“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!
IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew
கிட்டதட்ட, ‘தூக்கமின்மையால் அவதிப்படும் நோயாளிகள் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் மேட்ச்களைப் பார்க்கவும்’ என சீட்டு எழுதி தருகிற அளவிற்கு ஆடிக்கொண்டிருக்கிறது அந்த அணி. எல்லோரையும் தூங்க வைத்துவிட்டு, அசந்த நேரத்தில் ஆட்டத்தை ஆட்டையைப் போட்டுவிடுமா எனக் கேட்டால் அதுவும் இல்லை. ஏனெனில், ஐதராபாத் அணியினர்தான் முதலில் தூங்குவதே.
நேற்றிரவு, தங்கள் சொந்த ஊர் ரசிகர்களுக்கு தாலாட்டு பாட, ஐதராபாத் மைதானத்தில் நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதியது சன்ரைசர்ஸ். டாஸ் வென்ற கொல்கத்தா, பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது.
மீண்டும் சீட்டு குலுக்கிப் போட்டு புது ஓபனிங் ஜோடியை இறக்கினார் கேப்டன் ராணா. ஜேசன் ராயும், குர்பாஸும் கொல்கத்தாவின் இன்னிங்ஸைத் துவங்க, முதல் ஓவரை வீசவந்தார் புவி. முதல் ஓவரிலேயே இரண்டு பவுண்டரிகளை வெளுத்தார் ஜேசன் ராய். யான்சன் வீசிய 2வது ஓவரின் முதல் பந்திலேயே குர்பாஸ் காலி. ஆக, அடுத்த மேட்சில் மீண்டும் ஓபனிங் ஜோடியை மாற்றிவிடுவார் ராணா என்பது திட்டவட்டம். அடுத்து களமிறங்கிய வெங்கி, ஒரு பவுண்டரி அடித்துவிட்டு அதே ஓவரில் அவுட்டும் ஆனார். ஒரே ஓவரில் 2 விக்கெட்களை வீழ்த்தி கொல்கத்தாவை ஒச்சே அடி அடித்தார் யான்சன்.
3வது ஓவரை வீசிய புவி, மீண்டும் ஜேசன் ராய்க்கு ஒரு பவுண்டரி கொடுத்தார். யான்சனின் 4வது ஓவரில், முதல் பந்து நோ பாலில் பவுண்டரிக்கு பறந்தது. 5வது ஓவரை வீசிய கார்த்திக் தியாகி, ஜேசன் ராய்க்கு ஒரு பவுண்டரியை படையல் வைத்துவிட்டு, அடுத்த பந்தில் ஒரே போடாக போட்டார். 20 ரன்னில் அவரும் அவுட். அடுத்து களமிறங்கிய ரிங்கு, பவுண்டரியுடன் ஓவரை முடித்தார். யான்சன் வீசிய 6வது ஓவரை, பவுண்டரியுடன் தொடங்கினார் ராணா. பவர்ப்ளேயின் முடிவில் 49/3 என மல்லாக்க படுத்து விட்டத்தைப் பார்த்தது கொல்கத்தா.
கேப்டன் மார்க்ரம் வீசிய 7வது ஓவரில் பவுண்டரிகள் ஏதுமின்றி 7 ரன்கள் கிடைத்தது. நடராஜன் வீசிய 8வது ஓவரில், ராணா ஒரு சிக்ஸரை வெளுத்தார். அப்போதும் அந்த ஓவரில் 7 ரன்கள் மட்டுமே. மார்க்ரமின் 9வது ஓவரில், தொடர்ந்து இரண்டு பவுண்டரிகள் அடித்தார் ரிங்கு. அடுத்த ஒவரில் ரன்களை தியாகம் செய்தார் தியாகி. ஒரு பவுண்டரி, இரண்டு சிக்ஸர்கள் என நொறுக்கினார் கேப்டன் ராணா. 10 ஓவர் முடிவில் 90/3 என எழுந்து அமர்ந்தது கொல்கத்தா.
