நடப்பு ஐபிஎல் சீசன் இப்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஐபிஎல் கோப்பைக்காக நாளை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைடன்ஸ் அணிகள் மோத இருக்கின்றன. இந்நிலையில் முன்னாள் வீரர் விரேந்திர சேவாக், தன் நிலைபாட்டின்படி டாப் 5 பேட்ஸ்மேன்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
விரேந்திர சேவாக்கின் இந்தப் பட்டியலில் விராட் கோலியும், அதிரடியாக விளையாடி வரும் சுப்மன் கில்லும் இடம்பெறவில்லை. இது குறித்து ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ள சேவாக் “நான் என்னுடைய பட்டியலில் தொடக்க ஆட்டக்காரர்களை தேர்வு செய்யவில்லை. ஏனெனில் அவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கின்றன” என்று கூறியுள்ளார்.
பட்டியலை அவர் விவரிக்கையில், “நான் முதலாவதாக ரிங்கு சிங்கை தேர்வு செய்கிறேன். இவரை முதலில் ஏன் தேர்வு செய்தேன் என யாரும் கேள்வி கேட்கமாட்டார்கள் என நினைக்கிறேன். ஏனெனில் இதற்கு முன்னர் ஒரே ஓவரில் 5 சிக்சர்களை அடித்து தங்கள் அணியை யாரும் வெற்றி பெறச்செய்யவில்லை" என்றார்.
மேலும் பேசிய அவர் "இரண்டாவதாக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷிவம் துபேவை தேர்வு செய்கிறேன். அவர் இந்த சீசனில் 33 சிக்சர்களை அடித்துள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் 160 ஆக உள்ளது. துபேவுக்கு கடந்த சில சீசன்கள் எதிர்பார்த்தபடி அமையவில்லை. ஆனால் இந்த சீசனில் அருமையாக செயல்பட்டுள்ளார்.
மூன்றாவதாக தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால். அவரது அருமையான பேட்டிங் திறமை என்னை அவரை எடுக்க வைத்தது
இதையடுத்து 4வதாக சூர்யகுமார் யாதவ். ஐபிஎல் தொடங்கும் போது சிறந்த சூர்யகுமார் யாதவ் ஃபார்மில் இல்லை. சர்வதேச போட்டிகளில் அடுத்தடுத்து டக் அவுட் ஆனார். ஐபிஎல் தொடரில் கூட தொடக்கத்தில் சிறப்பான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தவில்லை. அதற்கடுத்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இறுதியாக நான் ஹென்ரிச் க்ளாசெனை தேர்வு செய்கிறேன். ஏனென்றால் ஒரு வெளிநாட்டு வீரர் இந்திய ஆடுகளங்களில் சுழற்பந்து வீச்சை சிறப்பாக கையாள்வதை எப்போதாவதுதான் பார்க்க முடியும்" என்றார்.