இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமில்லாமல் உலக கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருந்த 2025 ஐபிஎல் திருவிழாவிற்கான மெகா வீரர்கள் ஏலமானது இன்றும், நாளையும் ( நவம்பர் 24 - 25) என இரண்டு நாட்கள் நடைபெறவிருக்கிறது.
ஒவ்வொரு அணிக்கும் 120 கோடி ஏலத்தொகை மற்றும் 6 ஆர்டிஎம் கார்டு ஆப்சன்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், 10 ஐபிஎல் அணிகளும் அவர்களுக்கான அணியை கட்டமைக்கும் முயற்சியில் இன்று ஏலத்தில் வீரர்களை வாங்கவுள்ளனர்.
367 இந்திய வீரர்கள், 210 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 577 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கும் நிலையில், ரிஷப் பண்ட், கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் முதலிய 3 இந்திய ஸ்டார் வீரர்கள் மிகப்பெரிய ஏலத்திற்கு செல்வார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்டது. அதுபோலவே தற்போது ஏலத்திற்கு சென்றுள்ளார்கள் அவர்கள். அதனை காணலாம்...
இன்றைய நாள் ஐபிஎல் ஏலமானது 3.30 PM மணி முதல் 10.30 PM வரை நடக்கிறது.
கேப்டன்சி மெட்டீரியல் மற்றும் சிறந்த மிடில் ஆர்டர் வீரர் என்பதாலும், கடந்த 2024 ஐபிஎல் கோப்பையை வென்ற கேப்டன் என்பதாலும் ஸ்ரேயாஸ் ஐயருக்கான ஏலமானது பரபரப்பாக நடைபெற்றது.
கேப்டன் தேவை என்பதால் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் இரண்டு அணிகளும் 26 கோடியை தாண்டி ஸ்ரேயாஸ் ஐயருக்கு போட்டி போட்டனர். இறுதிபிட்டாக பஞ்சாப் கிங்ஸ் ரூ.26.75 கோடி கேட்ட நிலையில், அதற்குமேல் சொல்லாமல் டெல்லி கேபிடல்ஸ் அணி பின்வாங்கியது. இறுதியாக ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச விலையாக ரூ.26.75 கோடிக்கு ஸ்ரேயாஸ் ஐயரை தட்டித்தூக்கியது பஞ்சாப் கிங் அணி.
கடந்த 2024 ஐபிஎல் ஏலத்தில் மிட்செல் ஸ்டார்க் 24.75 கோடிக்கு வாங்கப்பட்ட நிலையில், அதை முறியடித்தார் ஸ்ரேயாஸ் ஐயர்.
ஜோஸ் பட்லருக்கு இறுதிவரை பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் போட்டிப்போட்ட நிலையில், இறுதியாக ரூ.15.75 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி விலைக்கு வாங்கியது.
கடந்த 2024 ஐபிஎல் ஏலத்தில் அதிகபட்ச தொகையான 24.75 கோடிக்கு சென்ற மிட்செல் ஸ்டார்க், 2025 ஐபிஎல் ஏலத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியால் 11.75 கோடிக்கு வாங்கப்பட்டார். ஆர்சிபி மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே பிட் சென்ற நிலையில், இறுதியாக டெல்லி கேபிடல்ஸ் தட்டிச்சென்றது.
ஸ்ரேயாஸ் ஐயர் ஐபிஎல் ஏலத்தின் அதிகபட்ச விலையாக ரூ.26.75 கோடிக்கு வாங்கப்பட்ட நிலையில், அதற்கு அடுத்த பட்டியலில் இடம்பெற்ற ரிஷப் பண்ட் அதனை சிறிதுநேரத்திலேயே முறியடித்து ரூ.27 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார்.
சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே 20.50 கோடிவரை பிட் வார் நடைபெற்ற நிலையில், இறுதியாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20.75 கோடிக்கு சீல் செய்தது.
ஆனால் RTM வாய்ப்பு டெல்லிக்கு இருந்த நிலையில் அவர்கள் ரிஷப் பண்ட்டை தக்கவைக்க முடிவு செய்தனர். ஆனால் இறுதி பிட்டாக ரூ.27 கோடியை அறிவித்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி டெல்லியை வாயடைக்க வைத்தது. முடிவில் ஐபிஎல் வரலாற்றின் அதிகபட்ச தொகையான ரூ.27 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு சென்றுள்ளார் ரிஷப் பண்ட்.