நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தற்போதைக்கு ராஜஸ்தான் அணி களமாடிய அத்தனை போட்டிகளிலும் வெற்றியை தக்கவைத்து புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் நீடிக்கிறது. கொல்கத்தா அணி 2ம் இடத்திலும், லக்னோ அணி மூன்றாம் இடத்திலும் இருக்க, சென்னை அணி 4வது இடத்தில் இருக்கிறது.
இதுவரை 5 போட்டிகளில் களமாடி அதில் 3போட்டிகளில் வெற்றியை ருசித்துள்ளது சென்னை அணி. குறிப்பாக, தோனி நடப்பு ஐபிஎல் தொடரோடு ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், பேட்டிங் செய்ய அவர் களமிறங்கும்போதெல்லாம் ரசிகர்களின் ஆரவாரம் விண்ணை பிளக்கும் வகையில் இருக்கிறது.
இந்நிலையில் கொல்கத்தா - சென்னை அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில், 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களை சேர்த்தது. தொடர்ந்து, பேட்டிங் செய்த சென்னை அணியில் ரச்சின் 15 ரன்களுக்கு அவுட் ஆக ருதுராஜ் நிதானமாக விளையாடினார். அடுத்தடுத்த விக்கெட்டுகளுக்குப் பிறகு டுபேவும் அவுட்டாக அனைவரும் தோனி களத்தில் இறங்குவார் என்று எதிர்பார்த்தனர்.
வழக்கமாக ஜடேஜாவுக்குப் பிறகே தோனி பேட்டிங் செய்ய வருவார். எனினும், ரசிகர்களின் கண்களின் தோனியையே எதிர்பார்த்தன. ஆனால், அந்த நேரத்தில்தான் பேடுகளை கட்டுக்கொண்டு ஹெல்மெட்டையும் மாட்டிக்கொண்டு பெவிளியனில் இருந்து கீழே இறங்கினார் ஜடேஜா.
இதைப்பார்த்து சிஎஸ்கே அணியினரே ஷாக் ஆன நிலையில், அவர் சட்டென மீண்டும் டிரெஸ்ஸிங் அறைக்குச் சென்றுவிட்டார். பிறகு தோனி சிங்கமென நடையில் எண்ட்ரி கொடுக்க... மொத்த மைதானமும் தோனி தோனி என்ற கோஷத்தால் அதிர்ந்தது.
இதில் தோனி பேட்டிங் செய்ய களமிறங்கிய போது ரசிகர்களின் ஆரவாரம் 125 டெசிபெல் என பதிவானதால், மைதானமே அதிர்ந்தது. அந்த சத்தத்தை தாங்க முடியாமல் காதுகளை மூடிக்கொண்டார் கே.கே.ஆர். வீரர் ரஸ்ஸல். இதுதொடர்பான காணொளிகள், இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றன.
களத்தில் இறங்கினாலும், தான் அதிகமாக விளையாடாமல் ருதுராஜுக்கு துணையாக நின்ற தோனி, அவரையே அடிக்க வைத்து அணியை வெற்றிப்பாதைக்கு கூட்டிச்சென்றார். இப்படியாக, 17 ஓவர் முடிவதற்குள்ளாகவே சென்னை அணி இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
இந்நிலையில், சென்னை அணியின் செல்லப்பிள்ளையாக, தளபதியாக ரசிகர்களால் கொண்டாடப்படும் ஜடேஜாவின் நேற்றைய சுட்டித்தனம் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து பேசியிருக்கும் சிஎஸ்கே வீரர் துஷார் தேஷ்பாண்டே, “ 'நீ பேட்டிங் செய்ய கிளம்புவதுபோல நடி. பின் திரும்பி வந்துவிடு. அதற்குள் நான் கிரவுண்டிற்குள் செல்கிறேன்' என்று தோனி ஜடேஜாவிடம் சொன்னதை நான் கேட்டேன்” என தெரிவித்துள்ளார்.
தோனி - ஜடேஜாவின் இந்த சுட்டித்தனத்தை இணைய சிஎஸ்கே ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர்.!