2024 ஐபிஎல் தொடர் தொடங்கி 66 லீக் போட்டிகள் முடிவடைந்துவிட்டது. கோப்பை வெல்வதற்கான 10 அணிகள் பலப்பரீட்சை நடத்திய நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் முதலிய 3 அணிகள் அவர்களுடைய பிளே ஆஃப் இடத்தை தக்கவைத்துள்ளன.
இன்னும் 4 லீக் போட்டிகளே மீதமுள்ள நிலையில், புள்ளிப்பட்டியலில் 4வது இடத்திற்கான மோதல் மட்டுமே மிச்சம் உள்ளது. அந்த இடத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இரண்டு அணிகள் உயிர்ப்புடன் இருக்கின்றன.
புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் இருக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, மீதமுள்ள இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருந்தது.
இந்நிலையில், வெல்லவேண்டிய முக்கியமான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை இன்று எதிர்த்து விளையாடவிருந்த சன்ரைசர்ஸ் அணி, போட்டி மழையின் காரணமாக தடைபட்டதால் ஒரு புள்ளியுடன் அரையிறுதிக்கான வாய்ப்பை உறுதிசெய்துள்ளது. டாஸ் போடுவதற்கு முன்பாகவே மழை குறுக்கிட்டதால், மழை நிற்கும்வரை நடுவர்கள் காத்திருந்தனர். ஆனால் 4 ஸ்பெக்சனுக்கு பிறகும் மழை நிற்காததால் போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இரண்டு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பிரித்து கொடுக்கப்பட்டது.
சன்ரைசர்ஸ் அணி மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் தோற்றால் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே இரண்டு அணிகளுக்கும் அரையிறுதி செல்வதற்கான வாய்ப்பு இருந்தது. ஆனால் தற்போது சன்ரைசர்ஸ் அணி 3வது அணியாக தங்களுடைய அரையிறுதி வாய்ப்பை உறுதிசெய்துள்ள நிலையில், கடைசி 4வது இடத்திற்கு சிஎஸ்கே அல்லது ஆர்சிபி இரண்டு அணிகளில் ஒன்றுதான் முன்னேற முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது.
ஆர்சிபி அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் அல்லது 18.1 ஓவர் முடிவில் போட்டியை வெல்லவேண்டும் என்ற கட்டாயத்தில் விளையாடும். அதேநேரத்தில் ஆர்சிபியை வீழ்த்திவிட்டாலே சிஎஸ்கே அணி தகுதிபெற்றுவிடும்.
ஒருவேளை ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதும் போட்டி மழையால் பாதிக்கப்பட்டால், இரண்டு அணிகளுக்கும் ஒவ்வொரு புள்ளிகள் பிரித்து வழங்கப்படும். அப்படி வழங்கப்பட்டால் 15 புள்ளிகளுடன் சிஎஸ்கே அணி 4வது அணியாக அரையிறுதிக்கு தகுதிபெறும். அதனால் போட்டியில் மழை குறுக்கிட கூடாது என்ற எதிர்ப்பார்ப்புடன் ஆர்சிபி ரசிகர்கள் இருந்துவருகின்றனர். ஆனால் சோகம் என்னவென்றால் போட்டி நடைபெறும் நாளான மே18-ம் தேதியன்று 80% மழைபெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.