யாரும் எதிர்பாராத வகையில் 17.5 கோடி ரூபாய் கொடுத்து கேமரூன் கிரீனை மும்பை இந்தியன்ஸ் அணியிடமிருந்து வாங்கியிருக்கிறது. இது அவர்களின் இருப்புத் தொகையை பெருமளவு குறைத்திருக்கிறது. இருந்தாலும் முதல் முறையாக இரண்டு உலகத்தர ஆல்ரவுண்டர்கள் ஆர்சிபி-யின் டாப் ஆர்டரில் இருக்கிறார்கள் என்பது நிச்சயம் அவர்களுக்கு சாதகமான அம்சம். அதுமட்டுமல்லாமல் இடது கை ஸ்பின் வீசும் ஆல்ரவுண்டர் ஷபாஸ் அஹமதுவரை சன்ரைசர்ஸுக்கு கொடுத்துவிட்டு, அதே மாதிரி வீரரான மயாங்க் டாகரை டிரேட் செய்திருக்கிறது ராயல் சேலஞ்சர்ஸ்.
தங்கள் பௌலிங் யூனிட்டை ஒட்டுமொத்தமாக கழட்டிவிட்டிருக்கிறது பெங்களூரு. ஹர்ஷல் படேல், ஜாஷ் ஹேசில்வுட், டேவிட் வில்லி, சித்தார்த் கௌல், வெய்ன் பார்னெல் என வேகப்பந்துவீச்சாளர்களை மொத்தமாக ரிலீஸ் செய்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் கடந்து சீசனில் பெரும் தொகை கொடுத்து வாங்கிய இலங்கை சுழற்பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்காவுக்கும் குட்பை சொல்லியிருக்கிறார்கள் ஆர்சிபி அணியினர். அதுபோக ஃபின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல் போன்ற வெளிநாட்டு வீரர்களையும் வெளியே அனுப்பியிருக்கிறார்கள்
ரிலீஸ் செய்யப்பட்ட வீரர்கள் - 11
ரீடெய்ன் செய்யப்பட்ட வீரர்கள் - 19
நிரப்பவேண்டிய மொத்த ஸ்லாட்கள் - 6
நிரப்பவேண்டிய வெளிநாட்டு ஸ்லாட்கள் - 3
ஏலத்துக்கு மீதமிருக்கும் தொகை - 23.25 கோடி ரூபாய்
1. ஃபாஃப் டுப்ளெஸி*
2. விராட் கோலி
3. ரஜத் படிதார்
4. கிளென் மேக்ஸ்வெல்*
5. கேமரூன் கிரீன்*
6. தினேஷ் கார்த்திக்
7. அனுஜ் ராவத்
8. ரீஸ் டாப்லி*
9.
10.
11. முகமது சிராஜ்
இம்பேக்ட் பிளேயர்: சூயாஷ் பிரபுதேசாய் / வைசாக் விஜயகுமார்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நிச்சயம் ஒரு வெளிநாட்டு பௌலரை பெரும் தொகை கொடுத்து வாங்கும். ஒன்று மீண்டும் வனிந்து ஹசரங்காவை குறைந்த விலைக்கு எடுக்க முயற்சி செய்யலாம். அப்படி இல்லையெனில், முன்னணி வெளிநாட்டு பௌலரை பெரிய தொகைக்கு வாங்கலாம். தங்கள் முன்னாள் வேகப்பந்துவீச்சு ஆயுதமான மிட்செல் ஸ்டார்க்கை அவர்கள் டார்கெட் செய்யலாம். ஆனால், பெரும் தொகை இருக்கும் பல அணிகள் அவரை வாங்க முயற்சிக்கும் என்பதால் அவர்கள் ஸ்டார்க்கை வாங்குவது கடினமே. பேட் கம்மின்ஸ், கிறிஸ் வோக்ஸ், லாகி ஃபெர்குசன் போன்ற வீரர்களைக்கூட ஆர்சிபி தங்கள் பட்டியலில் வைத்திருக்கும்.
ஏற்கெனவே டுப்ளெஸி, மேக்ஸ்வெல், கிரீன் என 3 வெளிநாட்டு ஸ்லாட்கள் பிளேயிங் லெவனில் நிரப்பப்பட்டுவிடும் என்பதால், பந்துவீச்சில் அவர்களால் ஒரு வெளிநாட்டு வீரரையே களமிறக்க முடியும். அதனால் இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள், ஸ்பின்னர்களையும் கூட அந்த அணி வாங்கவே நினைக்கும். கார்த்திக் தியாகி, சேத்தன் சகாரிய போன்ற வேகப்பந்துவீச்சாளர்களை வாங்கினாலும் அந்த அணியின் பந்துவீச்சு யூனிட் பலமடையும்.
இவர்கள் போக, நம்பர் 7 பேட்டிங் ஸ்லாட்டையும் அவர்கள் பலப்படுத்த முயற்சி செய்யலாம். அனூஜ் ராவத், மஹிபால் லொம்ரோர் போன்றவர்கள் பெரிய தாக்கம் எதுவும் ஏற்படுத்திவிடவில்லை. அதனால் கடைசி கட்டத்தில் பணம் மீதமிருக்கும் பட்சத்தில் அவர்கள் கவனம் இந்தப் பக்கமும் திரும்பலாம்.
ஹசரங்கா, ஹர்ஷல் ஆகியோரை ரிலீஸ் செய்ததைப் போல் மைக்கேல் பிரேஸ்வெல்லை அவர்கள் ரிலீஸ் செய்ததும் ஆச்சர்யமாகவே இருக்கிறது. கிளென் மேக்ஸ்வெல்லுக்கு அவர் மிகச் சிறந்த பேக் அப் வீரராக இருப்பார். இத்தனைக்கும் அவரை அந்த அணி 1 கோடி ரூபாய்க்குத்தான் ஒப்பந்தம் செய்திருந்தது. இப்போது அந்த இடத்தையும் அவர்கள் இந்த ஏலத்தில் நிரப்பவேண்டும். ஆனால் பிரேஸ்வெல் போன்ற ஒரு வீரர் ஒரு கோடிக்கெல்லாம் கிடைப்பது கடினம் தான்.