2024 ஐபிஎல் தொடரில் பல சர்ச்சைகள் இருந்தாலும், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான போட்டியில் டாஸ் போடுவதில் மிகப்பெரிய சர்ச்சை ஏற்பட்டது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதிய போட்டியில் தான் டாஸ் ஃபிக்சிங் என்ற சர்ச்சை பூதாகரமாக வெடித்தது. அந்த முக்கியமான போட்டியில் டாஸ் ரெஃப்ரியாக இருந்த ஜவகல் ஸ்ரீநாத், டாஸ் போடும் போது காய்னை தலைகீழாக திருப்பி பார்த்து முடிவை சொன்னார். அந்த நேரத்தில் அதைப்பார்த்த டூபிளெசிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை, ஆனால் மும்பை அணி ஏமாற்றிவிட்டதாக சில ரசிகர்கள் குற்றஞ்சாட்டினர், அந்த போட்டியில் அடுத்தடுத்து அம்பயர்கள் செய்த தவறான முடிவுகள் ரசிகர்களை அதிருப்தியடைய செய்தது.
இந்த பிரச்னை அத்துடன் நிற்காமல், கொல்கத்தா அணிக்கு எதிரான மும்பை போட்டியிலும் டாஸ் ரிசல்ட்டை கேமரா கவர் செய்வதற்குள் ரெஃப்ரி காய்னை மறைத்து எடுத்தது மீண்டும் சர்ச்சையானது. அதையும் மீறி சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி டாஸ் போடுவதில் ஏமாற்றியதை பாட் கம்மின்ஸ் இடம் சொல்லிகொண்டிருந்தார் ஆர்சிபி கேப்டன் டூபிளெசிஸ்.
டூபிளெசி பேசிய அந்த வீடியோ வைரலான நிலையில், கிட்டத்தட்ட 2 நாட்களுக்கு “Umpires Indians" என்ற ஹாஸ்டேக்கை ரசிகர்கள் டிரெண்டிங்கிலேயே வைத்திருந்தனர். டாஸ் காய்னை திருப்பி பார்த்து ஜவகல் ஸ்ரீநாத் சொன்னதற்கு யாரும் எந்த கருத்தும், அதுகுறித்த எந்த விளக்கமும் அளிக்கவில்லை. கடைசிவரை அந்த சம்பவம் சர்ச்சையாகவே மறைந்து போனது.
ஆனால் அதற்கு அடுத்த போட்டியில் கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் டாஸ் காய்னை குனிந்து பார்த்து முத்தமிட்டது மீண்டும் வைரலானது. அடுத்தடுத்த போட்டிகளில் அனைத்து கேப்டன்களும் டாஸ் முடிவை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்துவிட்டனர். இந்த சம்பவங்களுக்கு பிறகு நீங்க என்ன பார்க்குறது நானே காட்டுகிறேன் என கேமரா மேன் டாஸ் முடிவை பொது கேமாராவில் டிஸ்பிளே செய்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
அதிகப்படியாக பேசுபொருளாக மாறிய மற்றொரு விசயம், முன்னாள் சிஎஸ்கே கேப்டன் MS தோனி, தான் பந்தை எதிர்கொள்ள நியூசிலாந்தின் நட்சத்திர பேட்ஸ்மேனான டேரில் மிட்செல்லை திருப்பி அனுப்பியது சர்ச்சைக்குரிய விசயமாக மாறியது.
2024 ஐபிஎல் தொடரில் கேப்டன் பதவியிலிருந்து விலகிய மகேந்திர சிங் தோனி, ஃபினிசிங் வீரராக மட்டுமே விளையாடினார். அதும் கடைசி 2 ஓவர்களுக்கு பேட்டிங் வந்து குறைவான பந்துகளில் இரண்டு-மூன்று பெரிய ஷாட்களை அடிப்பது மட்டுமே அவருடைய வேலையாக இருந்தது. அவருடைய உடல்நிலை காரணமாக நீண்ட இன்னிங்ஸை அவரால் விளையாட முடியாது என்று நிர்வாகம் கூறியது.
