2024 ஐபிஎல் தொடருக்கான ஏலம் வரும் டிசம்பர் 19ம் தேதி துபாயில் நடக்கிறது. இந்த ஏலத்துக்கு முன் ஒவ்வொரு அணியும் எப்படி இருக்கின்றன, எந்தெந்த இடங்களில் ஓட்டை இருக்கின்றன, அணி நிர்வாகங்கள் யாரை வாங்க முயற்சிக்கும்... ஓர் அலசல். இந்த எபிசோடில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
இந்த ஆண்டுக்கான ஏலத்தின் முன்பாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் பிளேயர் டிரேட் செய்திருக்கிறது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். இடது கை ஸ்பின் வீசும் ஆல்ரவுண்டரான மயாங்க் டாகரை ஆர்சிபி பக்கம் அனுப்பிவிட்டு, அதேபோல் இடது கை ஸ்பின் வீசும் ஆல்ரவுண்டரான ஷபாஸ் அஹமதுவை இந்தப் பக்கம் இழுத்திருக்கிறார்கள். இந்த டிரேடுக்கான காரணம் புரியாமல் பலரும் குழம்பிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
சன்ரைசர்ஸ் அணி 6 வீரர்களை இந்த ஏலத்தின் முன்பாக ரிலீஸ் செய்திருக்கிறது. அதில் முக்கியமான நபர் ஹேரி புரூக். கடந்த ஆண்டு 13.25 கோடி ரூபாய் கொட்டி எடுத்த வீரரை ஒரே சீசனுக்குப் பிறகு ரிலீஸ் செய்திருக்கிறது சன்ரைசர்ஸ். அவர்போக, கார்த்திக் தியாகி, ஆதில் ரஷீத், விவ்ராந்த் ஷர்மா, சமர்த் வியாஸ், அகீல் ஹொசைன் ஆகியோரையும் அவர்கள் வெளியேற்றியிருக்கிறார்கள்.
சன்ரைசர்ஸ் அணி ரிலீஸ் செய்த 6 ஸ்லாட்களை நிரப்பினால் போதும். அதில் 3 வெளிநாட்டு வீரர்களுக்கான ஸ்லாட்கள். இந்த 6 இடங்களுக்கு அவர்களுக்கு சுமார் 34 கோடி ரூபாய் இருக்கிறது.
1. மயாங்க் அகர்வால்
2. அபிஷேக் ஷர்மா
3. ராகுல் திரிபாதி
4. எய்டன் மார்க்ரம்*
5. ஹெய்ன்ரிச் கிளாசன்*
6. கிளென் ஃபிலிப்ஸ்*
7. மார்கோ யான்சன்*
8. வாஷிங்டன் சுந்தர்
9. புவனேஷ்வர் குமார்
10. உம்ரன் மாலிக் / ஷபாஸ் அஹமது
11. டி. நடராஜன்
இம்பேக்ட் பிளேயர்: அப்துல் சமாத்
மேலே இருக்கும் பிளேயிங் லெவனைப் பார்க்கும்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஓரளவு செட் ஆன அணி போலத் தெரியும். இருந்தாலும் அந்த அணிக்கு சில தேவைகள் இருக்கவே செய்கின்றன. முதலாவது, கடந்த 2 ஆண்டுகளாகவே அவர்களைப் பெரும் பாடு படுத்தும் ஸ்பின்னர் பிரச்னை. ரஷீத் கான் சென்ற பிறகு ஒரு முன்னணி ஸ்பின்னர் இல்லாமல் அந்த அணி தடுமாறுகிறது. அதனால் இந்த ஏலத்தில் அவர்களின் பிரதான டார்கெட் ஒரு ஸ்பின்னராகவே இருக்கும். ஆஃப் ஸ்பின் வீச வாஷிங்டன் சுந்தர், மார்க்ரம் என ஆப்ஷன்கள் இருக்கின்றன. இடது கை ஸ்பின்னுக்கு ஷபாஸ் அஹமது இருக்கிறார். அதனால், நிச்சயம் அவர்கள் லெக் ஸ்பின்னரை டார்கெட் செய்வார்கள். வனிந்து ஹசரங்காவை பெரும் தொகை கொடுத்து சன்ரைசர்ஸ் வாங்க வாய்ப்பு இருக்கிறது. இல்லையெனில் சைனாமேன் பௌலர் தப்ராய்ஸ் ஷம்ஸியை குறிவைக்கலாம்.
நாம் சொன்னதுபோல் அவ்விரு முன்னணி ஸ்பின்னர்களுள் ஒருவரை அவர்கள் வாங்கினால், கிளென் ஃபிலிப்ஸை பிளேயிங் லெவனில் இருந்து கழட்டிவிடவேண்டியிருக்கும். அதற்காக, அந்த இடத்தை நிரப்ப ஒரு சரியான இந்திய ஆப்ஷனை வாங்குவது அவசியம். அந்த இடத்துக்கு தமிழக வீரர் ஷாரூக் கானை அவர்கள் டார்கெட் செய்யலாம். நம்பர் 6 இடத்துக்கு அவர் மிகச் சிறப்பாக பொறுந்திப்போவார். இந்த காம்பினேஷன் சரியாக அமைந்தால் சன்ரைசர்ஸ் பிளேயிங் லெவன் பக்காவாக அமையும்.
இதில் என்ன சிறப்பெனில், 20 கோடி ரூபாய் வைத்தே அந்த இரு இடங்களையும் அவர்களால் நிரப்ப முடியும். அதனால் மீதமிருக்கும் தொகையை வைத்து நல்ல பேக் அப் ஆப்ஷன்கள் வாங்கலாம். குறைந்தபட்சம் இந்திய ஓப்பனர், ஒரு இந்திய வேகப்பந்துவீச்சாளரை அவர்கள் வாங்கவேண்டும். சொல்லப்போனால் அதிக தொகை இருப்பதால், ஹர்ஷல் படேல் அல்லது ஷர்துல் தாக்கூர் ஆகியோரில் ஒருவரைக் கூட அவர்கள் வாங்க முயற்சிக்கலாம். அதேசமயம் அந்த அணி டேரில் மிட்செல், ரச்சின் ரவீந்திரா போன்ற ஆல்ரவுண்டர்களையும் கூட வாங்க முயற்சிக்கலாம்.
அதிக தொகை, குறைந்த ஸ்லாட்கள்... நிச்சயம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இந்த ஏலத்தைப் பயன்படுத்தி அட்டகாசமாக தங்கள் பிளேயிங் லெவனை செட் செய்ய முடியும்.