மயங்க் மார்கண்டேவின் 11வது ஓவரில் 5 ரன்கள் கிடைத்தது. 12வது ஓவரில் கேப்டன் ராணாவின் விக்கெட்டை, தானே பந்து வீசி தானே கேட்ச் பிடித்தார் கேப்டன் மார்க்ரம். 42 ரன்கள் எடுத்து வெளியேறினார் நிதீஷ் ராணா. அடுத்து களமிறங்கிய ரஸல், அதே ஓவரில் சிக்ஸர் ஒன்றை பறக்கவிட்டார்.
மார்கண்டேவின் 13வது ஓவரை ரஸல் சிக்ஸருடன் துவங்க, ரிங்கு பவுண்டரியுடன் முடித்தார். நடராஜனின் 14வது ஓவரில், ரஸல் பேட்டிலிருந்து ஒரு பவுண்டரி. 15வது ஓவரிலேயே ரஸலின் விக்கெட்டைக் கழட்டினார் மார்கண்டே. 15 ஓவர் முடிவில் 129/5 என மீண்டும் சரிந்தது கொல்கத்தா.
புவியின் 16வது ஓவரில், நரைன் காலி. அடுத்து களமிறங்கிய ஷர்தூல் ஒரு பவுண்டரி அடித்தார். மார்கண்டேவின் 17வது ஓவரில், ரிங்குவிடமிருந்து ஒரு சிக்ஸர். நடராஜன் வீசிய 18வது ஓவரில், ஷர்தூலின் விக்கெட்டைத் தூக்கினார். அடுத்து ஓவரை வீசிய புவி, இம்பாக்ட் வீரராக இறங்கிய அனுகுல் ராய்க்கு இரண்டு பவுண்டரிகள் கொடுத்தார்.
கடைசி ஓவரை வீசிய நடராஜன், ரிங்குவின் விக்கெட்டை கழட்டினார். 46 ரன்களுடன் நடையைக் கட்டினார் ரிங்கு. அடுத்த பந்தில், ஹர்ஷித் ராணாவும் ரன் அவுட். கடைசி ஓவரில் 3 ரன்கள் மட்டுமே நட்டு விட்டுக்கொடுக்க, 171/9 என ஓரளவு நல்ல ஸ்கோருடன் இன்னிங்ஸை முடித்தது கொல்கத்தா.
இரண்டு ராணாக்களில் ஹர்ஷீத் ராணா முதல் ஓவரை வீச, இரண்டு மயங்க்களில் மயங்க் அகர்வாலும் - அபிஷேக் சர்மாவும் ஐதராபாத் இன்னிங்ஸைத் துவங்கினார்கள். முதல் பந்தே பவுண்டரி. அமோகம் என அலறினார்கள் ஐதராபாத் ரசிகர்கள். அரோரா வீசிய 2வது ஓவரில், நோ பாலில் பவுண்டரி அடித்த அகர்வால், அதே ஓவரில் இன்னொரு பவுண்டரியும் அடித்தார். ஹர்ஷீத் ராணாவின் 3வது ஓவரில் அகர்வால் ஒரு சிக்ஸரை வெளுத்தார்.
ஐதராபாத் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள். அடுத்த இரண்டாவது பந்திலேயே கீப்பரிடம் கேட்ச் கொடுத்துவிட்டு நடையைக் கட்டினார்.
அடுத்து களமிறங்கிய த்ரிப்பாட்டி, தாகூரின் ஓவரில் ஒரு பவுண்டரி விளாசினார். அதே ஓவரில், அபிஷேக் சர்மா அவுட் ஆனார். ஹர்ஷீத் வீசிய 5வது ஓவரில் 1 ரன் மட்டுமே. அடுத்த ஓவரை ரஸல் நோ பாலுடன் துவங்க, த்ரிப்பாட்டி பவுண்டரியுடன் துவங்கினார். மாற்றாக வீசபட்ட பந்தில் ஒரு சிக்ஸர். அடுத்து பந்து பவுண்டரி. `ஊ சொல்றியா மாமா' என பீப்பீ ஊதினார் ஐதராபாத் டிஜே. `ஊஹும்' என அடுத்த பந்தே அவுட் ஆனார் த்ரிப்பாட்டி. பவர்ப்ளேயின் முடிவில் 53/3 என கொட்டாவிட்டது சன்ரைசர்ஸ்.
