இந்திய அணிக்கு இந்தத் தொடரில் இதுவே முதல் போட்டி என்பதால், ஓப்பனர் தொடங்கி நம்பர் 11 வரை பல்வேறு கேள்விகள் விடை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன. முதலில் ஓப்பனருக்கான கேள்வி மிகப் பெரியது. கேப்டன் ரோஹித் ஷர்மாவோடு இறங்கப்போவது விராட் கோலியா, யஷஷ்வி ஜெய்ஸ்வாலா என்ற கேள்விக்கு பதில் கிடைப்பது எளிதானதல்ல. யஷஷ்வி ஜெய்ஸ்வால் இந்த காலகட்டத்துக்கு ஏற்ப அதிரடியான தொடக்கம் கொடுப்பார். போக, வலது - இடது காம்பினேஷனும் கிடைக்கும்.
அதேசமயம் விராட் கோலி மூன்றாவது வீரராக ஆடுவதை விட, ஓப்பனராக இன்னும் சிறப்பாக ஆடுகிறார். இந்த ஐபிஎல் தொடரில் ஆரஞ்ச் கேப் வென்று அசத்தியிருக்கிறார். தன் மீது இருந்த ஸ்டிரைக் ரேட் விமர்சனங்களுக்கு பதில் சொல்லியிருக்கிறார். ஸ்பின்னுக்கு எதிராகவும் நன்றாக ஆடுகிறார். அதனால் கோலியை எங்கு களமிறக்குவது என்பதில் முடிவு எடுப்பது அணிக்குக் கடினமான விஷயம் தான்.
ஒருவேளை கோலி ஓப்பனராக ஆடும்பட்சத்தில், சூர்யகுமார் (@3), ரிஷப் பண்ட் (@4), ஹர்திக் பாண்டியா (@6) தவிர்த்து மிடில் ஆர்டரில் ஒரு ஸ்லாட் காலியாக இருக்கும். அந்த இடத்துக்கு ஷிவம் தூபே அல்லது சஞ்சு சாம்சன் ஆகியோரில் ஒருவர் விளையாடவேண்டும். இடது கை பேட்ஸ்மேன் என்பதாலும், மிடில் ஆர்டரில் சாம்சனை விட நல்ல ஆப்ஷன் என்பதாகவும் தூபேவுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கலாம். கோலி மூன்றாவது வீரராக ஆடினால், சூர்யா நான்காவது பேட்ஸ்மேனாகவும், பண்ட் ஐந்தாவது வீரராகவும் விளையாடவேண்டிய நிலை ஏற்படலாம். அது அவர்கள் இருவரையுமே அவர்களின் சிறந்த ஸ்லாட்டில் ஆட விடாமல் செய்யும். அதனால், கோலி ஓப்பனராகவும் துபே ஐந்தாவது இடத்தில் ஆடுவதுமே சரியானதாக இருக்கும்.
கடைசி 5 இடங்களைப் பொறுத்தவரை ஜடேஜா, பும்ரா, குல்தீப் ஆகியோர் விளையாடுவது உறுதி. இரண்டாவது வேகப்பந்துவீச்சாளருக்கான இடத்துக்கு எப்படியும் சிராஜை தேர்வு செய்வார்கள். அந்த மூன்றாவது பௌலர் இடத்துக்கு இந்திய அணி வேகப்பந்துவீச்சாளரோடு போகப் போகிறதா இல்லை இன்னொரு ஸ்பின்னரைத் தேர்வு செய்யப்போகிறதா என்பது தான் கேள்வி. அப்படி ஸ்பின்னரைத் தேர்வு செய்தாலும், கூடுதல் பேட்டிங் ஆப்ஷன் கொடுக்கும் அக்ஷர் படேலை டிக் செய்வார்களே, இல்லை லெக் ஸ்பின் ஆப்ஷன் கிடைக்கும் சஹாலுக்கு அந்த வாய்ப்பு கொடுப்பார்களா தெரியவில்லை. இப்படி ஒருசில முக்கியக் கேள்விகளுக்கு இந்திய அணி பதில் கொடுக்கவேண்டிய அவசியம் இருக்கிறது.
அயர்லாந்து அணியைப் பொறுத்தவரை அவர்கள் ஓப்பனர்கள் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. அனுபவம் வாய்ந்த ஏண்டி பில்பிர்னி, கேப்டன் பால் ஸ்டிர்லிங் ஜோடி அதிரடியான தொடக்கம் கொடுக்கக்கூடியது. சிராஜ், ஆர்ஷ்தீப் இருவரும் அவ்வளவு சிறந்த ஃபார்மில் இல்லாததால் அவர்களை இவர்களால் நன்கு அட்டாக் செய்ய முடியும்.
இவர்களுக்குப் பிறகு வரும் லோர்சன் டக்கர், ஹேரி டெக்டர் ஆகியோரும் சமீபமாக நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள். அதனால் அவர்களின் டாப் ஆர்டர் சரியாக செயல்பட்டால் இந்தியாவுக்கு அவர்களால் சவால் கொடுக்க முடியும்.
இந்தியா: ரோஹித் ஷர்மா (கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஷிவம் தூபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஆர்ஷ்தீப் சிங், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ்.
அயர்லாந்து: பால் ஸ்டிர்லிங் (கேப்டன்), ஏண்டி பால்பிர்னி, லோர்சன் டக்கர், ஹேரி டெக்டர், கர்டிஸ் கேம்ஃபர், ஜார்ஜ் டாக்ரெல், கேரத் டெலேனி, மார்க் அடெய்ர், பேரி மெக்கார்தி, ஜாஷ் லிட்டில், கிரெய்க் யங்.
இந்தியா - ஹர்திக் பாண்டியா: ஐபிஎல் தொடரில் பெரும் விமர்சனங்களை சந்தித்த இந்திய அணியின் துணைக் கேப்டன் மீது இப்போது அதிக எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. வங்கதேசத்துக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்து அசத்தினார் அவர். முழு வீச்சில் பந்துவீச்சிலும் அசத்தினால் நிச்சயம் இந்திய ரசிகர்கள் கொண்டாடிய ஹர்திக்கை முழுமையாகப் பார்க்க முடியும்.
அயர்லாந்து - பால் ஸ்டிர்லிங்: தன் அதிரடி ஆட்டத்தால் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர். எதிரணி பற்றியோ, எதிரணி பௌலர்களைப் பற்றியோ பெரிதாகக் கவலை கொள்ளாமல் அவரால் பேட்டிங் செய்ய முடியும். பும்ராவையே கூட முதல் பந்திலிருந்து அவரால் டார்கெட் செய்ய முடியும்.
கணிப்பு: இந்தியா நிச்சயம் வெற்றியுடன் இந்த உலகக் கோப்பையைத் தொடங்கும்