நடப்பு டி20 உலகக்கோப்பையை இந்திய அணி மீண்டும் வென்றிருக்கும் நிலையில், அதற்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்துவருகின்றன. என்றாலும், பார்படாஸில் ஏற்பட்ட புயல் காரணமாக விமானச் சேவை பாதிக்கப்பட்டதையடுத்து, இந்திய வீரர்கள் உடனடியாக நாடு திரும்ப முடியவில்லை.
இந்த நிலையில், 4 நாட்கள் தாமதத்திற்கு பிறகு நேற்று தாயகம் புறப்பட்ட இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள், இன்று காலை டெல்லி விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின்னர், அவர்கள் பிரதமர் மோடி அளித்த சிறப்பு விருந்தில் கலந்துகொண்டதுடன் அவருடன் உரையாடினர். தொடர்ந்து இன்று மாலை மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய வீரர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
இதில் பேசிய கேப்டன் ரோகித் சர்மா, ”இறுதிப்போட்டி முடிந்து நான்கு நாட்களுக்கு பிறகு இந்தியா வந்ததற்கு எங்களுக்கு சிறப்புமிக்க வரவேற்பை இந்திய மக்கள் எங்களுக்கு வழங்கியதற்கு நன்றி. குறிப்பாக, மும்பை வந்து இறங்கியதில் இருந்து ரசிகர்களின் அன்பு மழையில் நனைந்தது ஆச்சர்யம். உலகக் கோப்பை வென்று எப்போது திரும்பினாலும் மும்பை எங்களை ஏமாற்றாது. கடைசி ஓவர் வீசிய ஹர்திக் பாண்டியாவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
அவர் சிறப்பாக பந்துவீசி இந்தியாவுக்கு வெற்றியை தேடி கொடுத்தார். அதுபோல், சூர்யகுமார் யாதவின் கேட்ச் ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிட்டது. இப்படி ஓர் அணி கிடைத்ததற்கு எனக்கு அதிர்ஷ்டம் என்று நான் கருதுகிறேன். நான் ஒன்று இரண்டு வீரர்களை மட்டும் குறிப்பிட்டுச் சொல்ல விரும்பவில்லை. ஏனென்றால் ஒட்டுமொத்த அணியும் கடும் பயிற்சி செய்து இந்த உலகக் கோப்பையை வெல்ல காரணமாக இருந்தது” எனத் தெரிவித்தார்.