டி20 உலகக்கோப்பை தொடர் இன்னும் 2 நாட்களில் தொடங்கி நடைபெறவிருக்கிறது. கோப்பையை வெல்ல 20 அணிகள் பலப்பரீட்சை நடத்தவிருக்கின்றன. ஒவ்வொரு அணிகளும் அவர்களுடைய பலத்தை நிரூபிக்க தயாராகி வரும்நிலையில், இந்திய அணிக்கு ஒரேயொரு பிரச்னை மட்டுமே பெரியதாக இருந்துவருகிறது.
அது என்ன பிரச்னை? என்றால், இந்திய அணியில் அனைத்து வீரர்களும் இருந்தாலும் எந்த வீரர்கள் ஆடும் அணியில் இருக்கப்போகிறார்கள், அப்படி இடம்பெற்றால் யார் எந்த இடத்தில் விளையாடப்போகிறார்கள் என்பது தான்.
இந்திய அணிக்கு இருக்கும் முக்கிய பிரச்னைகள்,
*தொடக்க ஜோடியாக யார் செயல்படபோகிறார்கள், விராட் கோலி தொடக்கவீரராக ஐபிஎல்லில் 741 ரன்கள் குவித்துள்ளார்.
*விக்கெட் கீப்பர் ரோலிற்கு யார் சரியான தேர்வு?
*ரோகித் சர்மா எந்த இடத்தில் ஆடவேண்டும்?
* ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே ஆடும் இடம் என்ன? என அணியை கோர்வையாக எடுத்துசெல்ல வேண்டிய பெரிய கவலை இந்திய அணிக்கு இருக்கிறது.
நடப்பு ஐபிஎல் தொடரில் விராட் கோலி 741 ரன்களை குவித்திருந்தாலும், பவர்பிளேவில் அதிகப்படியான ஸ்டிரைக்ரேட் உடன் அபாரமாக விளையாடும் அவர், ஸ்பின்னர்கள் வரும்போது அப்படியே படிப்படியாக குறைந்து ஒரு சராசரியான பேட்டிங்கை மட்டுமே விளையாடுகிறார்.
இந்நிலையில், பவர்பிளேவில் சிறப்பாக செயல்படும் கோலி தொடக்கவீரராகவும், ஸ்பின்னர்களை சிறப்பாக ஆடக்கூடிய ரோகித் சர்மா மிடில் ஆர்டரிலும் விளையாடவேண்டும் என முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாஃபர் கூறியுள்ளார்.
டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக இந்திய அணியில் செய்யவேண்டிய மாற்றம் குறித்து பேசியிருக்கும் வாசிம் ஜாஃபர், “டி20 உலகக்கோப்பையில் கோலி மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் ஓப்பனிங் செய்யவேண்டும். ரோகித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் அணியின் நிலைமையை பொறுத்து 3 அல்லது 4வது இடத்தில் களமிறங்கவேண்டும். ரோகித் சர்மா ஸ்பின்னர்களை சிறப்பாக விளையாடுகிறார், அதனால் அவர் 4வது இடத்தில் விளையாடினால் எந்த பிரச்னையும் இருக்காது “ என்று தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
வாசிம் ஜாஃபர் கூறியதை போன்றே முன்னாள் ஆஸ்திரேலிய அணியின் தொடக்கவீரர் மேத்யூ ஹைடனும் அதே கருத்தையே தெரிவித்துள்ளார்.
விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா குறித்து பேசியிருக்கும் அவர், “இந்தியாவின் தொடக்க வீரராக விராட் கோலி தான் இருக்க வேண்டும் என சொல்வதற்கு காரணம், முதல் 6 ஓவரில் பேட்டிங் செய்வதில் விராட் கோலி மாஸ்டர். மிடில் ஆர்டரில் உங்களுக்கு பவர் ஹிட்டிங் தேவைக்கு வந்தவுடன், ரோகித் சர்மா, சூர்யகுமார் உட்பட மற்ற சிறந்த விருப்பங்கள் உள்ளன. நம்பர் 4-ல் ரோகித் சர்மா வைத்திருக்கும் ரன்களை பாருங்கள், தொடக்க வீரராக உள்ள எண்களை விட அவை சிறந்தவை" என்று ஹைடன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் உடன் கூறினார்.
ஐபிஎல்லில் நம்பர் 4 இடத்தில் விளையாடியிருக்கும் ரோகித் சர்மா சிறந்த சராசரியுடன் 2392 ரன்களை குவித்துள்ளார்.