சூப்பர் 8 சுற்றில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்துமே அமெரிக்கா? தென்னாப்பிரிக்காவுடன் மோதல்..!

முதல் போட்டியில் கனடாவுக்கு எதிராக 195 ரன்களை சேஸ் செய்து வென்று அசத்திய அமெரிக்க அணி, அதன்பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக டை செய்து சூப்பர் ஓவரையும் வென்றது.
david Miller
david Miller Adam Hunger
Published on
போட்டி எண் 41 (சூப்பர் 8): தென்னாப்பிரிக்கா vs அமெரிக்கா
மைதானம்: சர் விவியன் ரிச்சர்ட்ஸ், நார்த் சவுண்ட், ஆன்டிகுவா
போட்டி தொடங்கும் நேரம்: ஜூன் 19, இந்திய நேரப்படி இரவு 8 மணி

இந்த உலகக் கோப்பையில் இதுவரை:

தென்னாப்பிரிக்கா: போட்டிகள் - 4, வெற்றிகள் - 4, தோல்வி - 0
சிறந்த பேட்ஸ்மேன்: டேவிட் மில்லர் - 4 இன்னிங்ஸ்களில் 101 ரன்கள்
சிறந்த பௌலர்: ஆன்ரிக் நார்கியா - 4 போட்டிகளில் 9 விக்கெட்டுகள்
இந்தத் தொடரில் 4 போட்டிகளையும் வென்று கம்பீரமாக சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்திருக்கிறது தென்னாப்பிரிக்கா. ஆனால் போட்டிகளை கம்பீரமாக வென்றதா என்றால் நிச்சயம் இல்லை. நெதர்லாந்துக்கு எதிராக மற்றுமொரு உலகக் கோப்பை தோல்வி கிடைத்திருக்கும். அதைத் தன் மாஸ்டர் கிளாஸால் தடுத்தார் மில்லர். வங்கதேசத்துக்கு எதிராக நான்கே ரன்களில் வெற்றி, நேபாளத்துக்கு எதிராகவே ஒரே ரன்னில் வெற்றி... இப்படித் தட்டுத்தடுமாறி தான் ஒவ்வொரு போட்டியையும் அந்த அணி வென்றிருக்கிறது. ஆனால் கடினமான சூழ்நிலைகளை சந்தித்து வென்று வந்திருப்பது கூடுதல் நம்பிக்கையும் கொடுக்கலாம்.

அமெரிக்கா: போட்டிகள் - 4, வெற்றிகள் - 1, தோல்வி - 1, டை - 1, முடிவு இல்லை - 1
சிறந்த பேட்ஸ்மேன்: ஆரோன் ஜோன்ஸ் - 3 இன்னிங்ஸ்களில் 141 ரன்கள்
சிறந்த பௌலர்: சௌரப் நெட்ரவால்கர் - 3 போட்டிகளில் 4 விக்கெட்டுகள்
ஒரு தொடரில் எவ்வித முடிவுகள் எல்லாம் கிடைக்குமோ அது அனைத்துமே அமெரிக்காவுக்குக் கிடைத்திருக்கிறது. முதல் போட்டியில் கனடாவுக்கு எதிராக 195 ரன்களை சேஸ் செய்து வென்று அசத்திய அமெரிக்க அணி, அதன்பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக டை செய்து சூப்பர் ஓவரையும் வென்றது. இந்தியாவுக்கு எதிராக நன்றாகத் தொடங்கியவர்கள் அதன்பிறகு வாய்ப்பை நழுவவிட்டனர். அயர்லாந்துக்கு எதிரான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.

