நடப்பு ஐ.பி.எல் தொடரின் நான்காவது ஆட்டம், ஐதராபாத்தில் நேற்று மதியம் நடைபெற்றது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், கடந்த சீசனின் ரன்னர் அப்பான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மைதானத்தில் மல்லுக்கட்டின. ஐதராபாத் அணியின் அதிகாரபூர்வ கேப்டனான மார்க்ரம், சர்வதேச போட்டியில் விளையாடிக் கொண்டிருப்பதால் புவனேஷ்வர் குமார் அணியை தலைமை தாங்கினார். சர்வதேச அணியில் விளையாடுவதற்கு சரிவர வாய்ப்பே வழங்கப்படாத சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் அணியை தலைமை தாங்கினார். டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பவுலிங்கை தேர்ந்தெடுத்தது.
பட்லரும் ஜெய்ஸ்வாலும் ராயல்ஸ் அணியின் அக்கவுன்ட்டை ஆரம்பித்து வைத்தனர். பவுலிங் அணியின் கேப்டன் புவனேஷ்வர் குமார் பந்து வீச வந்தார். ஓவரின் இரண்டாவது பந்தை பவுண்டரிக்கு பறக்கவிட்டார் ஜெய்ஸ்வால். 2வது ஓவரை வீசவந்தார் ஆப்கானிஸ்தான் அணியின் ஆஸ்தான வேகபந்து வீச்சாளர் ஃபரூக்கி. முதல் பந்தில் மீண்டுமொரு பவுண்டரி ஜெய்ஸ்வாலுக்கு. அடுத்த இரண்டு பந்துகளிலும் ட்ரிபிள்ஸ் ஓடினார்கள். ஐந்தாவது பந்திலும் ஒரு பவுண்டரி என 14 ரன்களை பறிகொடுத்தார் ஃபரூக்கி. சர்வதேச அளவில் பட்லரை பலமுறை அவுட் செய்திருக்கும் புவி, ஐ.பி.எல்லில் ஒருமுறையாவது அவுட் செய்துவிட வேண்டுமென வெறியில் வீச, பட்லரும் பதிலுக்கு வெறி கொண்டு வெளுக்க, பந்து சிக்ஸருக்கு பறந்தது. அப்படியே, புவனேஷ்வர் குமாரை ஆட்டோ ஏற்றி ஜெய்ஸ்வாலிடம் பட்லர் அனுப்பி வைக்க, அவரும் கட்லட் போட்டார். இரண்டு பவுண்டரிகள் சரசரவென பறந்தன.
வேகமாக போட்டால் வேக வேகமாக ரன் அடிக்கிறார்கள் என சுழற்பந்தை இறக்கிவிட்டார் புவி. வாஷிங்டன் சுந்தர், பந்தை வாஷிங் மெஷினை விட வேகமாய் சுழற்றியும் ஒரு பிரயோஜனம் இல்லை. முதல் இரண்டு பந்தையும் மிட் விக்கெட், கௌ கார்னர் திசைகளில் சிக்ஸ் அடித்து துவைத்தார் பட்லர். ஐந்தாவது பந்தில் ஒரு பவுண்டரியை பிழிந்து காயப்போட்டார் ஜெய்ஸ்வால். எப்படி போட்டாலும் அடிக்குறாய்ங்களே என அரண்டுபோன புவி, யார்க்கர் மன்னன் நடராஜனிடம் பந்தை தூக்கிப்போட்டார். கடைசியில், நடராஜனுக்கும் அதே வரவேற்புதான். முதல் பந்தே மிட் ஆஃப் திசையில் பவுண்டரிக்கு பறந்தது. அடுத்து ஒரு புள்ளி. அதன்பிறகு கவர் பாயின்ட், பேக்வார்டு பாயின்ட், எக்ஸ்ட்ரா கவர் என ஹாட்ரிக் பவுண்டரிகளை எக்ஸ்ட்ராவாக கவரில் அள்ளிப்போட்டார் பட்லர்.
