ஐதராபாத்தில் நேற்றிரவு நடந்த மேட்சில், ராயல் சேலஞ்சர்ஸ் தோற்றாலே சென்னை சூப்பர் கிங்ஸும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸும் `சூப்பரப்பு' என ப்ளே ஆஃபுக்குள் நுழைந்துவிடும். ஒருவேளை, ராயல் சேலஞ்சர்ஸ் ஜெயித்துவிட்டால், மிச்சமிருக்கும் மூன்று இடங்களைப் பிடிக்க சென்னை, லக்னோ, பெங்களூர், மும்பை என நான்கு அணிகள் தங்களது கடைசி ஆட்டத்தில் ஜெயிக்க வேண்டும். இப்படி நாலைந்து இடியாப்பத்தை கொசகொசவென பிசைந்து கையில் கொடுத்தது போலிருக்கும் இந்த ஐ.பி.எல்லில் என்னதான் நடக்கப்போகிறதோ?
நேற்று நடந்த மிக முக்கியமான ஆட்டத்தில், டாஸ் வென்ற ஆர்.சி.பி பவுலிங்கைத் தேர்ந்தெடுத்தது. உம்ரான் மாலிக்கை இந்த ஆட்டத்தில் எடுக்காத மார்க்ரமை காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை கழுவி ஊற்றினார்கள். `எல்லாம் சன்ரைசர்ஸ் நிர்வாகம் பண்ணுற வேலை. நானே பாவம்' என பூடகமாக போட்டுக்கொடுத்தார் மார்க்ரம். ப்ளே ஆஃப் ரேஸை விட, சன்ரைசர்ஸ் நிர்வாகம்தான் ரொம்ப சிக்கலாக இருக்கும் போல.
இம்முறை சீட்டு குலுக்கிப்போட்டு அபிஷேக் சர்மாவுடன் த்ரிப்பாட்டியை ஓபனிங் இறக்கிவிட்டார் மார்க்ரம். முகமது சிராஜ் வழக்கம்போல் முதல் ஓவரை வீசினார். வெறும் 2 ரன்கள் மட்டுமே. பார்னலின் 2வது ஓவர் கடைசிப்பந்து, ஒரு பவுண்டரி அடித்தார் த்ரிப்பாட்டி. சிராஜ் வீசிய 3வது ஓவரில் அபிஷேக் ஒரு பவுண்டரி அடித்தார். த்ரிப்பாட்டியின் ரன் அவுட் சான்ஸையும் இந்த ஓவரில் மிஸ் செய்தது ஆர்.சி.பி!
பார்னலின் 4வது ஓவரில், ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என த்ரிப்பாட்டி அள்ளிப்போட, அபிஷேக்கும் ஒரு பவுண்டரியை கிள்ளிப்போட்டார். 5வது ஓவரை ப்ரேஸ்வெல்லிடம் கொடுத்தார் டூப்ளெஸ்ஸிஸ். முதல் பந்தே, அபிஷேக் சர்மா அவுட். கவர் பாயின்ட்டில் கேட்ச் கொடுத்துவிட்டு அமைதியாக கிளம்பினார். 3வது பந்தில் த்ரிப்பாட்டியும் அவுட். சன்ரைசர்ஸ் ரசிகர்கள் கொதித்துபோனார்கள். அடுத்து களமிறங்கிய க்ளாஸன், முதல் பந்திலேயே ஒரு பவுண்டரி அடித்தார். சபாஷ் அகமதின் 6வது ஒவரை பவுண்டரியுடன் தொடங்கிய க்ளாஸன், இன்னும் இரண்டு பவுண்டரிகள் அடித்தார். பவர்ப்ளேயின் முடிவில் 49/2 என ஏதோ தொடங்கியிருந்தது சன்ரைசர்ஸ்.
ப்ரேஸ்வெல்லின் 7வது ஓவரில் க்ளாஸனிடமிருந்து இன்னொரு பவுண்டரி. பர்பிள் படேல் (எ) ஹர்ஷல் படேல், 8வது ஓவரை வீசவந்தார். மீண்டும் ஒரு பவுண்டரியைப் பறக்கவிட்டார் க்ளாஸன். 9வது ஓவரை வீசிய கர்ன் சர்மாவையும், ஒரு சிக்ஸர் பறக்கவிட்டார் க்ளாஸி. 10 ஓவர் முடிவில் 81/2 என றெக்கையை விரித்தது சன்ரைசர்ஸ்.