வெஸ்ட் இண்டீஸில் வித்தையைக் காட்டுமா தென்னாப்பிரிக்கா

அமெரிக்க அணி தங்கள் சொந்த மண்ணில் அந்த சூழ்நிலைகளைப் பயன்படுத்தி நன்றாக விளையாடியது. இப்போது சூப்பர் 8 சுற்று வெஸ்ட் இண்டீஸில் நடக்கப்போகிறது. இந்த ஆடுகளங்கள் அவர்களுக்கு மிகப் பெரிய சவாலை ஏற்படுத்தும். போக, வானிலையும் வித்தியாசமாக இருக்கும். அந்த கடினமான சூழ்நிலைகளுக்கு அவர்கள் தங்களை தகவமைத்துக்கொள்வார்களா என்பது தான் அவர்களுக்கு முன் இருக்கும் மிகப் பெரிய கேள்வி. பலமான தென்னாப்பிரிக்க பௌலிங்குக்கு எதிராக அவர்கள் பேட்டிங் எந்த அளவுக்கு எழுச்சி காணும் என்பது தான் அடுத்த கேள்வி. அவர்கள் பேட்டிங் முன்பு காட்டியதுபோல் தைரியமான அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் நிச்சயம் அவர்களாலும் ஏதாவது அதிர்ச்சியை ஏற்படுத்தலாம். காயத்தால் இந்தியாவுக்கு எதிராக ஆடாமல் இருந்த கேப்டன் மோனாங்க் படேல் அணியில் இணைந்தால் கூடுதல் பலம்.

தென்னாப்பிரிக்க அணியைப் பொறுத்தவரை அவர்கள் தங்கள் பேட்டிங்கை மெறுகேற்றியாகவேண்டும். குறிப்பாக அவர்களின் டாப் ஆர்டர் சோபிக்கத் தவறுகிறது. கடைசியில் மில்லர், கிளாசன், ஸ்டப்ஸ் ஆகியோரையே நம்பவேண்டியதாக இருக்கிறது. ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் பெரிதாக சோபிக்காததால் ஓப்பனிங்கில் ரயன் ரிக்கில்டனை முயற்சி செய்துபார்க்கலாம். ஆடுகளம் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்று கருதினால் ஒரு வேகப்பந்துவீச்சாளருக்குப் பதில் மீண்டும் கேஷவ் மஹராஜை அணியில் கொண்டுவரலாம்.

பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்

தென்னாப்பிரிக்கா: ரயன் ரிக்கில்டன், குவின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), எய்டன் மார்க்ரம் (கேப்டன்), ஹெய்ன்ரிக் கிளாசன், டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், மார்கோ யான்சன், ககிஸோ ரபாடா, ஆன்ரிக் நார்கியா, ஓட்னீல் பார்ட்மேன், தப்ராய்ஸ் ஷம்ஸி.

அமெரிக்கா: ஸ்டீவன் டெய்லர், மோனான்க் படேல் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரே கஸ், ஆரோன் ஜோன்ஸ், நித்திஷ் குமார், கோரி ஆண்டர்சன், ஹர்மீத் சிங், ஜஸ்தீப் சிங், நாஷ்தூஷ் கெஞ்சிகே, சௌரப் நெட்ரவால்கர், அலி கான்.

கவனிக்கப்படவேண்டிய வீரர்கள்:

தென்னாப்பிரிக்கா - தப்ராய்ஸ் ஷம்ஸி: அணிக்குத் திரும்பிய முதல் போட்டியிலேயே 4 விக்கெட்டுகள் எடுத்து தன் திறமையை நிரூபித்திருக்கிறார் ஷம்ஸி. நேபாளை காலி செய்தவர், அமெரிக்காவுக்கு பெரும் சவாலாக இருப்பார்கள்.

அமெரிக்கா - ஆரோன் ஜோன்ஸ்: பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்க பௌலிங்குக்கு எதிராக் ஆரோன் ஜோன்ஸ் தன் தரமான ஆட்டத்தைத் தொடரவேண்டும். அப்போதுதான் அமெரிக்க அணிக்கு நம்பிக்கை கிடைக்கும்.

கணிப்பு: தென்னாப்பிரிக்கா தங்கள் வெற்றிப் பயணத்தைத் தொடரவேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com