கொல்கத்தா அணிக்கு இருக்கும் கூடுதல் பலம் இதுதான்..2024 ஐபிஎல் தொடர் பரபரப்பான இறுதிப்போட்டியை எட்டியுள்ளது. தொடர் முழுவதும் அணியை சிறப்பாக வழிநடத்திய இரண்டு பெஸ்ட் கேப்டன்கள், தங்களுடைய அணியை இறுதிச்சுற்றுக்கு எடுத்துவந்துள்ளனர்.
இந்த இறுதிப்போட்டியானது சமபலம் கொண்ட இரு அணிகள், பாட் கம்மின்ஸ் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் முதலிய இரண்டு திறமையான கேப்டன்களுக்கு இடையேயான மோதல் என்பதை எல்லாம் தாண்டி, ஒரு சிறந்த பந்துவீச்சு மட்டும் சிறந்த பேட்டிங் வரிசைக்கு இடையேயான மோதலாகவும், இரண்டு திறமையான பயிற்சியாளர்களுக்கு இடையேயான மோதலாகவும் மாறியுள்ளது.
1. பாட் கம்மின்ஸ் vs ஷ்ரேயாஸ் ஐயர் - வீரர்கள் சொதப்பினாலும் அவர்கள் மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து வாய்ப்பை வழங்கி ஒரு வலுவான அணியை உருவாக்கியுள்ளனர்.
2. பேட்டிங் vs பவுலிங் - SRH பேட்டிங்கை பொறுத்தவரையில் டிராவிஸ் ஹெட் 567 ரன்கள், அபிஷேக் சர்மா 482 ரன்கள், ஹென்ரிச் க்ளாசன் 463 ரன்களும், KKR பவுலிங்கை பொறுத்தவரையில் வருண் சக்கரவர்த்தி 20 விக்கெட்டுகள், ஹர்சித் ரானா 17 விக்கெட்டுகள் மற்றும் சுனில் நரைன் 16 விக்கெட்டுகள் என சிறந்த மோதலாக இருக்கப்போகிறது.
3. டேனியல் விட்டோரி vs கவுதம் கம்பீர் - குவாலிஃபையர் 2 போட்டியில் டேனியல் விட்டோரி எடுத்த சிறந்த முடிவும், பேட்டிங்கில் கவுதம் கம்பீர் எடுத்த பாசிட்டிவ் நகர்த்தலும் அந்த அணிகளை இறுதிப்போட்டியில் நிறுத்தியுள்ளன.
4. எக்ஸ் ஃபேக்டர் வீரர்கள் - இரண்டு அணிகளிலும் இரண்டு எக்ஸ் ஃபேக்டர் வீரர்கள் இருக்கின்றன. SRH அணியில் பாட் கம்மின்ஸ், க்ளாசன் மற்றும் KKR அணியில் சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி முதலிய 4 வீரர்களும் ஆட்டத்தை திருப்பக்கூடிய வீரர்களாக இருக்கின்றனர்.
இறுதிப்போட்டி குறித்து ஜியோ சினிமாவில் பேசியிருக்கும் சுரேஷ் ரெய்னா, இந்திய மண்ணில் உலகக்கோப்பையை வென்ற பாட் கம்மின்ஸுக்கு இறுதிப்போட்டியில் அணியை எப்படி வழிநடத்த வேண்டும் என்பது தெரியும்.
பாட் கம்மின்ஸ் குறித்து பேசியிருக்கும் சுரேஷ் ரெய்னா, “SRH அணியின் முக்கியப் புள்ளியாக இருப்பது ஏற்கனவே உலகக் கோப்பையை வென்றுள்ள பாட் கம்மின்ஸ் தான் என்று நினைக்கிறேன். ஒரு இறுதிப்போட்டிக்கு எப்படி வீரர்களை தயார் செய்யவேண்டும், டிரஸ்ஸிங் ரூமை எப்படி பாசிட்டாவாக வைத்திருக்க வேண்டும் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். அவர்கள் ஒரு தெளிவான செயல்முறையைப் பின்பற்றினார்கள், தற்போது இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளார்கள், அவர்களுடைய வீரர்கள் அனைவருக்கும் என்ன செய்யவேண்டும் என்பது தெரியும். அனைத்திற்கும் அவர்கள் தெளிவாக ஏற்பாடு செய்துள்ளனர்" என்று ஜியோ சினிமா உடன் ரெய்னா கூறினார்.
சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணியின் பலம்குறித்து பேசிய சுரேஷ் ரெய்னா, கொல்கத்தா அணிக்கு இருக்கும் பலத்தை பற்றியும் வெளிப்படுத்தினார்.
KKR அணிக்கு இருக்கும் பலம் பற்றி பேசிய அவர், “கவுதம் கம்பீர் முன்னிலை வகிக்கும் கொல்கத்தா அணி, சென்னையில் நடந்த இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி கோப்பை வென்றது பெரிய நம்பிக்கையை கொடுக்கும்” என்று கூறினார்.
அதேநேரத்தில் பலம் வாய்ந்த கொல்கத்தா அணியை வீழ்த்த வேண்டும் என்றால் “சன்ரைசர்ஸ் அணி அவர்களுடைய முதலில் பேட்டிங் செய்து ரன்களை குவிக்கும் அணுகுமுறைக்கே செல்லவேண்டும், இறுதிப்போட்டியில் அது அவர்களுக்கு சாதகமாக அமையும்” என்று கூறியுள்ளார்.