வருகின்ற ஐபிஎல் தொடருக்கான ஏலம் வரும் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடக்கிறது. 3 ஆண்டுகளுக்குப் பின் நடக்கும் மெகா ஏலம் என்பதால் இதன்மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த ஏலத்தில் ஒவ்வொரு அணியின் திட்டமும் எப்படி இருக்கவேண்டும் என்று பார்த்துக்கொண்டிருக்கிறோம். இந்தக் கட்டுரையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் திட்டம் எப்படி இருக்கவேண்டும் என்று அலசுவோம்.
ராஜஸ்தான் ராயல்ஸ் யாரும் எதிர்பாராத வகையில் 6 வீரர்களை ரீடெய்ன் செய்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சஞ்சு சாம்சன், யஷஷ்வி ஜெய்ஸ்வால் இருவரும் தலா 18 கோடி ரூபாய்க்கு தக்கவைக்கப்பட்டனர். துருவ் ஜுரெல், ரியான் பராக் இருவருக்கும் தலா 14 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டது. ஷிம்ரான் ஹெட்மேயர் 11 கோடி ரூபாக்கு தக்கவைக்கப்பட்டார். கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வதேச கிரிக்கெட்டில் ஆடாததால் சந்தீப் ஷர்மா அன்கேப்ட் வீரராக 4 கோடிக்கே தக்கவைக்கப்பட்டார். இதற்காக மொத்தம் 79 கோடி ரூபாய் செலவளித்திருக்கிறது அந்த அணி. ஜுரெல், ஹெட்மெயர், பராக் ஆகியோரை தக்கவைக்க அந்த அணி 39 கோடி ரூபாய் செலவளித்திருக்கிறது. அவர்களை நிச்சயம் அதற்குக் குறைவான தொகைக்கே அவர்களால் பெற்றிருக்க முடியும். அதனால் தான் அவர்களின் முடிவைப் புரிந்துகொள்வது கடினமாக இருக்கிறது. இப்போது அவர்கள் வெறும் 41 கோடி ரூபாயோடு ஏலத்தில் பங்கேற்கவேண்டும். குறைந்த தொகையோடு ஏலத்தில் பங்கேற்கப்போவது அவர்கள் தான். கையில் RTM கார்டும் இல்லை.
இந்த தக்கவைத்த வீரர்களின் பட்டியலைப் பார்க்கும்போது சந்தீப் ஷர்மா தவிர எல்லோருமே பேட்ஸ்மேன்கள். 5 பேட்ஸ்மேன்களை தக்கவைத்திருக்கிறார்கள். அதனால் பௌலிங் குழுவை அமைப்பதுதான் ஏலத்தில் அவர்களின் பிரதான தேவையாக இருக்கப்போகிறது. 41 கோடியே மீதமிருப்பதால் அவர்கள் அதிகபட்சமாக ஒரு இரண்டு வீரர்களுக்கு 20 கோடி ரூபாயை ஒதுக்கலாம். மற்ற இடங்களுக்கு குறைவான தொகையில் தரமான வீரர்களைப் பெற முயற்சி செய்யவேண்டும்.
அந்த 2 பெரிய முதலீடுகளில் ஒன்று சஹாலுக்கு இருக்கவேண்டும். ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவரான சஹால் ராயல்ஸுக்கும் பெரிய மேட்ச் வின்னராக இருந்திருக்கிறார். அதனால் அவரை மீண்டும் அணிக்குக் கொண்டுவர விரும்புவார்கள். அந்த இரண்டாவது பெரிய முதலீடு நம்பர் 7 வீரருக்காக இருக்கவேண்டும். பல ஆண்டுகளாக அந்த இடத்தில் ஆட ஒரு தரமான ஆல்ரவுண்டர் இல்லாமல் தடுமாறியிருக்கிறது ராயல்ஸ். அதை அவர்கள் இம்முறையாவது சரிசெய்யவேண்டும். அதனால் ஒரு யான்சனையோ அல்லது சாம் கரனையோ வாங்குவது நல்ல முடிவாக இருக்கும். யான்சனால் அப்படியே போல்ட் செய்த வேலையை செய்ய முடியும். பவர்பிளேவில் சிறப்பாகப் போடுவார். அதுமட்டுமல்லாமல் இப்போது அவர் பேட்டிங் செய்யும் விதத்தைப் பார்க்கும்போது நிச்சயம் அவரை நல்ல ஃபினிஷராகவும் பயன்படுத்த முடியும்.
அந்த அணிக்கு இருக்கும் இன்னொரு நல்ல விஷயம், டாப் 5ல் ஒரேயொரு வெளிநாட்டு வீரர் தான். அதனால், மற்ற இடங்களுக்கு கொஞ்சம் குறைவான தொகையில் கிடைக்கக்கூடிய இன்னும் 2 ஆல்ரவுண்டர்களை அவர்கள் வாங்க முயற்சிக்கலாம். கிளென் ஃபிலிப்ஸ், மிட்செல் சாண்ட்னர் போன்ற இருவரையுமே நிச்சயம் 8-10 கோடிக்குள் பெற்றுவிடலாம். ஃபிலிப்ஸ் நல்ல ஃபினிஷராக இருபபர். போக, ஆஃப் ஸ்பின் கொடுப்பார். அதேபோல் சாண்ட்னர் தன் அட்டகாச பந்துவீச்சோடு ஓரளவு பேட்டிங்கிலும் பங்களிப்பார். இவர்களைப் பெறும்போது லெக் ஸ்பின் (சஹால்), ஆஃப் ஸ்பின் (ஃபிலிப்ஸ்), சாண்ட்னர் (இடது கை ஸ்பின்) என அனைத்து வகையான ஸ்பின் ஆப்ஷன்களும் கிடைத்துவிடும்.
இப்படி 3 வெளிநாட்டு ஆல்ரவுண்டர்கள் மற்றும் சஹாலை குறிவைத்தால், நிச்சயம் இந்த 4 வீரர்களை அவர்களால் 30 கோடிக்குள் பெற்றுவிடலாம். அதன்பிறகு ஒரு இந்திய வேகப்பந்துவீச்சாளரை 5-6 கோடிக்குள் பெறவேண்டும். இது கொஞ்சம் சவாலான விஷயமாகத்தான் இருக்கும். ஒன்று புவனேஷ்வர் குமார் போன்ற ஒரு சீனியரை குறைந்த தொகைக்கு எடுக்க முயற்சி செய்யலாம். இல்லை, அவர்கள் ஏற்கெனவே முயற்சி செய்த கார்த்திக் தியாகி, சேத்தன் சகாரியா போன்ற வீரர்களை டார்கெட் செய்யலாம். அப்படியும் இல்லையெனில் வழக்கமான ராயல்ஸ் பாணியில் 2-3 இளம் வேகப்பந்துவீச்சாளர்களை வாங்கி, அதில் சிறந்தவரை அந்த இடத்துக்குப் பயன்படுத்தலாம்.