கர்ன் சர்மாவின் 11வது ஓவரில், இன்னொரு சிக்ஸரை பறக்கவிட்ட க்ளாஸன், 24 பந்துகளில் தனது அரைசதத்தையும் நிறைவு செய்தார். இன்னொரு பக்கம் 16 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் 16 ரன்களுடன் களத்தில் இருந்தார் கேப்டன் மார்க்ரம். பார்னலின் 12வது ஓவரில் பவுண்டரிகள் ஏதுமின்றி 7 ரன்கள் மட்டுமே கிடைத்தது. சபாஷின் 13வது ஓவரில் ஒரு வழியாக அவுட் ஆனார் மார்க்ரம். வெற்றிகரமான தோல்வி என குத்தாட்டம் போட்டனர் ஐதரபாத் ரசிகர்கள். சிராஜின் 14வது ஓவரில் க்ளாஸனிடமிருந்து இன்னொரு பவுண்டரி. ஸ்பின்னர்கள் என்றாலே முகத்தில் பல்பு எறிய பளீர் பளீர் என அடிக்கிறார் க்ளாஸன். அந்த நேரத்தில் மீண்டும் கர்ன் சர்மாவிடம் பந்தைக் கொடுத்தார் டூப்ளெஸ்ஸிஸ்.
15வது ஓவரின் முதல் இரண்டு பந்துகள் பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் பறந்தன. ஆனால், இம்முறை அடித்தது ப்ரூக்! 4வது பந்தில் நானும் இருக்கிறேன் என க்ளாஸனும் ஒரு சிக்ஸரை தூக்கி கடாசினார். 16வது ஓவரை வீசவந்தார் ஹர்ஷல். அப்போதும், `ஸ்பின்னரிடம் ஏன் ஓவர் கொடுக்குறீர்கள்' என ஆர்.சி.பியன்கள் கதறினார்கள். டூப்ளெஸ்ஸிஸுக்கு ஒன்றும் புரியவில்லை. அந்த ஓவரிலும் ஒரு பவுண்டரியை விளாசினார் க்ளாஸன். அடுத்து ஓவர் இன்னொரு ஸ்பின்னரான சபாஷிடம் கொடுக்க, `போங்க ப்ரோ, எனக்கு மனசே இல்ல ப்ரோ' என டிவியின் முன்னாலிருந்து எழுந்து சென்றார்கள் ஆர்.சி.பி ரசிகர்கள். க்ளாஸனும் பளாரென இரண்டு சிக்ஸர்களை நொறுக்கினார். ப்ரூக்கிடமிருந்து ஒரு பவுண்டரி. பார்னலின் 18வது ஓவரில், 7 ரன்கள் மட்டுமே கிடைத்தது. ஹர்ஷலின் 19வது ஓவரில் ஒரு சிக்ஸரை அடித்து 49 பந்துகளில் தனது சதத்தை எட்டிப்பிடிதார் க்ளாஸன்! அதே ஓவரில், டிப்பிங் யார்க்கர் போட்டு க்ளாஸனைத் தூக்கினார் ஹர்ஷல். 51 பந்துகளில் 104 ரன்கள் எனும் `மாஸ்டர் க்ளாஸன்' இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. அடுத்து களமிறங்கிய பிளிப்ஸும், முதல் பந்திலேயே ஒரு பவுண்டரியை நொறுக்கினார். சிராஜ் வீசிய கடைசி ஓவரில், வெறும் 4 ரன்கள் மட்டுமே எடுத்து, பிளிப்ஸின் விக்கெட்டையும் சன்ரைசர்ஸ். 20 ஓவர் முடிவில் 186/5 என சுமாராக தொடங்கியிருந்தாலும் சூப்பராக முடித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்.
187 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கியது கோலி - டூப்ளெஸ்ஸிஸ் ஜோடி. அப்துல் சமாத்துக்கு பதில் நடராஜனை இம்பாக்ட் வீரராக இறக்கினார் மார்க்ரம். சன்ரைசர்ஸ் ரசிகர்களுக்கு பதிலாக `மாறா ஜெயிச்சுடுய்யா' என சூப்பர் கிங்ஸ், சூப்பர் ஜெயன்ட் ரசிகர்கள் இம்பாக்ட் ரசிகர்களாக உள்ளே வந்தார்கள். முதல் ஓவரை, புவனேஷ்வர் குமார் வீசினார். முதல் இரண்டு பந்துகளையும் பவுண்டரிக்கு பறக்கவிட்டார் கோலி. அபிஷேக் சர்மாவிடன் 2வது ஓவரைக் கொடுத்தார் மார்க்ரம். மீண்டும் இரண்டு பவுண்டரிகள் அடித்தார் கோலி. ஐதராபாத் ரசிகர்களே `ஆர்.சி.பி ஆர்.சி.பி...' என கத்தினார்கள். சென்னை, லக்னோ ரசிகர்கள் மட்டும்தான் `எஸ்.ஆர்.ஹெச் எஸ்.ஆர்.ஹெச்...' என கத்திக்கொண்டிருந்தார்கள்.
