நேற்று நடந்த இறுதிப்போட்டியில், ஐபிஎல் கோப்பையை சிஎஸ்கே அணி 5ஆவது முறையாக வென்று சாதனைப் படைத்தாலும், சிஎஸ்கே அணியை தனது பேட்டிங் மூலம் கதிகலங்க வைத்தார் குஜராத் அணிக்காக விளையாடிய, 21 வயதேயான நம்ம சென்னை பையன் சாய் சுதர்சன்!
சிஎஸ்கேவுக்கு எதிரான நேற்றையப் போட்டியில் ருத்ரதாண்டவமாடிய சாய் சுதர்சன் 47 பந்துகளில் 96 ரன்களை விளாசி அசத்தினார். சிஎஸ்கே அணி சுப்மன் கில், சாஹா ஆகியோரை அவுட் செய்தபோதும், ஒரு பக்கம் இளம் வீரரான சாய் சுதர்சனை பெவிலியனுக்கு திரும்ப வைக்க முடியாமல் கஷ்டப்பட்டது. தேஷ் பாண்டே, பதிரானா, தீக்ஷனா என்ன எல்லா பவுலர்களையும் பாரபட்சமின்றி வெளுத்து வாங்கினார் சாய் சுதர்சன். பின்பு கடைசியாக 96 ரன்கள் எடுத்திருந்தபோது பதிரானா பந்துவீச்சில் அவுட்டானார்.
அதன்பின் நடந்த சிஎஸ்கேவின் அதிரிப்புதிரியான வெற்றியில், சாய் சுதர்சனின் அதிரடி எப்போதும் மங்கிவிடாது! உண்மையில் அவரது இன்னிங்ஸ் காலங்களுக்கும் பேசப்படும்.
சாய் சுதர்சனின் தந்தை தேசிய அளவில் தடகள வீரராக திகழ்ந்தவர். இந்தியாவுக்காக 1993 இல் நடைபெற்ற தெற்கு ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றவர். அவருடைய தாய் வாலிபால் வீராங்கனையாக திகழ்ந்தவர். இதனாலேயே இயல்பிலேயே விளையாட்டு மீது அவருக்கு ஆர்வமிருந்தது.
ஆனால் அவர் தேர்ந்தெடுத்த விளையாட்டு, கிரிக்கெட். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதால் பலரது கவனத்தை பெற்றார். இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சார்பாக சையத் முஷ்டக் அலி கோப்பையில் விளையாடினார்.
மேலும் வினோத் மன்கட் டிராபி, அண்டர் 19 சேலஞ்சர் டிராபி போன்ற தொடர்களிலும் தனது முத்திரையை பதித்துக் கொண்டே வந்தார் சாய் சுதர்சன். இதனையடுத்து தமிழ்நாடு ப்ரீமியர் லீக் டி20 தொடரிலும் இடம்பெற்றார் சாய் சுதர்சன்.
முதலில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு வாய்ப்பு கொடுக்கப்படாமல் இருந்தார். பின்பு, கோவை லைகா கிங்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். அப்போது சேலம் அணிக்கு எதிரான போட்டியில் 43 பந்துகளில் 87 ரன்கள் விளாசி கவனத்தை ஈர்த்தார். இதன் பின்பு எந்தத் தொடரிலும் சாய் சுதர்சன் பின்னடைவை சந்திக்கவில்லை.
இந்நிலையில் ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு ஒப்பந்தமானார் சாய் சுதர்சன். குஜராத் அணியில் காயமடைந்து நியுசிலாந்து திரும்பிய கேன் வில்லியம்சனுக்கு பதிலாக இடம் பிடித்த சாய் சுதர்சன். வலுவான ஓர் இடத்தை தக்க வைத்துக்கொண்டு நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
அதன் உச்சம்தான் நேற்று சிஎஸ்கேவுக்கு எதிரான அவரது ஆட்டம். அவரின் திறமை தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்டு, விரைவில் இந்திய அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கின்றனர் ரசிகர்கள்!