இந்திய அணி கோப்பை வென்று கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் முழுதாக முடிந்துவிட்டது. ஆனாலும், வெற்றிக் கழிப்பில் இருந்து இந்தியா மீண்டபாடு இல்லை. பொதுவாக இரண்டு மூன்று நாட்களில் கொண்டாட்டம் எல்லாம் வடிந்துவிடும். ஆனால், இந்தியா கோப்பை வென்ற தருணத்தை நினைத்து நினைத்து துள்ளிக்குதிக்கின்றனர் கிரிக்கெட் ரசிகர்கள். சும்மாவா. பல்லாண்டுகள் முயற்சிக்கு, 17 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த பலன் அல்லவா?
கொண்டாட்டங்களுக்குப் பின் சில கவலை அளிக்கும் சம்பவங்களும் நடக்கத்தானே செய்கின்றன. கோப்பையை வென்ற நாள், கொண்டாட்டத்துடன் சில கவலைகளையும் உடன் கொண்டு வந்தது. விராட் கோலி சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவரது சாதனையை அசைபோடுவதற்குள் வந்தது அடுத்த அறிவிப்பு. சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ரோகித் சர்மாவும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தொடர்ந்து வேறு ஒரு அறிவிப்பும் வந்தது. இம்முறை ஜடேஜா. அவரும் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
கோப்பை வென்ற கொண்டாட்டம், வீரர்களின் ஓய்வு அறிவிப்பு என்பதைத்தாண்டி மக்கள் மனதில் உருண்டோடிக் கொண்டிருக்கிறது வீரர்களின் சாதனை பட்டியல்கள். வழக்கம்போல் இம்முறையும் விராட்டின் சாதனைகளை நெஞ்சில் பதித்துக் கொண்டிருக்கின்றனர் மக்கள்.
அதிகமுறை ஆட்டநாயகன் விருதினை வென்றவர், இந்தியாவிற்காக டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் அதிக ரன்களை அடித்தவர் என நீண்டு கொண்டே இருக்கிறது. இம்முறை மகத்தான சாதனை ஒன்றும் இணைந்திருக்கிறது.
விராட் கோலி ஏற்கெனவே 2011 ஆம் ஆண்டு நடந்த ஒருநாள் உலகக்கோப்பை, 2013 ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி, 2008 ஆம் ஆண்டு நடந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை என மூன்று ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளார். இந்தப் பட்டியலில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பையும் இணைந்துள்ளது. இதன்மூலம் தல தோனி கூட படைத்திடாத சாதனையை படைத்துள்ளார் கோலி.
மூன்று ஐசிசி ஒயிட்பால் கிரிக்கெட் கோப்பைகளையும் வென்ற இந்தியர்கள் பட்டியலில் விராட் கோலியும் இணைந்துள்ளார். யுவராஜ் சிங், எம்.எஸ். தோனி, சேவாக், ஹர்பஜன் சிங் பட்டியலில் தற்போது விராட்டின் பெயரும் இணைந்துள்ளது. ஆனால், 2002 ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவும் இலங்கையும் விளையாடின. இதில் கோப்பை இரு அணிகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், இதைத்தாண்டி விராட் கோலி 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கோப்பையையும் வென்றுள்ளார். இதனையும் சேர்த்தால் கோலி 4 ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளார். யுவராஜ் சிங்கும் 2000 ஆம் ஆண்டில் நடந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பையினையும் வென்றுள்ளார். ஆனாலும், 2002-ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி பகிர்ந்து அளிக்கப்பட்டது என்ற ’மை’ இருக்கத்தானே செய்கிறது. ஆனால் விராட் 4 போட்டிகளிலும் வெற்றியைப் பெற்றுள்ளார்.
விராட்டின் பெயருக்குப் பின் இல்லாத ஒரே கோப்பை ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை. 2023 ஆம் ஆண்டு நடந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா உடன் இந்திய அணி தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. அடுத்து வர இருக்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப், சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் என இரண்டிலும் சீனியர் வீரர்களுடன், இளம் வீரர்களும் விளையாடுவார்கள்... பெரிய மாற்றம் இருக்காது என ஜெய் ஷா கூறி இருப்பதும் நினைவில் கொள்ள வேண்டியது.
கோலிக்குப் மேலும் ஒரு கோப்பை சேர்ந்தால் அதைவிட வேறு கொண்டாட்டம் இருக்கவாப் போகிறது.