நடப்பு ஐபிஎல் தொடருக்குப் பின், அடுத்து ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற இருக்கிறது. இதற்காக அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும் களம் காண இருக்கிறது. இந்த அணியில் இந்திய அணியின் ரன் மெஷின் என்று அழைக்கப்படும் விராட் கோலியும் இடம்பெற்றுள்ளார். இந்த தொடருக்குப் பின் ரோகித் மற்றும் கோலியின் ஓய்வு குறித்தும் கடுமையாகப் பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஓய்வு குறித்து விராட் கோலி ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ளார். அதில், “ஒரு விளையாட்டு வீரராக, எல்லோருக்கும் ஓய்வுக் காலம் என்பது நிச்சயம் உண்டு. ஒரு குறிப்பிட்ட நாளில், இதைச் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நான் நினைத்துக் கொண்டிருக்க விரும்பவில்லை.
ஏனெனில், நான் காலத்திற்கும் விளையாட முடியாது. எனவே குறையாக இருக்கும் எந்த விஷயத்தையும் செய்யாமல் விட்டுவிட்டு அதற்காக பின்னர் வருத்தப்படுவதை நான் செய்யமாட்டேன். ஒருமுறை ஓய்வை அறிவித்துவிட்டால், அதிலிருந்து நான் போய்விடுவேன். அதன்பின் நீங்கள் என்னைக் கொஞ்ச காலம் பார்க்கமாட்டீர்கள்.
அதனால் களத்தில் இருக்கும்வரை, நான் செய்ய நினைப்பவற்றையெல்லாம் செய்து முடித்துவிட வேண்டும். அதனால்தான் என்னுடைய முழு பலத்தையும் நான் விளையாட்டில் காட்டி முனைப்போடு ஆடுகிறேன். அதுதான் என்னை தொடர்ந்து விளையாட வைக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.