பவர்ப்ளேயின் கடைசி ஓவரை வீச, ஃபரூக்கியை இறக்கிவிட்டார் புவி. மீண்டும் முதல் பந்தில் பவுண்டரியை பறக்கவிட்டார் பட்லர். அடுத்து ஒரு டாட். அடுத்து இரண்டு பந்துகளில் மீண்டும் பவுண்டரி. 20 பந்துகளில் தன் அரைசதத்தை நிறைவு செய்தார் பட்லர் எனும் முரட்டு ஹிட்லர். ஒருவழியாக, ஓவரின் ஐந்தாவது பந்தில் க்ளீன் பவுல்டாகி வெளியேறினார். பவர்ப்ளேயின் முடிவில் 85/1 என கெத்தாக நின்றது ராயல்ஸ்.
7வது ஓவரை வீசினார் அடீல் ரஷீத். முதல் ஐந்து பந்துகளில் எந்த பவுண்டரியும் வராததே ஆச்சரியமாக இருந்தது. கடைசி பந்தை மட்டும் ஜெய்ஸ்வால் பேக்வார்டு பாயின்ட்டில் பவுண்டரிக்கு பறக்கவிட்டார். அதிவேக பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் வந்தார். சஞ்சு சாம்சனுக்கு இரண்டு பவுண்டரிகள் தந்தார். இன்னிங்ஸில் முதல் முறையாக, ரஷீத் வீசிய 9வது ஓவரில்தான் எந்த பவுண்டரியும் வரவில்லை. 10வது ஓவர் வீச வந்த உம்ரான் மாலிக்கை, ஜெய்ஸ்வால் ஒரு பவுண்டரியும், கேப்டன் சாம்சன் ஒரு சிக்ஸரும் அடித்தனர். பத்து ஓவர் முடிவில் 122/1 என படுபயங்கரமான நிலையில் இருந்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. `பவுலிங்ல பார்த்துக்கலாம்' என்பதை தாரக மந்திரமாக வைத்திருக்கும் சன்ரைசர்ஸ் அணியின் பவுலிங்கை பதம் பார்த்தது ராயல்ஸ். பேட்ஸ்மேன்கள் அடித்த அடியில், ஐதராபாத்தே ஆடிப்போனது.
அடீல் ரஷீத் ஓவருக்கு மட்டும்தான் மனிதர்களை போல பேட்டிங் செய்கிறார்கள் என, 11வது ஓவரை வீச அழைத்தார் புவி. கொடுமை, முதல் பந்தே சிக்ஸருக்கு பறந்தது. 12 ஓவரில் அற்புதமாக பந்து வீசி வெறும் 3 ரன்கள் மட்டுமே கொடுத்தார் வாஷிங்டன் சுந்தர். மீண்டும் ஃபரூக்கியை எடுத்து வந்தார் கேப்டன் புவனேஷ். முதல் பந்து வழக்கம்போல பவுண்டரிக்கு பறந்தாலும், மூன்றாவது பந்தில் ஜெய்ஸ்வாலின் விக்கெட்டை சாய்த்தார். ஜெய் மகிழ்மதி என அலறினார்கள் ஐதராபாத் ரசிகர்கள்.
சுந்தர் வீசிய 14வது ஓவரில், ஒரு சிக்ஸர் மட்டும் பறந்தது. முதல் பந்துகள் எல்லாம் பெரும்பாலும் பவுண்டரிக்கு பார்சல் செய்யப்பட்ட இந்த இன்னிங்ஸில், முதல்முறையாக முதல் பந்தில் ஓர் விக்கெட் விழுந்தது. உம்ரான் மாலிக் ஏவிவிட்ட அதிவேக ராக்கெட், படிக்கலின் தடுப்புகளைத் தாண்டிச் சென்று விக்கெட்டை தகர்த்தது. இரண்டு ரன்களுடன் நடையைக் கட்டினார் படிக்கல். பரக் உள்ளே வந்தார். `சரக்' என ஒரு பவுண்டரியை அடித்தார்.
16வது ஓவர் வீசவந்த ரஷீதை, மீண்டும் முதல் பந்திலேயே சிக்ஸருக்கு பறக்கவிட்டார் சாம்சன். 16 ஓவர் முடிவில், ஸ்கோர் 170/3. இப்போது, நடராஜன் வந்தார். முதல் பந்திலேயே பரக்கின் விக்கெட்டைக் கழட்டி எறிந்து, `பெவிலியனுக்கு நட ராஜா' என்றார். அந்த ஓவரில் 1 விக்கெட்டையும் வீழ்த்தி மொத்தமே மூன்று ரன்கள்தான் கொடுத்தார். முரட்டு கம்பேக்!
