தென்னாப்பிரிக்காவின் டி20 தொடரான SA20-ல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சாம்பியன் பட்டம் வென்றது. சனிக்கிழமை இரவு நடந்த இறுதிப் போட்டியில் டர்பன் சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மகுடம் சூடியது அந்த அணி. கடந்த ஆண்டு நடந்த முதல் சீசனில் சாம்பியன் பட்டம் வென்றிருந்த அந்த அணி, தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றிக் கோப்பையைத் தூக்கியிருக்கிறது.
2024 SA20 தொடர் ஜனவரி 10ம் தேதி தொடங்கியது. 6 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் லீக் சுற்றின் முடிவில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப், டர்பன் சூப்பர் ஜெயின்ட்ஸ், பார்ல் ராயல்ஸ், ஜோபெர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின. பிரிடோரியா கேபிடல்ஸ், MI கேப் டவுன் அணிகள் கடைசி இரு இடங்களைப் பிடித்து வெளியேறின. கேப் டவுனில் நடந்த முதல் குவாலிஃபயரில் சூப்பர் ஜெயின்ட்ஸை வீழ்த்தி நேரடியாக ஃபைனலுக்குள் நுழைந்தது சன்ரைசர்ஸ். எலிமினேட்டரில் பார்ல் ராயல்ஸை வீழ்த்திய JSK, இரண்டாவது குவாலிஃபயரில் டர்பனிடம் தோல்வியைத் தழுவியது. SEC vs DSG இறுதிப் போட்டி கேப் டவுனில் சனிக்கிழமை இரவு நடந்தது.
டாஸ் வென்ற ஈஸ்டர்ன் கேப் கேப்டன் எய்டன் மார்க்ரம் பேட்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணியின் அதிரடி ஓப்பனர் டேவிட் மலான்ரீஸ் டாப்லி வீசிய ஆட்டத்தின் இரண்டாவது ஓவரிலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பிறகு ஜோர்டான் ஹெர்மனுடன் ஜோடி சேர்ந்த டாம் அபெல் நல்ல பார்ட்னர்ஷிப் உருவாக்கினார். இருவரும் நன்கு அடித்து ஆடினார்கள். இரண்டாவது விக்கெட்டுக்கு அந்த பார்ட்னர்ஷிப் 90 ரன்கள் சேர்த்தது. 42 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேஷவ் மஹாராஜ் பந்தில் ஆட்டமிழந்தார் ஹெர்மன். அரைசதம் அடித்திருந்த அபெல்லையும் அதே ஓவரிலேயே அவுட் ஆக்கினார் மஹாராஜ்.
அடுத்தடுத்து இரு விக்கெட்டுகள் வீழ்ந்திருந்தாலும், நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த எய்டன் மார்க்ரம், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இருவரும் சிறப்பாக ஆடினார்கள். அவர்கள் அதிரடியாக ஆடியதால், சன்ரைசர்ஸ் அணி 200 ரன்களைக் கடந்தது. 4 ஃபோர்களும், 3 சிக்ஸர்களும் விளாசிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 30 பந்துகளில் 56 ரன்கள் விளாசினார். 26 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார் கேப்டன் மார்க்ரம். 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 204 ரன்கள் குவித்தது சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி.
பெரிய இலக்கை துரத்திய டர்பன் சூப்பர் ஜெயின்ட்ஸ் ஓப்பனர்கள் மிகவும் நிதானமாகவே சேஸை தொடங்கினார்கள். சொல்லப்போனால் சன்ரைசர்ஸ் பௌலர்கள் அவர்களை தடுமாற வைத்தார்கள். அதன் பலனாக மூன்றாவது ஓவரிலேயே டி காக் விக்கெட் அவர்களுக்குக் கிடைத்தது. டேனியல் வோரல் வீசிய மூன்றாவது ஓவரில் 3 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் டி காக் போல்டானார். அப்போது அணியின் ஸ்கோர் வெறும் 6 ரன்கள்! அந்த சரிவிலிருந்து சூப்பர் ஜெயின்ட்ஸ் மீளவே இல்லை. அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே யான்சன் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார் ஜேஜே ஸ்மட்ஸ். பனுகா ராஜபக்சாவும் அதே ஓவரில் டக் அவுட் ஆகி வெளியேறினார்.
இப்படி 4 ஓவர்களிலேயே மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்த DSG அணிக்கு மேத்யூ பிரீட்ஸ்கி, வியான் முல்டர் இருவரும் சற்று ஆறுதலாக இருந்தனர். அதிரடியாக ஆடிய முல்டரை 10வது ஓவரின் கடைசிப் பந்தில் வெளியேற்றினார் சைமன் ஹார்மர். இந்த முறையும் ஒன்றுக்கு மூன்றாக விக்கெட்டுகளை இழந்தது சூப்பர் ஜெயின்ட்ஸ். 11வது ஓவரை ஓட்னீல் பார்ட்மேன், பிரீட்ஸ்கியையும் கிளாசனையும் வெளியேற்றினார். அதிலும் ஃபார்மில் இருந்த ஹெய்ன்ரிச் கிளாசனை முதல் பந்திலேயே டக் அவுட் ஆக்கி வெளியேற்றினார் 69-6 என்றானபோதே அந்த அணியின் வெற்றி வாய்ப்பு நொறுங்கிப்போனது. டுவைன் பிரிடோரியஸ் கொஞ்சம் போராடியதால் அந்த அணி 100 ரன்களைக் கடந்தது. 17 ஓவர்கள் முடிவில் அந்த அணி 115 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மார்கோ யான்சன் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். 55 ரன்கள் எடுத்த டாம் அபெல் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
இந்த சீசனில் அதிரடியாக விளையாடி 447 ரன்கள் விளாசிய ஹெய்ன்ரிச் கிளாசன் தொடர் நாயகன் விருது வென்றார். இதுவரை நடந்திருக்கும் இரு SA20 சீசன்களையும் வென்று சரித்திரம் படைத்திருக்கிறது சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி.