ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறும் 4-வது அணியை நிர்ணயிக்கும் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் குவித்த நிலையில் சென்னை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் பெங்களூரு அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 4-வது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.
இந்நிலையில் போட்டி முடிந்த பின் தோனி, பெங்களூர் அணி வீரர்களுடன் கைகுலுக்குவதைத் தவிர்த்துவிட்டு ட்ரெஸ்ஸிங் ரூமிற்குத் திரும்பியது தற்போது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.
இதுதொடர்பான வீடியோவில் தோனி முன்னணியில் இருக்க பெங்களூரு வீரர்களுக்காக சென்னை வீரர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் தோனி வரிசையில் நிற்காமல் ட்ரெஸ்ஸிங் ரூமிற்குச் செல்கிறார். இதுதொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டன. தோனி சரியாக நடந்துகொள்ளவில்லை என்றெல்லாம் கூறப்பட்டன. ஆனால் தோனி களத்தில் காத்திருந்ததாகவும், ஆர்சிபி ரசிகர்கள் வெற்றிக் கொண்டாட்டத்திலேயே இருந்த காரணத்தாலேயே தோனி சென்றுவிட்டார் என்றும், மேலும் அவருக்கு காலில் காயம் என்பதும் அனைவருக்கும் தெரிந்த ஒன்று என ஒரு தரப்பினர் கூறுகின்றனர். அதுதொடர்பான வீடியோக்களையும் பதிவிட்டு பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இதுதொடர்பாக கிரிக்கெட் விமர்சகர் ஹர்ஷா போக்லே கூறுகையில், “நீங்கள் உலகக்கோப்பையின் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றால் கூட எதிரணி வீரர்களுடன் கைகுலுக்கிய பின்பே வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட வேண்டும். இது விளையாட்டில் முக்கிய விஷயங்களில் ஒன்று. எங்களுக்கிடையே இருந்த போட்டி முடிந்துவிட்டது. இவையெல்லாம் விளையாட்டுதான் என்பதை உணர்த்தும் விஷயங்கள் இவை” எனத் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக மைக்கேல் வாகன் கூறுகையில், “தோனியின் கடைசி போட்டி இதுவா என்பது தெரியாது. வீரர்கள் மைதானத்தை சுற்றி தங்களது வெற்றியை கொண்டாடிக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்கள் செய்திருக்க வேண்டியது, ‘லெஜண்ட் அங்கே காத்திருக்கும்போது அவரிடம் போய் கைகுலுக்க வேண்டும்’ என்பதுதான்” என தெரிவித்துள்ளார்.
ஆனால் கொண்டாட்டங்கள் முடிவடைந்த நிலையில் விராட் கோலி தோனியைத் தேடி ட்ரெஸ்ஸிங் ரூமிற்குச் சென்ற வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது விராட் மற்றும் தோனி இடையே இருக்கும் உறவை விளக்குவதாகவும் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.