டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், சூப்பர் 8 சுற்றில், கடந்த ஜூன் மாதம் 22 ஆம் தேதி இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில், களமிறங்கிய இந்திய அணி, 5 விக்கெட்களை இழந்து 196 ரன்களை எடுத்தது. 197 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய பங்களாதேஷ் அணி 8 விக்கெட்களை இழந்து 146 ரன்களை மட்டுமே எடுத்து 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்தப் போட்டியில், பங்களாதேஷ் அணி டான்சிம் ஹாசன் சாஹிப் மற்றும் முஸ்தபிஷுர் ரஹ்மான் என இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களை மட்டுமே கொண்டு களமிறங்கியது. ஆனாலும் சுழலையும் சேர்த்து அந்த அணி 6 பந்துவீச்சாளர்களைக் கொண்டு விளையாடியது. மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான டஸ்கின் அஹமத் விளையாடவில்லை. இந்நிலையில் பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்தின் உயரதிகாரி ஒருவர், டஸ்கின் அஹமத், அந்தப் போட்டியின்போது அணியின் பேருந்தை தவறவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், அதிக நேரம் அவர் தூங்கிய நிலையில், அவரை தொடர்பு கொள்ளவும் இயலவில்லை என தெரிவித்துள்ளார். ஆனால், பின்னர் அணியிடம் அவர் மன்னிப்பு கேட்டார் என்றும், அவர் அணியின் பேருந்தை தவறவிட்டதால் தாமதமாகவே அணியுடன் இணைந்தார் என்றும் தெரிவித்துள்ளார். “சரியான நேரத்தில் எழுந்துகொள்ள முடியாததற்கு அவர் தனது அணியினர் மற்றும் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார். அவ்வளவுதான், அதில் எந்தப் பிரச்சனையும் இல்லை” என்றும் தெரிவித்தார்.
தலைமை பயிற்சியாளருக்கும் டஸ்கின் அஹமதுவுக்கும் இடையில் சிக்கல் எழுந்தள்ளதா என்ற கேள்விகள் எழுந்த நிலையில், பங்களாதேஷ் கிரிக்கெட் வாரிய உயரதிகாரி மறுப்பு தெரிவித்துள்ளார். இருவருக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை என்றும், தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்க வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். அதேசமயத்தில், அவர் ஏன் விளையாடவில்லை என்பதையும் பயிற்சியாளர் மட்டுமே தெரிவிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.