போட்டி எண் 43 (சூப்பர் 8): இந்தியா vs ஆப்கானிஸ்தான்
மைதானம்: கென்சிங்டன் ஓவல், பிரிட்ஜ்டவுன், பார்படாஸ்
போட்டி தொடங்கும் நேரம்: ஜூன் 20, இந்திய நேரப்படி மதியம் 8 மணிக்கு
போட்டிகள் - 4, வெற்றிகள் - 3, தோல்வி - 0, முடிவு இல்லை - 1
சிறந்த பேட்ஸ்மேன்: ரிஷப் பண்ட் - 3
இன்னிங்ஸ்களில் 96 ரன்கள்
சிறந்த பௌலர்: ஹர்திக் பாண்டியா - 3 போட்டிகளில் 7 விக்கெட்டுகள்
அயர்லாந்துக்கு எதிராக 8 விக்கெட்டுகளில் வெற்றி பெற்று இத்தொடரைத் தொடங்கிய இந்தியா, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியை 6 ரன்களில் வீழ்த்தி அசத்தியது. அமெரிக்காவை 7 விக்கெட்டுகளில் வீழ்த்திய ரோஹித் அண்ட் கோ சூப்பர் 8 இடத்தை உறுதி செய்தது. கனடாவுக்கு எதிரான கடைசிப் போட்டி மழையால் கைவிடப்பட்டது. பல பெரிய அணிகள் இந்த உலகக் கோப்பையில் சற்று அடிவாங்கியிருந்தாலும், இந்தியா இந்த உலகக் கோப்பையை சிறப்பாக கையாண்டு கொண்டிருக்கிறது. ஆடுகளத்துக்கும் சூழ்நிலைகளுக்கும் ஏற்ப வீரர்கள் போட்டியை அணுகுகிறார்கள். அதுவே இந்திய அணி கடினமான சூழ்நிலைகளைக் கடந்து வர உதவுகிறது.
போட்டிகள் - 4, வெற்றிகள் - 3, தோல்வி - 1, முடிவு இல்லை - 0
சிறந்த பேட்ஸ்மேன்: ரஹ்மானுல்லா குர்பாஸ் - 4 இன்னிங்ஸ்களில் 167 ரன்கள்
சிறந்த பௌலர்: ஃபசல்ஹக் ஃபரூக்கி - 4 போட்டிகளில் 12 விக்கெட்டுகள்
தங்கள் முதல் போட்டியில் உகாண்டாவைப் போட்டுப் புரட்டி 125 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றது ஆப்கானிஸ்தான். அடுத்த போட்டியில் நியூசிலாந்தை 84 ரன்களில் வீழ்த்தி பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. பாபுவா நியூ கினீ அணிக்கெதிராக 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சூப்பர் 8 வாய்ப்பை உறுதி செய்தது. சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த அணி வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராகத் தடுமாறி 104 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
இந்த உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு வெஸ்ட் இண்டீஸில் இதுதான் முதல் போட்டி. மாறும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப இந்திய அணியில் மாற்றம் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இங்கு ஆடுகளங்களுக்கு ஸ்பின்னுக்கு கூடுதல் சாதகமாக இருக்கும் என்பதால், இந்திய அணி ஒரு வேகப்பந்துவீச்சாளருக்குப் பதிலாக ஸ்பின்னர் குல்தீப் யாதவை களமிறக்கலாம். அந்த வேகப்பந்துவீச்சாளர் யாராக இருப்பார் என்பது பெரிய கேள்வி. முன்பாக இருந்திருந்தால் நிச்சயம் ஆர்ஷ்தீப்புக்கு பதிலாக குல்தீப்பை எடுத்துவந்திருப்பார்கள். ஆனால் அவர் இப்போது 7 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியிருக்கிறார். ஆனால் சிராஜ் 1 விக்கெட் மட்டுமே எடுத்திருக்கிறார். இடது கை வேகப்பந்துவீச்சு தேவைப்படும் என்பதால் சிராஜை தூக்கிவிட்டு குல்தீப்பைக் கொண்டுவரலாம்.
இந்த மாற்றங்களை விடவெல்லாம் இந்திய ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்பது கோலியின் ஃபார்ம் மாற்றமாகத்தான் இருக்கும். அமெரிக்காவில் தடுமாறிவிட்ட கோலி நிச்சயம் வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளங்களில் இந்தியாவுக்குப் பெரிய தாக்கம் ஏற்படுத்துவார். அதேபோல் அதிகம் ஸ்பின் பயன்படுத்தப்படும் இந்த ஆடுகளங்களில் ஷிவம் தூபேவும் மிகமுக்கிய ஆளாக இருப்பார்.
ஆப்கானிஸ்தான் அணியில் ஒருசில வீரர்கள் சிறப்பாக ஜொலித்திருக்கிறார்கள். இந்த உலகக் கோப்பையின் டாப் விக்கெட் டேக்கர் (ஃபரூக்கி), டாப் ரன்ஸ்கோரர் (குர்பாஸ்) இந்த அணியினர் தான். போக, இப்ராஹிம் ஜத்ரான், நவீன் உல் ஹக், கேப்டன் ரஷீத் கான் எல்லோருமே நன்றாக செயல்பட்டு வருகிறார்கள். அந்த ஸ்டார்கள் நல்ல செயல்பாட்டைக் கொடுத்தால் அந்த அணியால் இந்தியாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க முடியும்.
இந்தியா: ரோஹித் ஷர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ஷிவம் தூபே, ஹர்திக் பாண்டியா, அக்ஷர் படேல், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரித் பும்ரா, குல்தீப் யாதவ், ஆர்ஷ்தீப் சிங்.
ஆப்கானிஸ்தான்: ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இப்ராஹிம் ஜத்ரான், குல்பதீன் நைப், அஸ்மத்துல்லா ஓமர்சாய், நஜிபுல்லா ஜத்ரான், முகமது நபி, கரீம் ஜனத், ரஷீத் கான் (கேப்டன்), நூர் அஹமது, நவீன் உல் ஹக், ஃபசல்ஹக் ஃபரூக்கி.
இந்தியா - விராட் கோலி: டி20 உலகக் கோப்பை வரலாற்றின் டாப் ஸ்கோரர் இந்த உலகக் கோப்பையில் வைத்திருக்கும் சராசரி 1.66! அமெரிக்காவில் நடந்த 3 போட்டிகளில் சேர்த்து வெறும் 5 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார் விராட். வெஸ்ட் இண்டீஸுக்கு உலகக் கோப்பை மாறியிருப்பது, அவர் ஃபார்மிலும் மாற்றம் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கலாம்.
ஆப்கானிஸ்தான் - ஃபசல்ஹக் ஃபரூக்கி: இந்த உலகக் கோப்பையின் டாப் விக்கெட் டேக்கர் இந்திய டாப் ஆர்டருக்கு பெரும் தலைவலியாக இருக்கலாம். இடது கை பேஸர்களுக்கு எதிராக இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தடுமாறுவார்கள் என்பதால் ஃபரூக்கி ஆப்கானிஸ்தானின் துருப்புச் சீட்டாக இருப்பார்.
இந்திய அணி சூப்பர் 8 சுற்றை வெற்றியோடு தொடங்கும்.