இத்தகைய சூழலில் CSK vs PBKS போட்டியின் போது 18வது மற்றும் 20வது ஓவரில் விளையாடிய தோனியின் பேட்டிங் தற்செயலாக சீசனின் பெரிய பேசுபொருளாக மாறியது. முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணியில் 20வது ஓவரில் பேட்டிங் செய்துகொண்டிருந்த தோனி, அர்ஷ்தீப் சிங் வீசிய இரண்டாவது பந்துக்கு ஒருரன் இருந்தபோதும் ரன்னுக்கு செல்வதில் பெரிய ஆர்வம் காட்டவில்லை. எளிதில் பெறக்கூடிய ஒரு ரன்னுக்கு டேரில் மிட்செல் மறுமுனைக்கே ஓடிச்சென்றுவிட்டார், ஆனால் திரும்பி போ திரும்பி போ என தோனி கத்த டேரில் மிட்செல் மீண்டும் மறுமுனைக்கே ஓடிவந்துவிட்டார். கிட்டத்தட்ட அவர் 2 ரன்களை ஓடிமுடித்துவிட்டார், தோனியின் இந்த செயலுக்கு ரசிகர்களிடையே கண்டனம் எழுந்தது. டேரில் மிட்செல் அதற்கும் முந்தைய போட்டியில் தான் அரைசதம் அடித்திருந்தார்.
தோனியின் இந்த செயலை பார்த்த ரசிகர்கள், ஒருவேளை எதிர்முனையில் பவுலர்கள் நின்றிருந்தால் பரவாயில்லை, ஆனால் டேரில் மிட்செல் ஒரு இண்டர்நேசனல் வீரர் தானே, தோனி செய்தது மிகப்பெரிய தவறு என்று விமர்சித்தனர்.
ஐபிஎல் வரலாற்றில் ஒரு விசயம் ஒரு மாதத்தையும் கடந்து பேசுபொருளாக இருந்தது என்றால், அது ஹர்திக் பாண்டியா மற்றும் ரோகித் சர்மா இடையேயான கேப்டன்சி மாற்றம் தான். 5 கோப்பைகளை வென்ற ரோகித் சர்மாவை கட்டாயமாக கேப்டன் பதிவியிலிருந்து கீழிறக்கிய மும்பை அணி நிர்வாகம், கேப்டன்சி பொறுப்பை தூக்கி ஹர்திக் பாண்டியாவிடம் ஒப்படைத்தது.
அதிலிருந்தே ரோகித் சர்மா ரசிகர்களுக்கும் ஹர்திக் பாண்டியாவிற்குமான மோதல் என்பது சொல்லிக்கொள்ளும் விதத்திற்கும் மோசமாகவே இருந்தது. ஹர்திக் பாண்டியா மைதானத்திற்கு வந்தாலே “Boooooooooo" என சத்தமிட்டு எதிர்ப்பை வெளிப்படுத்திய ரசிகர்கள், ஒரு நாய் மைதானத்திற்குள் வந்த போது அதனையும் ”ஹர்திக் ஹர்திக்” என முழக்கமிட்டு வெறுப்பின் உச்சிக்கே சென்றனர்.
ரசிகர்கள் தான் ஒருபக்கம் மோசமாக நடந்துகொள்கிறார்கள் என்றால், ஹர்திக் பாண்டியாவும் ரோகித் சர்மாவை பவுண்டரி லைனுக்கு அலைக்கழிப்பது, பும்ராவிற்கு ஓவர் கொடுக்காமல் தானே முதல் ஓவரை வீசுவது என பல சர்ச்சைக்குரிய விசயங்களில் ஈடுபட்டார். ஹர்திக் பாண்டியாவின் இந்த செயலால் ரோகித் சர்மாவிற்கு ஆதரவாகவும், ஹர்திக்கிற்கு ஆதரவாகவும் மும்பை அணியே இரண்டாக பிரித்துவிட்டதாக தகவல் வெளியானது. போதாக்குறைக்கு களத்திலேயே சொந்த அணி வீரர்கள் ஹர்திக் பாண்டியாவிற்கு மதிப்பளிக்காதது பலமுறை நடந்தது.
