2024 டி20 உலகக்கோப்பை தொடரானது ஜூன் 2ம் தேதிமுதல் கோலாகலமாக தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதுவரை 3 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், மூன்று போட்டிகளுமே தரமான போட்டிகளாக அமைந்துள்ளது.
புதிதாக உலகக்கோப்பைக்குள் வந்திருக்கும் அமெரிக்கா, கனடா, நமீபியா, ஓமன் மற்றும் ஜெனிவா முதலிய 5 அணிகளும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளன. விளையாடியிருக்கும் 3 போட்டிகளிலேயே ஒரு சூப்பர் ஓவர் போட்டி வந்திருப்பது, நடப்பு உலகக்கோப்பை தொடர் எவ்வளவு கடினமான மோதல்களுடன் இருக்கப்போகிறது என்பதை எடுத்துக்காட்டியுள்ளது.
இந்நிலையில் தொடரின் 4வது லீக் போட்டியில் இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்திவருகின்றன. தென்னாப்பிரிக்காவின் அபாரமான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 77 ரன்களுக்கே ஆல்அவுட்டாகி மோசமான சாதனை படைத்துள்ளது.
டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுக்காமல் பேட்டிங்கை தேர்வுசெய்தது. தரமான பந்துவீச்சு தாக்குதலை வைத்திருக்கும் தென்னாப்பிரிக்கா அணியில், தன்னுடைய முதல் உலகக்கோப்பை தொடரில் விளையாடும் ஒட்னீல் பார்ட்மேன் வீசிய முதல் பந்திலேயே விக்கெட்டை எடுத்துவந்து மிரட்டிவிட்டார்.
குசால் மெண்டீஸ் ரபாடாவிற்கு எதிராக ஒரு அசத்தலான உப்பர் கட் ஷாட் ஆடினாலும், அதற்குபிறகு பந்துவீச வந்த அன்ரிச் நோர்ட்ஜே ஆட்டத்தையே தன் கைகளில் அடக்கினார். வேகம் மற்றும் குட் லைன்களில் வீசிய நோர்ட்ஜே விக்கெட் வேட்டை நடத்தினார். குசால் மெண்டீஸ் மற்றும் கமிந்து மெண்டீஸ் இருவரையும் நோர்ட்ஜே வெளியேற்ற, அடுத்தடுத்து வந்த கேப்டன் வனிந்து ஹசரங்கா மற்றும் சமரவிக்ரம இரண்டுபேரையும் 0 ரன்னில் வெளியேற்றி மிரட்டிவிட்டார் சுழற்பந்துவீச்சாளர் கேசவ் மஹாராஜ்.
40 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி தடுமாற, மீண்டும் பந்துவீச நோர்ட்ஜே இந்தமுறை அசலங்கா மற்றும் மேத்யூஸ் இரண்டுபேரையும் வெளியேற்றி மிரட்டிவிட்டார். அதற்கு பிறகு தன்னுடைய பங்கிற்கு 2 விக்கெட்டுகளை தட்டிப்பறித்த ரபாடா, இலங்கை அணியை 77 ரன்களில் ஆல்அவுட்டுக்கு அழைத்துச்சென்றார். இலங்கை அணியில் அதிகபட்சமாக குசால் மெண்டீஸ் 19 ரன்களை எடுத்தார். நோர்ட்ஜே 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
77 ரன்களுக்கு ஆல் அவுட்டான இலங்கை அணி, முதல்முறையாக டி20 கிரிக்கெட்டில் மிகக்குறைவான டோட்டலுக்கு ஆல் அவுட்டாகி மோசமான சாதனை படைத்தது.
டி20 கிரிக்கெட்டில் இலங்கையின் குறைவான டோட்டல்:
77 vs SA - நியூயார்க் - 2024 *
82 vs Ind - விசாகப்பட்டினம் - 2016
87 vs Aus - பிரிட்ஜ்டவுன் - 2010
87 vs Ind - கட்டாக் - 2017
91 vs எங் சவுத்தாம்ப்டன் 2021
இலங்கைக்கு எதிராக 4 ஓவர்களை வீசி 7 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய அன்ரிச் நோர்ட்ஜே, டி20 உலகக்கோப்பையில் புதிய வரலாறு படைத்தார்.
16 பந்துகளை டாட் பந்துகளாக வீசிய நோர்ட்ஜோ 4 விக்கெட்டுகளுடன் 1.75 எகானமியுடன் ஓவரை முடித்தார். இதன்மூலம் டி20 உலகக்கோப்பை வரலாற்றில் குறைவான எகானமியுடன் பந்துவீசிய முதல் பந்துவீச்சாளராக மாறி சாதனை படைத்தார்.
டி20 உலகக்கோப்பையில் குறைவான எகானமி 4 ஓவர்கள்:
1.75 - நோர்ட்ஜே vs SL - நியூயார்க் - 2024 *
2.00 - அஜந்தா மெண்டீஸ் vs Zim - ஹம்பன்டோட்டா - 2012
2.00 - மஹ்முதுல்லா vs Afg - மிர்பூர் - 2014
2.00 - வனிந்து ஹசரங்கா vs UAE - ஜீலோங் - 2022
78 ரன்களை நோக்கி விளையாடிவரும் தென்னாப்பிரிக்கா அணி 4 விக்கெட்டுகளுக்கு 58 ரன்களுடன் விளையாடி வருகிறது.
16.2 ஓவரில் 80 ரன்கள் எடுத்து தென்னாப்ரிக்கா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.