2024 டி20 உலகக்கோப்பையானது பரபரப்பான மோதல்களுக்கு பிறகு சூப்பர் 8 சுற்றை நோக்கி நகர்ந்துள்ளது. 20 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடைபெற்ற நிலையில்,ம் “தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ்” முதலிய 5 அணிகள் சூப்பர் 8 சுற்றில் தங்களுடைய இடத்தை உறுதிசெய்துள்ளன.
அதேபோல அடுத்த சுற்றுக்கு முன்னேறாமல் “நியூசிலாந்து, இலங்கை, நமீபியா, உகாண்டா, ஜெனிவா, ஓமன்” முதலிய 6 அணிகள் தொடரிலிருந்தே வெளியேறியுள்ளன.
மீதமிருக்கும் 3 இடங்களுக்காக “அமெரிக்கா, பாகிஸ்தான், ஸ்காட்லாந்து, இங்கிலாந்து, வங்கதேசம், நெதர்லாந்து” முதலிய 6 அணிகளுக்கு இடையே இன்னும் மோதல்கள் இருந்துவருகின்றன.
குரூப் A-ஐ பொறுத்தவரையில், இந்திய அணியுடன் பாகிஸ்தான், அமெரிக்கா, அயர்லாந்து மற்றும் கனடா அணிகள் இடம்பெற்று பலப்பரீட்சை நடத்தின. இதில் 3 போட்டிகளில் விளையாடி மூன்றிலும் வெற்றிபெற்றுள்ள இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது.
இரண்டாவது இடத்துக்கான போட்டியில் அமெரிக்கா, பாகிஸ்தான், கனடா, அயர்லாந்து முதலிய 4 அணிகளுமே உயிர்ப்புடன் இருக்கின்றன. இந்த ஒரு குரூப்பில் மட்டுமே இன்னும் எந்தவொரு அணியும் தொடரிலிருந்து வெளியேறாமல் இருந்து வருகின்றன.
மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றிபெற்றுள்ள அமெரிக்க அணி, கடைசி போட்டியில் அயர்லாந்தை வீழ்த்தும் பட்சத்தில் பாகிஸ்தான் அணியை வெளியேற்றி இரண்டாவது அணியாக தகுதிபெறும். மாறாக தோற்றால் அமெரிக்காவுக்கு நிகராக நல்ல ரன்ரேட்டுடன் இருக்கும் பாகிஸ்தான் அணி, அயர்லாந்தை வீழ்த்தி சூப்பர் 8-க்கு தகுதிபெறுவதில் உயிர்ப்புடன் இருக்கும்.
ஒருவேளை பாகிஸ்தான், அமெரிக்கா இரண்டு அணிகளையும் அயர்லாந்து சிறப்பாக வீழ்த்தும் பட்சத்தில் அயர்லாந்துக்கும் ஒரு வாய்ப்பு இருக்கிறது. இன்றைய போட்டியில் அமெரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகள் மோதவிருக்கும் நிலையில், ஒருவேளை அமெரிக்கா வெற்றிபெற்றால் பாகிஸ்தான் அணி இறுதிபோட்டியில் வென்றாலும் வெல்லாவிட்டாலும் தொடரிலிருந்து வெளியேறும். போட்டி மழையால் பாதிக்கப்பட்டு ரத்தானாலும் பாகிஸ்தான் அணி தொடரிலிருந்து வெளியேறும், பாகிஸ்தானுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு அமெரிக்கா அணி தோல்வியை சந்திக்க வேண்டும்.
குரூப் B-ஐ பொறுத்தவரையில், நடப்பு சாம்பியன் அணியான இங்கிலாந்து வாழ்வா-சாவா நிலையில் உள்ளது. அந்த அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால், ஸ்காட்லாந்து அணியை ஆஸ்திரேலியா வீழ்த்தவேண்டும். மாறாக ஆஸ்திரேலியா ஸ்காட்லாந்து அணியிடம் தோற்றால், இங்கிலாந்து அணி கடைசி போட்டியை விளையாடினாலும் விளையாடாவிட்டாலும் உலகக்கோப்பையிலிருந்து வெளியேறும்.
இந்தப் பட்டியலில் இங்கிலாந்துடன் ஆஸ்திரேலியா, ஸ்காட்லாந்து, நமீபியா மற்றும் ஓமன் அணிகள் இடம்பெற்று மோதிய நிலையில், ஆஸ்திரேலியா அணி மூன்று போட்டிகளில் விளையாடி மூன்றிலும் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது. நமீபியா, ஓமன் முதலிய அணிகள் தொடரிலிருந்து வெளியேறியுள்ளன.
மீதமிருக்கும் இரண்டாவது இடத்துக்கு இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதிவருகின்றன. இந்த இரண்டு அணிகளும் அவர்களுடைய கடைசி லீக் போட்டியில் ஸ்காட்லாந்து ஆஸ்திரேலியாவுடனும், இங்கிலாந்து நமீபியா உடனும் மோதவிருக்கின்றன.
குரூப் C-ல் சொந்த மண்ணில் ஆடும் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், உகாண்டா மற்றும் ஜெனிவா முதலிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
இதில் இடம்பெற்ற ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இரண்டு அணிகளும் நியூசிலாந்து அணியை வீழ்த்தியதால், அந்த அணி தொடரிலிருந்தே வெளியேறியுள்ளது. கடந்த 2021 உலகக்கோப்பையில் இறுதிப்போட்டி மற்றும் 2022 உலகக்கோப்பையில் அரையிறுதிப்போட்டி வரை முன்னேறிய நியூசிலாந்து அணி, இந்தமுறை லீக் போட்டியுடன் பரிதாபமாக வெளியேறியுள்ளது.
அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 3-0 என வெற்றியை ருசித்திருக்கும் ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன. இந்த இரண்டு அணிகளும் மோதும் கடைசி லீக் போட்டி ஜூன் 18ம் தேதி நடைபெறவிருக்கிறது.
குரூப் D-ல், தென்னாப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், நெதர்லாந்து மற்றும் நேபாளம் முதலிய 5 அணிகள் இடம்பெற்றுள்ளன. இதில் 3-0 என விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்ற தென்னாப்பிரிக்கா அணி சூப்பர் 8 ஸ்பாட்டை உறுதிசெய்துள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 4 ரன்னில் போட்டியை நழுவவிட்ட வங்கதேச அணி, நெதர்லாந்துக்கு எதிரான முக்கியமான போட்டியில் வெற்றிபெற்று தங்களுடைய சூப்பர் 8 இடத்தை கிட்டத்தட்ட உறுதிசெய்துள்ளன.
நேபாளுக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் வங்கதேசம் வெற்றிபெற்றால் தங்களுடைய இடத்தை சீல் செய்துவிடும். மாறாக தோற்றால் நெதர்லாந்து அணி அதிகப்படியான ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றால் மட்டுமே தகுதிபெற முடியும்.
இந்தப்பட்டியலில் இருந்த இலங்கை அணி 3-0 என தோற்று தொடரிலிருந்தே வெளியேறியுள்ளது.