இவை அனைத்திலும் பெரிய சர்ச்சையாக அமைந்தது ரோகித்தை பவுண்டரி லைனுக்கு அலைக்கழித்தது தான். MI vs GT அணிகளுக்கு இடையேயான போட்டியில், “ ஃபீல்டிங்கின் போது 30 யார்ட் வட்டத்தில் இருந்த ரோகித் சர்மாவை திடீரென லாங்க்-ஆன் ஃபீல்டிங்கிற்கு செல்லுமாறு ஹர்திக் பாண்டியா உத்தரவிட்டார். அதை சற்றும் எதிர்ப்பாராத ரோகித் பின்னால் திரும்பி பார்த்துவிட்டு ‘என்னையா கூறுகிறாய்?’ என்று அதிர்ச்சியுடன் கேட்டார். ‘ஆமாம் சென்று லாங்க்-ஆனில் நில்லுங்கள்’ என ஹர்திக் சொல்ல, வேகமாக சென்று எல்லைக்கோட்டுக்கு அருகில் நின்றார் ரோகித். ஆனால் ‘அங்கு நிற்காதீங்க, தள்ளி நில்லுங்க’ என்று அங்கும் இங்குமாக ரோகித்தை ஹர்திக் அலையவிட, அந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்த ரோகித் சர்மா ரசிகர்கள், கண்ணீர் ஸ்மைலியை பதிவிட்டு” நீங்க மரியாதை கொடுக்கும் வேறு அணிக்கு செல்லுங்கள் ரோகித் சர்மா என வருத்தத்தை வெளிப்படுத்தினர்.
பெரும்பாலான ரசிகர்களுக்கு 2024 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி எப்போது நடைபெற்றது என்று கேட்டால், ஆர்சிபி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டிதான் பைனல் போட்டி என்று கூறுவார்கள். அந்தளவு குவாலிஃபையர் 1, எலிமினேட்டர், குவாலிஃபையர் 2 மற்றும் பைனல் என அனைத்து முக்கியமான போட்டிகளும் கொடுக்க வேண்டிய சுவாரசியத்தை RCB vs CSK அணிகளுக்கு இடையேயான போட்டி கொடுத்துவிட்டது என்று சொன்னால் அது பொய்யாகாது.
சிஎஸ்கே அல்லது ஆர்சிபி இரண்டில் வெற்றிபெறும் ஒரு அணி அரையிறுதிக்கு தகுதிபெறும் என்பதால் அதிகப்படியான எதிர்ப்பார்ப்புடன் போட்டி தொடங்கப்பட்டது. ஆர்சிபி அணி 218 ரன்கள் குவிக்க, சிஎஸ்கே அணி 201 ரன்கள் அடித்தால் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும், ஒருவேளை 201 ரன்னுக்குள் சிஎஸ்கேவை சுருட்டிவிட்டால் ஆர்சிபி அணி அரையிறுதிக்கு செல்லும் என்றநிலை உருவானது. இரண்டாவது பேட்டிங் செய்த சிஎஸ்கே அணிக்கு பிளேஆஃப் செல்ல கடைசி 6 பந்தில் 17 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் தோனி மற்றும் ஜடேஜா இருக்கிறார்கள், ஆர்சிபி அணியிடம் பெரிதாக கண்டண்ட் செய்யும் பவுலர் இல்லை என்பதால் சிஎஸ்கே அணிதான் வெற்றிபெறும் என்ற சூழல் இருந்தது.
கடைசிஓவரை யஷ் தயாள் வீச, முதல் பந்தை எதிர்கொண்ட தோனி முதல் பந்தையே ஸ்டேடியத்திற்கு வெளியே தூக்கி சிக்சருக்கு பறக்கவிட, 5 பந்துகளுக்கு 11 ரன்கள் என மாறியது போட்டி. ஆனால் அடுத்த பந்திலேயே தோனி அவுட்டாகி செல்ல, மீதமுள்ள 4 பந்துகளையும் யஷ் தயாள் சிறப்பாக வீச ஆர்சிபி அணி சிஎஸ்கேவை வீழ்த்தி பிளேஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றது.
ஆர்சிபி அணி பிளேஆஃப் செல்ல 1% வாய்ப்பு மட்டுமே இருந்த இடத்திலிருந்து 6 போட்டிகளில் வரிசையாக வென்று, ஐபிஎல் வரலாற்றில் சிறந்த கம்பேக் கொடுத்த ஆர்சிபி அணி அதீத கொண்டாட்டத்தை வெளிப்படுத்தியது. ஏதோ கோப்பையை வென்றது போல அதிக நேரம் ஆர்சிபி அணி கொண்டாட்டத்தை வெளிப்படுத்த, எதிரணி வீரர்களுக்கு கைக்கொடுப்பதற்காக காத்திருந்த தோனி நேரம் சென்றதும் கைக்கொடுக்காமல் பெவிலியன் சென்றுவிட்டார்.