இதுதான் சரியான சமயம் என புவியே பந்தை கையில் எடுத்தார். இம்முறை ஹெட்மயர் ஒரு சிக்ஸரை விளாசினார். சஞ்சுவும் ஒரு பவுண்டரியை செஞ்சுவிட்டார். 19வது ஓவரை வீசவந்தார் நடராஜன். ஓவரின் மூன்றாவது பந்தில், சாம்சனின் விக்கெட்டைத் தூக்கினார். 32 பந்துகளில் 55 ரன்கள் எனும் அட்டகாசமான இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. ஐதராபாத் ரசிகர்கள் வெடி வெடித்து கொண்டாடினார்கள். கடைசி ஓவரை வீசவந்தார் ஃபரூக்கி. அதில் பத்து ரன்கள் மட்டுமே அள்ளி 203/5 என இலக்கை செட் செய்தது ராயல்ஸ்.
204 ரன்களை 20 ஓவருக்குள் அடித்துவிடும் முனைப்போடு களமிறங்கியது அபிஷேக் - மயங்க் ஜோடி. `நீங்க யார்க்கர் போடுற நட்டு வெச்சுருக்கீங்களா? நாங்க யார்க்கர் போடுற போல்ட் வெச்சிருக்கோம்' என போல்ட்டை இறக்கிவிட்டார் சாம்சன். முதல் ஓவரில் விக்கெட் எடுப்பதையே முழுநேர வேலையாக வைத்திருக்கும் போல்ட், இம்முறையும் அபிஷேக்கின் விக்கெட்டை கழட்டி தூக்கி எறிந்தார். `ஒன்னும் பிரச்னையில்லை. த்ரிப்பாதி வந்தா திருப்பம் உண்டு' என ஐதராபாத் ரசிகர்கள் தங்களை தாங்களே தேத்திக் கொண்டார்கள். பாவம், ஸ்லிப்பில் நின்றுக்கொண்டிருந்த ஹோல்டரிடம் லட்டு போன்ற கேட்சைக் கொடுத்துவிட்டு த்ரிப்பாதியும் திரும்பிப் பார்க்காமல் சென்றார். ஐதாராபாத் மைதானத்தில் மயான அமைதி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உள்ள அத்தனை பென்ச்சுகளிலும் அமர்ந்து தன் பெயரை கிறுக்கியிருந்த கே.எம்.ஆசிப், ராஜஸ்தான் அணிக்காக இரண்டாவது ஓவரை வீசினார். ஓவரின் 4வது பந்தில் ஒரே ஒரு பவுண்டரியை அடித்தார் ப்ரூக். மீண்டும் வந்தார் போல்ட். எக்ஸ்ட்ரா கவரில் அழகான ஒரு பவுண்டரியை விரட்டினார் மயங்க். ஹோல்டரிடம் பந்தைத் தூக்கிப்போட்டார் சாம்சன். அவரது ஓவரிலும் ஒரு பவுண்டரியை விளாசினார் மயங்க் அகர்வால். ட்ரெண்ட் வீசிய 5வது ஓவரில் வெறும் 3 ரன்கள் மட்டுமே கிடைத்தது. பவர்ப்ளேயின் கடைசி ஓவரை அஸ்வின் வீச, கடைசி பந்தில் ஒரு பவுண்டரியை தட்டிவிட்டார் மயங்க். பவர்ப்ளேயின் முடிவில், 30/2 என தத்தளித்துக் கொண்டிருந்தது ஐதராபாத். கிட்டதட்ட 7 ஆயிரம் கிலோ மீட்டர்களுக்கு அந்தப் பக்கம், ஐதராபாத் அணியின் கேப்டன் மார்க்ரம், நெதர்லாந்து அணியை சம்பவம் செய்துகொண்டிருந்தார்.
