“எக்ஸ்ட்ராவாகப் பந்துவீசி தோனிக்குப் பாதிப்பை ஏற்படுத்தாதீர்கள்” - சேவாக் அறிவுரை

சென்னை அணி வீரர்கள் பந்து வீச்சில் கவனம் செலுத்தி, எக்ஸ்ட்ரா ரன்கள் வழங்குவதை தவிர்க்க வேண்டும் எனவும் அதனால் கேப்டன் தோனிக்கு பாதிப்பு ஏற்படுத்த வேண்டாம் எனவும் இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
சேவாக், தோனி
சேவாக், தோனிfile image
Published on

இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல்லின் 16வது சீசன், கடந்த மார்ச் 31ஆம் தேதி தொடங்கிய நாள் முதல் விறுவிறுப்பாய் நடைபெற்று வருகிறது. இதில், சென்னை சேப்பாக்கத்தில் கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி நடைபெற்ற 6வது லீக் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின.

தோனி
தோனிfile image

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய லக்னோ 20 ஓவரில் 7 விக்கெட்களை இழந்து 205 ரன்கள் மட்டுமே எடுத்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. என்றாலும் இந்தப் போட்டியின்போது, சென்னை அணி பந்துவீச்சாளர்கள் அதிக 'எக்ஸ்ட்ரா' ரன்களை வாரிக்கொடுத்தனர். 3 நோ-பால்கள், 2 லெக்பைஸ், 13 வைடு என மொத்தம் 18 ரன்களை எக்ஸ்ட்ராவாக வாரி வழங்கினர். அதிலும் குறிப்பாக, துஷார் தேஷ்பாண்டே 4 வைடு, 3 நோ-பால் என மொத்தம் 7 எக்ஸ்ட்ரா ரன்களை வழங்கினார்.

இதையடுத்து போட்டிக்குப் பின் விரக்தியாய் பேசிய கேப்டன் தோனி, “பந்துவீச்சாளர்கள் ஒரு நோ-பாலும் வீசக்கூடாது, குறைவான வைடுகளையே வீச வேண்டும். நாம் கூடுதலாக நிறைய பந்துகளை வீசியுள்ளோம். அதை நிறுத்தவேண்டும். அவ்வாறு நிறுத்தாவிட்டால் வீரர்கள் வேறொரு கேப்டன் தலைமையில்தான் விளையாட நேரிடும்” என எச்சரிக்கை விடுத்திருந்தார்.

MS Dhoni
MS DhoniPTI
தோனி அதுபோல் சொன்னதற்குக் காரணம், ஐசிசியின் புதிய விதிப்படி, போட்டிகளில் ஓர் அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீசி முடிக்காவிட்டால் முதல்முறை அந்த அணியின் கேப்டனுக்கு 12 லட்ச ரூபாய் அபராதமும், 2வது முறையும் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்காவிட்டால் அந்த அணியின் கேப்டனுக்கு 24 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்பதுதான்.

3வது முறையும் அந்த அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீசி முடிக்காவிட்டால், அந்த அணியின் கேப்டன் அடுத்துவரும் ஒரு ஆட்டத்தில் விளையாட முடியாது. ஐசிசியின் இந்தப் புதிய விதியை மனதில்வைத்தே தோனி, தன் அணி பந்துவீச்சாளர்கள் எக்ஸ்ட்ரா வீசுவதை குறைக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். இந்த நிலையில் நேற்றும் (ஏப்ரல் 17) ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக சென்னை அணி பந்துவீச்சாளர்கள் 11 எக்ஸ்ட்ரா பந்துகளை வீசினர். இது, தோனி விளையாடுவதில் பாதிப்பை ஏற்படுத்தும் எனச் சொல்லப்படுகிறது.

ஐசிசியின் புதிய விதியை மையமாக வைத்து இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்டர் வீரேந்திர சேவாக்கும், தோனிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவர், “வைடுகள் மற்றும் நோ-பால்களின் எண்ணிக்கை இந்த சீசனில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே, இதுகுறித்து தோனி விரிவாகப் பேசியுள்ளார். எக்ஸ்ட்ராவாக பந்துவீசுவதால், சென்னை அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் ஆட்டத்தை முடிப்பதில் சிரமங்களை எதிர்கொண்டது. இது, போகப்போக தோனிக்கு தடையை ஏற்படுத்தலாம். தொடர்ந்து சென்னை அணி வீரர்கள் எக்ஸ்ட்ரா வீசுவதால் தோனி மகிழ்ச்சியாக இல்லை. இதனால், தோனிக்கு ஒரு போட்டியில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டு, அவர் களமிறக்கப்படாமல் போகலாம். அதற்கு சென்னை அணி பந்து வீச்சாளர்கள் வாய்ப்பு அளிக்கக்கூடாது.

வீரேந்திர சேவாக்
வீரேந்திர சேவாக்file image

முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளதால், அவர் இன்னும் சில போட்டிகளில் மட்டுமே விளையாடக்கூடும் என்று தெரிகிறது. இருந்தாலும் அதனுடன் விளையாடி வருகிறார். இந்த நிலையில், சென்னை அணி பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து எக்ஸ்ட்ராவாக பந்து வீசினால், அது தோனி ஓய்வெடுக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளிவிடும்” என எச்சரித்திருக்கும் சேவாக், ”இந்த சீசனில் சென்னை அணியின் பந்துவீச்சு படுமோசமாக உள்ளது. இதை, நான் முதல் நாளிலிருந்தே சொல்கிறேன். அதில் அவர்கள் நன்கு கோலோச்ச வேண்டும்” என ஆலோசனையும் கூறியுள்ளார்.

சென்னை அணி இதுவரை வழங்கிய எக்ஸ்ட்ராக்கள்!

சென்னை அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 3இல் வெற்றியும் 2இல் தோல்வியும் கண்டுள்ளது. சென்னை அணி முதல் ஆட்டத்திலிருந்து எக்ஸ்ட்ரா வகையில் எதிரணிகளுக்கு ரன்களை வாரி வழங்கி வருகிறது. அதன்படி,

* மார்ச் 31ஆம் தேதி நடைபெற்ற முதல் லீக் போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக 12 எக்ஸ்ட்ராக்களையும்

* ஏப்ரல் 3ஆம் தேதி நடைபெற்ற 6வது லீக் போட்டியில் லக்னோவுக்கு எதிராக 18 எக்ஸ்ட்ராக்களையும்

* ஏப்ரல் 8ஆம் தேதி நடைபெற்ற மும்பைக்கு எதிரான போட்டியில் 8 எக்ஸ்ட்ராக்களையும்

* ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெற்ற 17வது லீக் போட்டியில் ராஜஸ்தானுக்கு எதிராக 10 எக்ஸ்ட்ராக்களையும்

* ஏப்ரல் 17ஆம் தேதி நடைபெற்ற 24வது லீக் போட்டியில் பெங்களூருவுக்கு எதிராக 11 எக்ஸ்ட்ராக்களையும்

வழங்கி உள்ளது சென்னை அணி என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com