பொதுவாக வெற்றிபெற்ற அணியின் கொண்டாட்டம் 1 நிமிடம் மட்டுமே இருக்கும், ஆனால் ஆர்சிபி வீரர்கள் 3 நிமிடங்களாக வெற்றியை கொண்டாடிய நிலையில், தோனி காத்திருந்துவிட்டு மைதானத்திலிருந்து வெளியேறிவிட்டார். ஆனால் தோனி செய்த இந்தவிசயம் பேசுபொருளாக மாறியது, மற்றவீரர்கள் நிற்கும் போது அவர் மட்டும் சென்றுவிட்டதை எப்படி நியாயப்படுத்துகிறீர்கள் என பல்வேறு தரப்பினர் விமர்சனம் செய்தனர்.
சஞ்சு சாம்சன் சிக்ஸ் லைன் கேட்ச்: ஐபிஎல்லில் எப்போதும் இல்லாத வகையில் ஸ்மார்ட் ரிவ்யூ சிஸ்டம் இருந்தபோதும், 2024 ஐபிஎல் தொடரில் பல்வேறு சர்ச்சைக்குரிய முடிவுகளை கள நடுவர்கள் மற்றும் மூன்றாவது நடுவர்கள் வழங்கினர்.
அதில் முக்கியமாக டேல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு அவுட் வழங்கப்பட்டது பேசுபொருளாக மாறியது. 222 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணியில், கேப்டன் சஞ்சு சாம்சன் 8 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 86 ரன்களுடன் சேஸிங்கை உயிர்ப்புடன் வைத்திருந்தார். 15 ஓவர்களுக்கே 160 ரன்களை ராஜஸ்தான் எட்ட முக்கியமான கட்டத்தில் போட்டி இருந்தது. அப்போது முகேஷ் குமார் வீசிய 16வது ஓவரின் 4வது பந்தை சஞ்சு சாம்சன் சிக்சருக்கு தூக்கியடிக்க, பவுண்டரி லைனில் நின்றுகொண்டிருந்த சாய் ஹோப் ஒரு அசத்தலான கேட்ச்சை எடுத்தார்.
களநடுவர் முடிவுக்காக மூன்றாவது அம்பயருக்கு செல்ல, ஸ்மார்ட் ரிவ்யூவில் சாய் ஹோப் பந்தை பிடிக்கும் போது பவுண்டரி லைனில் கால் வைத்தது போல தெரிந்தது, ஆனால் பவுண்டரி லைனில் இருக்கும் குஸ்ஸனில் எந்தவிதமான மாற்றமும் தெரியாததால் மூன்றாவது நடுவர் அவுட் என்ற முடிவுக்கு சென்றார். ஆனால் ஸ்மார்ட் ரிவ்யூ சிஸ்டம் இருந்தும் மூன்றாவது நடுவர் ஒரேயொரு கோணத்தில் மட்டும் முடிவை ஆராய்ந்தார். அதனால் திருப்தியடையாத சஞ்சு சாம்சன், மீண்டும் ரிவ்யூ செய்யும்படி களநடுவரிடம் வாதிட்டார். ஆனால் மீண்டும் ரிவ்யூ செய்யமுடியாது என களநடுவர்கள் சஞ்சு சாம்சனுக்கு அவுட் கொடுத்து வெளியேற்றினர். அந்தபோட்டியில் ராஜஸ்தான் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
ஒருவேளை அந்த போட்டியில் ராஜஸ்தான் வெற்றிபெற்றிருந்தால் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியிருக்கும். அப்படியானால் அவர்கள் பிளே ஆஃப் சுற்றில் இரண்டு வாய்ப்பை பெற்றிருப்பார்கள், அப்படி பெற்றிருந்தால் பைனல் செல்லும் வாய்ப்பு ஆர்ஆர் அணிக்கு ஏற்பட்டிருக்கும். அம்பயரிடம் வாக்குவாதம் செய்ததால் போட்டியில் 30% கட்டணம் சஞ்சு சாம்சனுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.