பல இளம் வீரர்களை உருவாக்குவதில், ஐபிஎல் முக்கியத்துவம் பெறுகிறது. இதன்மூலம் சர்வதேச அளவில் பல வீரர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தி கிரிக்கெட்டில் சாதனைகள் படைக்கின்றனர். அதேநேரத்தில், ஒரு சில போட்டிகளில் ஏற்படும் தவறுகளால், சில வீரர்களின் எதிர்காலமும் பாழாகிறது. என்றாலும், அதைத் திருத்திக் கொள்வதற்கும், அதிலிருந்து வீரர்கள் முன்னேறி வருவதற்கும் கடுமையான பயிற்சிகளும் வழிமுறைகளும் வழங்கப்படுகின்றன.
இந்த நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் முறையாக மும்பை அணியில் இடம்பெற்றிருந்த ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் ஆரம்பத்தில், ஒரு ஓவரில் 31 ரன்களை வழங்கி, மோசமான சாதனை பட்டியலில் இடம்பிடித்தார். இதையடுத்து அவரது பந்துவீச்சு குறித்து பலராலும் விமர்சிக்கப்பட்டது. என்றாலும் அர்ஜுனுக்கு தொடர்ந்து வாய்ப்பு அளித்தார், கேப்டன் ரோகித் சர்மா.
அதன்படி, தொடக்க ஓவரைச் சிறப்பாக வீசி அணிக்கு பலம் சேர்த்தார், அர்ஜுன் டெண்டுல்கர். ஆனாலும் இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை, அதற்குப் பிறகு அர்ஜுனுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அதேநேரத்தில், அர்ஜுன் தொடர்ந்து வேகமாய் பந்துவீசுவதற்கு பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என ரோகித் சர்மா சொன்னதாகவும், அதற்காக அர்ஜுன் பயிற்சி மேற்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், அர்ஜுன் டெண்டுல்கரின் இடது கையை நாய் ஒன்று கடித்துள்ளது. இதில் அவருக்கு காயம் ஏற்பட்டதையடுத்து, அவரால் தொடர்ந்து பவுலிங் பயிற்சியில் ஈடுபட முடியாமல் உள்ளார். ஏற்கெனவே ஒருசில போட்டிகளில் மட்டுமே விளையாண்ட அர்ஜுன் டெண்டுல்கர், தொடர்ந்து நடப்பு சீசனில் விளையாட முடியாமல் அவதியுற்றிருப்பது ரசிகர்களுக்கு வருத்தத்தைத் தந்துள்ளது.