7வது ஓவரை வீச வந்தார் சாஹல். ஐ.பி.எல் தொடர் என்றால் கொத்து கொத்தாக விக்கெட்டை அள்ளுபவர், கெத்தாக ப்ரூக்கின் விக்கெட்டை கழட்டினார். சன்ரைசர்ஸ் அஸ்தமனமானது. ஆசிஃப் வீசிய 8வது ஓவரிலும், 4 ரன்கள் மட்டுமே கிடைத்தது. வாஷிங்டன் சுந்தரும், ஹோல்டரின் பந்தில் ஹெட்மயரிடம் கேட்ச் கொடுத்துவிட்டு வெளியேறினார். க்ளென் பிளிப்ஸ் மட்டும் அதே ஓவரில் ஒரே ஒரு சிக்ஸரை விளாசினார். அகர்வாலும் பிளிப்ஸும் களத்தில் இருக்கிறார்கள். எதுவும் நடக்கலாம் என ஐதராபாத் ரசிகர்கள் சிறு நம்பிக்கையுடன் காத்திருக்க, எதுவும் நடக்காது என பிளிப்ஸின் விக்கெட்டைக் கழட்டினார் அஸ்வின்.
ஃபரூக்கிக்கு பதிலாக சமாத்தை இம்பாக்ட் வீரராக இறக்கிவிட்டார் புவி. பத்து ஓவர் முடிவில் 48/5 என டெஸ்ட் மேட்ச் ஆடியிருந்தார்கள் சன்ரைசர்ஸ் அணியினர். அடுத்த ஓவரிலேயே, மயங்க் அகர்வாலும் அவுட். சாஹல் வீசிய பந்தில் பட்லரிடம் கேட்ச் கொடுத்துவிட்டு பெவிலியனுக்கு திரும்பினார். 12வது ஓவரில் அடீல் ரஷீத் ஒரு சிக்ஸரையும் அடித்தார். 13வது ஓவரை வீசவந்தார் சைனி. எதிரணியின் நிலைமையை நினைத்து பரிதாபம் கொண்டாரோ என்னவோ, எப்படியும் அவர்கள் அடித்து ரன் எடுக்கப்போவதில்லை என்பதை புரிந்துக்கொண்டு அடுத்தடுத்து இரண்டு நோபால்கள் போட்டு கொடுத்தார். இறுதியாக, ஒரு பவுண்டரியும்.
இன்னொரு பக்கம் சாஹல், கொஞ்சம் கூட கருணை காட்டவில்லை. ரஷீத்தின் விக்கெட்டையும் கழட்டிவிட்டார். ஆசிஃப் வீசிய 15வது ஓவரிலும், அஸ்வின் வீசிய 16வது ஓவரிலும் வெறும் 4 ரன்கள் மட்டுமே. ஹோல்டர் இன்னும் ஒரு ரன் குறைத்து, மூன்று ரன்கள் மட்டுமே கொடுத்தார். 18வது ஓவரை வீசிய சாஹல், கேப்டன் புவனேஷின் விக்கெட்டையும் தூக்க, 4-0-17-4 என சிறப்பாக தனது ஸ்பெல்லை முடித்தார். அணியின் மொத்த ஸ்கோரே, நூறு தாண்டாது போலயே என தலையில் துண்டைப் போட்டு ரசிகர்கள் அமர்ந்திருக்க, மடார் மடார் என ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என விளாசினார் உம்ரான் மாலிக். அதுவும் போல்ட் வீசிய ஓவரில் என்பதால், ரசிகர்கள் தலையில் இருந்து துண்டை எடுத்து தலைக்கு மேல் சுற்றினார்கள். கடைசி ஓவரை வீசவந்தார் கருணையின் உருவம் சைனி.
முதல் பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்டார் சமாத். சைனிக்கு சந்தோஷம் தாங்கவில்லை. மூன்றாவது பந்தை உம்ரான், சிக்ஸருக்கு பறக்கவிட்டார். முத்தாய்ப்பாக அந்த பந்து நோபாலாகிப் போக, சைனியின் முகத்தில் அவ்வளவு உற்சாகம். 4 மற்றும் 5வது பந்துகளை அப்துல் சமாத் பவுண்டரிக்கு விரட்டினார். பாவம், நைனியால் முடிந்தது இவ்வளவுதான்!
இறுதியில், 72 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இந்த ஐ.பி.எல் தொடரில், தனது சொந்தக் கோட்டையில் ஆட்டத்தைக் கோட்டை விட்ட முதல் அணி ஐதராபாத்தான். 22 பந்துகளில் 54 ரன்கள் விளாசிய பட்லருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. அந்தப் பக்கம் 126 பந்துகளில் 175 ரன்கள் விளாசி, 2 விக்கெட்களையும் வீழ்த்திய மார்க்ரம், ஆட்டநாயகன் விருதை வென்றிருந்தார்.