இரண்டு ராய்களில் அனுகுல் ராய் பந்து வீசவந்தார். இரண்டாவது பந்து, ப்ரூக் காலி. பேசாமல், சல்லீசு ரேட்டில் வேறு எந்த அணிக்காவது ப்ரூக்கை விற்றுவிடலாமா என யோசிக்கத் துவங்கியது சன்ரைசர்ஸ். அடுத்து களமிறங்கிய க்ளாஸன், ஒரு பவுண்டரி தட்டினார். ஷர்தூலின் 8வது ஓவரில் 5 ரன்கள் மட்டுமே. அனுகுல் ராயின் 9வது ஓவரில் 3 ரன்கள்.
நரைனின் 10வது ஓவரில் 6 ரன்கள். எல்லோருக்கும் கண்கள் சொக்கியது! இன்னும் 60 பந்துகளில் 97 ரன்கள் தேவை.
அனுகுல் ராயின் 11வது ஓவரில் இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட்டார் க்ளாஸன். 12வது ஓவர் வீசவந்த வருணை, இரண்டு பவுண்டரிகள் அடித்தார் மார்க்ரம். ஹர்ஷ்த்தின் 13வது ஓவரை சிக்ஸருடன் முடித்தார் க்ளாஸன். நரைனின் 14வது ஓவரில், மார்க்ரம் ஒரு பவுண்டரி அடித்தார். 15வது ஓவரின் முதல் பந்தில் க்ளாஸன் காலி. ஷர்தூல் வேலையைக் காட்டினார். அப்போது தளர்ந்துவிடாத ஐதராபாத் அணி, அதே ஓவரில் இரண்டு பவுண்டரிகளையும் அடித்தது. 15 ஓவர் முடிவில் 134/5 என எழுந்து நின்றது சன்ரைசர்ஸ்.
வருண் வீசிய 16வது ஓவரில், 4 ரன்கள் மட்டுமே. அரோராவின் 17வது ஓவரை பவுண்டரியுடன் துவங்கினார் அப்துல் சமாத். ஆனால், அதே ஓவரில் தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார் மார்க்ரம். 18 பந்துகளில் 26 ரன்கள் தேவை. கைவசம் 4 விக்கெட்கள். வருண் வீசிய 18வது ஓவரில் வெறும் 5 ரன்கள் மட்டுமே. அரோராவின் 19வது ஓவரில், யான்சன் விக்கெட் காலி. அற்புதமான கேட்சைப் பிடித்தார் கீப்பர் குர்பாஸ். மைதானத்தில் மெல்ல தூறல் விழத் துவங்கியது. அடுத்து களமிறங்கிய புவனேஷ் ஒரு பவுண்டரி அடித்தார். அப்துல் சமாத் நோ பாலில் இன்னொரு பவுண்டரி அடிக்க, ஐதராபாத் ரசிகர்கள் சட்டையைக் கழற்றி சுழற்றினார்கள். ஃப்ரீஹிட் பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் வீணாக்கினார் சமாத்.
6 பந்துகளில் 9 ரன்கள் தேவை. கடைசி ஓவரை வீசவந்தார் வருண். முதல் பந்து சமாத் ஒரு சிங்கிள். அடுத்த பந்து லெக் பைஸில் ஒரு சிங்கிள். 3வது பந்து, சமாத்தின் விக்கெட் காலி. 4வது பந்து, டாட். 5வது பந்து சிங்கிள். கடைசிப்பந்தில் ஆறு ரன்கள் எடுத்தால் வெற்றி. வருண் புள்ளி வைக்க, 5 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி கோலம் போட்டது. சன்ரைசர்ஸ் அணியை நினைத்து, கொல்கத்தா ரசிகர்களே பரிதாபம் கொண்டார்கள். சிறப்பாக பந்து வீசிய வருணுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கபட்டது.