைய 4வது வெற்றியை பதிவுசெய்தது மும்பை இந்தியன்ஸ் அணி. அதன்மூலம் 12 போட்டிகளில் விளையாடி 8 போட்டிகளில் தோல்வி, 4 போட்டிகளில் வெற்றி என 8 புள்ளிகளுடன் 9வது இடத்தில் நீடிக்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி.
வெற்றிக்கு பிறகு பேசிய ஹர்திக் பாண்டியா பிளே ஆஃப் செல்வதற்கு எந்த வாய்ப்பும் இருப்பதாக தெரியவில்லை என்ற விரக்தியில் பேசினார். அப்போது பேசிய அவர், “பிளேஆஃப் செல்வது குறித்து பேசுவதற்கு எந்தவிதமான கணித வாய்ப்பும் எங்களுக்கு இருப்பதாக எனக்கு தெரியவில்லை, அதேநேரத்தில் மீதமிருக்கும் போட்டிகளில் வெற்றிபெற்று நல்ல கிரிக்கெட்டை இளையாட விரும்புகிறோம்” என்று பேசினார்.
அதிக போட்டிகளில் விளையாடி குறைவான போட்டிகளில் வென்றிருந்தாலும் இன்னும் அதிகாரப்பூர்வமாக மும்பை இந்தியன்ஸ் அணி வெளியேறவில்லை. இன்றைய SRH vs LSG மோதலுக்கு பிறகு 2024 ஐபிஎல் தொடரிலிருந்து முதல் அணியாக மும்பை இந்தியன்ஸ் வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது.
எப்படி மும்பை அணி வெளியேறும்..
* சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தினால் மும்பை இந்தியன்ஸ் முதல் அணியாக நாக் அவுட் ஆகிவிடும்.
* ஏற்கனவே ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகள் 16 புள்ளிகள் பெற்றுள்ள நிலையில், இன்றைய போட்டியில் SRH அணி LSG அணியை வீழ்த்தினால், பாட் கம்மின்ஸ் தலைமையிலான அணி 14 புள்ளிகள் வரை உயரும். ஹர்திக் பாண்டியா தலைமையிலான அணி 12 ஆட்டங்களில் விளையாடி 8 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளதால், டாப்பில் உள்ள மூன்று அணிகளையும் முந்த முடியாது.
* அதேநேரத்தில் மீதமிருக்கும் இரண்டு போட்டிகளில் மும்பை அணி வெற்றிபெற்றாலும், அவர்களால் 12 புள்ளிகள் மட்டுமே பெறமுடியும்.
* இதற்கிடையில், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய இரு அணிகளும் 12 புள்ளிகளுடன் 64வது போட்டியில் நேருக்கு நேர் மோதும் நிலைக்கு செல்லும். அப்போது இரு அணிகளில் ஒன்று 12 புள்ளிகளுடன் முடிக்கும் போது, அவர்களையும் மும்பை அணியால் முந்த முடியாது. இதனால் இன்றைய போட்டியின் முடிவிலேயே மும்பை அணி வெளியேறிவிடும் என கூறப்படுகிறது.