சேப்பாக்கத்தில் நடைபெற்ற கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இருந்தபோதிலும் இந்த சீசனில் சேப்பாக்கத்தில் நடைபெற்ற கடைசி லீக் போட்டி என்பதால் தோனியை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.
இதில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்க தோனி மைதானத்துக்குள் வந்தபோது அங்கு வந்த கிரிக்கெட் ஜாம்பவனான சுனில் கவாஸ்கர் தோனியிடம் ஆட்டோகிராப் கேட்டார். தோனியின் தீவிர ரசிகர் போல தன்னுடைய சட்டையிலேயே ஆட்டோகிராஃப் போடுமாறு அவர் கேட்டார், தோனியும் அதற்கு சம்மதித்தார். பின்பு இருவரும் கட்டிப்பிடித்து ஆரத்தழுவி கொண்டனர்.
இந்தப் புகைப்படமும் வீடியோவும் வைரலானது.
இப்போது கவாஸ்கர் அந்தத் தருணம் குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியுள்ளார், அதில் அவர் “சிஎஸ்கே மற்றும் தோனி ஆகியோர் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கப்போகிறார்கள் என கேள்விப்பட்டவுடன், நானும் ஒரு மறக்க முடியாத தருணத்தை ஏற்படுத்த விரும்பினேன். அதனால்தான் ஆட்டோகிராஃப் வாங்க தோனி இருக்கும் இடத்தை நோக்கி ஓடினேன். ஏனென்றால் அதுதான் சேப்பாக்கத்தில் அவரின் கடைசிப் போட்டி. நிச்சயமாக சிஎஸ்கே பிளே ஆஃப் தகுதிப்பெறும்பட்சத்தில் மீண்டும் அவர் வருவார். ஆனால் அந்நாள் அத்தருணத்தை நான் மிஸ் செய்ய விரும்பவில்லை" என்றார்.
மேலும் பேசிய அவர் "நல்வாய்ப்பாக அங்கிருந்த ஒளிப்பதிவாளர் ஒருவரிடம் மார்க்கர் பென் (marker pen) இருந்தது. இப்போது அவருக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நான் தோனியிடம் சென்று நான் அணிந்திருக்கும் சட்டையில் ஆட்டோகிராஃப் போட சொன்னேன். அவர் உடனே சம்மதித்து ஆட்டோகிராஃப் இட்டார். அது மிகவும் உணர்ச்சிமிக்க தருணமாக இருந்தது. இந்திய கிரிக்கெட்டுக்காக பல சாதனைகளை செய்த ஒருவரிடம் இருந்து பெறுவது மிகவும் உணர்ச்சிகரமானது" என்றார் சுனில் கவாஸ்கர்.
மேலும் பேசிய அவர் "நான் இறப்பதற்கு முன் 1983 ஆம் ஆண்டு கபில் தேவ் வென்ற உலகக் கோப்பையையும், 2011 ஆம் ஆண்டு தோனி அடித்த சிக்ஸையும் மீண்டும் பார்க்க விரும்புகிறேன்" என்றார் நெகிழ்ச்சியுடன்.