Rohit Sharma
Rohit Sharma s

சவால்களை சமாளித்து ஜொலித்த டாப் 10 பேட்டர்கள்!

கடினமான ஆடுகளங்களில் மிளிர்ந்த டாப் 10 பேட்ஸ்மேன்கள்: முழு விவரம்

2024 டி20 உலகக் கோப்பை தொடர் வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது. தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறது இந்தியா. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடந்த இந்தத் தொடர் எதிர்பார்த்த அளவுக்கு பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இல்லை. பல ஆடுகளங்களில் 120 ரன்கள் அடிப்பதே பெரிய விஷயமாக இருந்தது. அப்படியொரு தொடரிலும் பல பேட்ஸ்மேன்கள் மிகச் சிறப்பாக விளையாடி தங்கள் திறமையை நிரூபித்திருக்கிறார்கள். அவர்களுள் டாப் 10 பட்டியலுக்குள் நுழைந்தவர்கள் யார்?

1. ரஹ்மானுல்லா குர்பாஸ், ஆப்கானிஸ்தான்

ரஹ்மானுல்லா குர்பாஸ்
ரஹ்மானுல்லா குர்பாஸ்

இன்னிங்ஸ்: 8
ரன்கள்: 281
ஒரு உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன் ஒருவர் டாப் ரன் ஸ்கோரராக வந்திருப்பது சாதாரண விஷயம் இல்லை. அவர்களின் மிடில் ஆர்டர் மிகவும் சுமாராக இருந்த நிலையில், தன்னுடைய ஆட்டத்தாலேயே அவர்கள் பேட்டிங்குக்கு உயிர் கொடுத்தார் குர்பாஸ். கடினமான ஆடுகளங்களில் கிட்டத்தட்ட 130 என்ற ஸ்டிரைக் ரேட்டில் 3 அரைசதங்களோடு 281 ரன்கள் அடித்திருப்பது சாதாரண பேட்டிங் அல்ல. 16 சிக்ஸர்களோடு அதிக சிக்ஸர்கள் பட்டியலிலும் இரண்டாவது இடம் பிடித்திருக்கிறார் இந்த இளம் வீரர்!

2. ரோஹித் ஷர்மா, இந்தியா

ரோஹித் ஷர்மா
ரோஹித் ஷர்மாRicardo Mazalan

இன்னிங்ஸ்: 8
ரன்கள்: 257
தன் மீது உலகக் கோப்பைக்கு முன்பாக இருந்த விமர்சனங்களையெல்லாம் அசத்தல் பேட்டிங்கால் ஊதித் தள்ளியிருக்கிறார் ரோஹித். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி சூப்பர் 8 போட்டியிலும், இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியிலும் இவர் ஆடிய ஆட்டம் நிச்சயம் இன்னும் சில காலம் பேசப்படும். இந்திய அணிக்கு தொடர்ந்து நல்ல தொடக்கங்கள் கொடுத்தவர், கோலியின் தடுமாற்றம் இந்திய அணியை பாதிக்காமலும் பார்த்துக்கொண்டார். இந்த உலகக் கோப்பையில் 156 என்ற ஸ்டிரைக் ரேட் எல்லாம் சாதாரண விஷயம் அல்ல!

3. டிராவிஸ் ஹெட், ஆஸ்திரேலியா

டிராவிஸ் ஹெட்
டிராவிஸ் ஹெட்

இன்னிங்ஸ்: 7
ரன்கள்: 255
கிட்டத்தட்ட அனைத்து போட்டிகளிலுமே நல்ல தொடக்கங்கள் கொடுத்தார் ஹெட். அதைப் பயன்படுத்தி நன்றாக செயல்பட்டது ஆஸ்திரேலியா. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அவர் டக் அவுட் ஆக, அந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய பேட்டிங் மொத்தமாக சொதப்பியது. இதுவே ஆஸ்திரேலியாவின் செயல்பாட்டுக்கு ஹெட்டின் பங்களிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும். இந்த உலகக் கோப்பையில் அதிக ஃபோர்கள் (26) அடித்தவர் இவர் தான்!

4. குவின்டன் டி காக், தென்னாப்பிரிக்கா

Quinton de Kock
Quinton de KockRamon Espinosa

இன்னிங்ஸ்: 9
ரன்கள்: 243
தென்னாப்பிரிக்காவின் டாப் ஆர்டர் தொடர்ந்து தடுமாற, அதற்கு கொஞ்சமேனும் ஆறுதலாய் இருந்தது டி காக் தான். லீக் சுற்றில் மொத்தமே 48 ரன்கள் தான் அடித்திருந்தவர், சூப்பர் 8 தொடங்கியதும் விஸ்வரூபம் எடுத்தார். இறுதிப் போட்டியிலுமே கூட சூழ்நிலை அறிந்து நல்லதொரு இன்னிங்ஸைக் கட்டமைத்தார் டி காக். இங்கிலாந்துக்கு எதிராக அவர் அடித்த 65 ரன்கள் இந்த சீசனின் மிகமுக்கியமான இன்னிங்ஸ்களுள் ஒன்று.

5. இப்ராஹிம் ஜத்தான், ஆப்கானிஸ்தான்

இப்ராஹிம் ஜத்தான்
இப்ராஹிம் ஜத்தான்

இன்னிங்ஸ்: 8
ரன்கள்: 231
டாப் 5ல் இன்னொரு ஆப்கானிஸ்தான் வீரர்! குர்பாஸுடன் இணைந்து தொடர்ந்து அந்த அணிக்கு நல்ல தொடக்கங்கள் ஏற்படுத்திக் கொடுத்தார். இந்த இளம் வயதில் அணியின் தேவை உணர்ந்து இவர் ஆடிய விதம் நிச்சயம் பாராட்டப்படவேண்டியது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் அடித்த அரைசதம் இவர் வாழ்நாளில் மிகமுக்கியமான இன்னிங்ஸ்களில் ஒன்றாக இருக்கும்.

6. நிகோலஸ் பூரண், வெஸ்ட் இண்டீஸ்

நிகோலஸ் பூரண்
நிகோலஸ் பூரண்

இன்னிங்ஸ்: 7
ரன்கள்: 228
உண்மையைச் சொல்லவேண்டுமெனில் பூரண் தரத்துக்கு இது ஏமாற்றம் தரக்கூடிய ஒரு உலகக் கோப்பை தான். அவர் அடித்த 228 ரன்களில் 98 ஒரே இன்னிங்ஸில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக எடுக்கப்பட்டது. மற்ற போட்டிகளில் அவரால் தன்னுடைய மேஜிக்கை அரங்கேற்ற முடியவில்லை. இருந்தாலும் அந்த ஆப்கானிஸ்தான் போட்டியில் ரன் அவுட் ஆகாமல் இருந்திருந்தால் இந்த உலகக் கோப்பையில் ஒரு சதத்தையாவது பார்த்திருக்கலாம்.

7. ஆண்ட்ரே கஸ், அமெரிக்கா

ஆண்ட்ரே கஸ்
ஆண்ட்ரே கஸ்

இன்னிங்ஸ்: 6
ரன்கள்: 219
அமெரிகக் அணி அசத்தலாக சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைய கஸ் மிகமுக்கியக் காரணமாக விளங்கினார். 151.03 என அற்புதமான ஸ்டிரைக் ரேட்டில் 43.80 என்ற அசத்தலான சராசரியில் ஸ்கோர் செய்த அவர், சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்காவுக்கு சற்று பயம் காட்டினார். எந்த பயமும் இல்லாமல் எல்லா பௌலர்களையும் அட்டாக் செய்த அவர் ஆட்டத்துக்கு மிகப் பெரிய சல்யூட்.

8. ஜாஸ் பட்லர்

 Jos Buttler
Jos ButtlerRamon Espinosa

இன்னிங்ஸ்: 7
ரன்கள்: 218
பட்லரிடம் இருந்து தொடர்ந்து சீரான தொடக்கங்கள் இங்கிலாந்துக்குக் கிடைக்கவில்லை. ஆரம்பத்திலிருந்தே அட்டாக் செய்த அவர் சில போட்டிகளில் விரைவிலேயே ஆட்டமிழக்கவேண்டியிருந்தது. அமெரிக்காவுக்கு எதிரான போட்டியிலும் மட்டும் ஆட்டமிழக்காமல் 83 ரன்கள் அடித்த அவர் தான் நம் டாப் 10 பட்டியலில் அதிக ஸ்டிரைக் ரேட் (158.51) வைத்திருக்கும் பேட்ஸ்மேன்.

9. சூர்யகுமார் யாதவ்

Suryakumar Yadav
Suryakumar YadavRamon Espinosa

இன்னிங்ஸ்: 8
ரன்கள்: 199
வழக்கத்தும் மாறாக நான்காவது வீரராகக் களமிறக்கப்பட்ட சூர்யா, சில முக்கியமான இன்னிங்ஸ்கள் ஆடினார். அமெரிக்காவுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் எதிராக அரைசதங்கள் அடித்த அவர், இங்கிலாந்துக்கு எதிராக 47 ரன்களுக்கு அவுட் ஆனார். இருந்தாலும் கேப்டன் ரோஹித் உடன் இணைந்து மிகமுக்கிய பார்ட்னர்ஷிப் அமைத்தார். அந்த பார்ட்னர்ஷிப்பே இந்தியா வெற்றி பெற மிகமுக்கியக் காரணமாக அமைந்தது.

10. எய்ன்ரிக் கிளாசன்

Heinrich Klaasen
Heinrich KlaasenRamon Espinosa

இன்னிங்ஸ்: 8
ரன்கள்: 190
கடினமான ஆடுகளங்களின் காரணமாக கிளாசனால் தன் அதிரடியை முழுமையாக உலகக் கோப்பையில் காட்ட முடியவில்லை. இருந்தாலும் அதையெல்லாம் சரிகட்டும் விதம் இறுதிப் போட்டியில் இந்திய பௌலர்களைப் பந்தாடினார் அவர். தென்னாப்பிரிக்காவுக்கு முதல் உலகக் கோப்பையை வென்று தரும் வாய்ப்பு மிக அருகில் இருந்தபோது அவர் அவுட் ஆனது நிச்சயம் அவருக்கு பாரமாய் இருக்கும்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com