10 அணிகள் பங்குபெற்று விளையாடும் நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ‘தல’ தோனி உள்ளார். அவர், இந்த சீசனுடன் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெற்றுவிடுவார் எனப் பலரும் தெரிவித்து வரும் நிலையில், அவரும் அதற்கான சமிக்ஞைகளை தன் பேட்டிகளில் மறைமுகமாக வெளிப்படுத்தி வருகிறார்.
அதேநேரத்தில், அவர் இந்த ஆண்டு ஓய்வுபெற மாட்டார் என ஆணித்தரமாக அடித்துக் கூறுபவர்களும் உள்ளார்கள். அதில் ஒருவராக ஆஸ்திரேலிய முன்னாள் பந்துவீச்சாளர் பிரெட் லீயும் உள்ளார்.
இதுகுறித்து அவர், “தோனி, சென்னை தவிர எங்கு விளையாடினாலும், எந்த மைதானத்தில் பேட்டிங் செய்தாலும் அவருக்கு உலகம் முழுவதும் இருக்கும் ரசிகர்கள் அவரது ஆட்டத்தை ஆர்வமுடனே பார்க்கின்றனர். அந்த ஆர்வம் கிரிக்கெட்டில் வரவேற்கக்கூடியது.
குறிப்பாக, கொல்கத்தாவில் நடைபெற்ற கடந்த போட்டியின்போது ரசிகர்கள் பலர் மஞ்சள் ஜெர்சி அணிந்து தோனிக்கு ஆதரவு அளித்தனர். அது மிகவும் சிறப்பானது. காரணம், தோனிக்காக அவர்கள் ஆதரவு கொடுக்கின்றனர். இந்த சீசனில் அவர் சிறப்பாக விளையாடுவதால் அவரது ஆட்டம் என்னை மிகவும் கவர்ந்துள்ளது.
ஆதலால், இந்த சீசன் அவருக்கு இறுதியாக இருக்காது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அவர் இன்னும் ஒரு வருடம் விளையாடுவார். மே 28 அவருடைய கடைசி போட்டியாக இருக்காது என்று நம்புகிறேன். அதற்கு உதாரணமாய் தற்போது புதிதாய் வந்திருக்கும் இம்பேக்ட் விதிமுறை இன்னும் ஒருசில ஆண்டுகள் மேலும் விளையாடுவதற்கு உதவி செய்யும். இந்த விதிமுறை கிரிக்கெட்டில் வரவேற்கக்கூடிய ஒன்று.
மேலும் தோனி, சென்னை அணியை ஒரு குடும்பத்தைப்போல் வழிநடத்துகிறார். துஷார் தேஷ்பாண்டே போன்ற இளம்வீரர்கள், பள்ளிக்குச் சென்று கல்வி கற்று தேர்ச்சி பெறுவதைப்போல தோனியிடமிருந்து நன்கு பயிற்சி பெற்று வெளியேறுகின்றனர். இந்த வருடம் அவருடைய கேப்டன்ஷிப் மிகச் சிறப்பாக உள்ளது. அந்த வகையில், மிகச் சிறந்த கேப்டனான அவர் பலரின் ரோல் மாடலாக திகழ்கிறார்” எனத் தெரிவித்துள்ளார்.