நடராஜன் வீசிய 3வது ஓவரில், கோலிக்கு இன்னொரு பவுண்டரி. தியாகி வீசிய 4வது ஓவரை ஹாட்ரிக் பவுண்டரிகளுடன் துவங்கினார் டூப்ளெஸ்ஸிஸ். அதே ஓவரில் கோலியும் ஒரு பவுண்டரி விளாசினார். புவியின் 5வது ஓவரில், ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி என பறக்கவிட்டார் டூப்ளெஸ்ஸிஸ். நடராஜனின் கடைசி ஓவரில், டூப்ளெஸ்ஸிஸின் ரன் அவுட் சான்ஸ் ஒன்றை மிஸ் செய்ய, பவர்ப்ளேயின் முடிவில் 64/0 என கெத்தாக நின்றது ராயல் சேலஞ்சர்ஸ்.
அறிமுகம் வீரர் நிதீஷ் குமார் வீசிய 7வது ஓவரில், கோலி இன்னொரு பவுண்டரி அடித்தார். மயங்க் தகரின் 8வது ஓவரில் டூப்ளெஸ்ஸிஸுக்கு ஒரு பவுண்டரி. நிதீஷ் குமாரின் 9வது ஓவர் முதல் பந்து, ஃப்ளிக் ஷாட்டில் 103 மீட்டர் சிக்ஸர் அடித்தார் கோலி! டூப்ளெஸ்ஸிஸ் அந்த ஷாட்டைப் பார்த்து அரண்டுவிட்டார். அதே ஓவரில், டூப்ளெஸ்ஸி அடித்த பந்தை அற்புதமாக பாய்ந்து பிடித்தார் தகர். கடைசியில், அது இரண்டாவது பவுன்ஸர் என நோ பால் கொடுத்துவிட்டார் நடுவர். தகர் வீசிய அடுத்த ஓவரில் 5 ரன்கள் மட்டுமே கிடைக்க, 95/0 என துள்ளி குதித்து ஓடியது ஆர்.சி.பி. இன்னும் 60 பந்துகளில் 92 ரன்கள் தேவை.
அபிஷேக் வீசிய 11வது ஒவரில் 3 ரன்கள் மட்டுமே. ப்ளிப்ஸின் 12வது ஓவரின் முதல் பந்து, டூப்ளெஸ்ஸிஸ் தனது அரைசதத்தை நிறைவு செய்தார். அதே ஓவரில் ஒரு பவுண்டரி அடித்து தனது அரைசதத்தையும் நிறைவு செய்தார் கோலிமாரே கேங்ஸ்டர். தகரின் அடுத்த ஓவரில் அவர் அடித்த சிக்ஸர், கோலிசோடா பூஸ்டர்! அபிஷேக்கின் 14வது ஓவரில், டூப்ளெஸ்ஸிஸுக்கு ஒரு பவுண்டரியும் ஒரு சிக்ஸரும் கிடைத்தது. புவியின் 15வது ஓவரில் 4 பவுண்டரிகள் மொய் எழுதினார் கோலி. 15 ஓவர் முடிவில் 150/0 என மைதானத்தில் மல்லாக்க படுத்து கால் ஆட்டியது ஆர்.சி.பி.
தகரின் 16வது ஒவரில், பவுண்டரிகள் ஏதுமின்றி 4 ரன்கள். நடராஜனின் 17வது ஓவரில் ஒரு சிக்ஸர் அடித்தார் கோலி. இன்னும் 18 பந்துகளில் 23 ரன்கள் மட்டுமே தேவை. வம்படியாக புவியிடம் பந்தைக் கொடுத்தார் மார்க்ரம். ஓவரின் 4வது பந்து, ஒரு சிக்ஸரை அடித்துவிட்டு சதம் தொட்டார் கோலி. ஐதராபாத் ரசிகர்கள் ஆர்பரித்தனர். ஐ.பி.எல் தொடர்களில் ஆறாவது சதம் அடித்து கெய்லின் சாதனையை சமன் செய்தார் கோலி. ஆனால், அடுத்த பந்திலேயே ப்ளிப்ஸிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 63 பந்துகளில் 100 ரன்கள் எனும் அற்புதமான இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. நடராஜனின் 19வது ஓவரில், ஒரு பவுண்டரி அடித்துவிட்டு டூப்ளெஸ்ஸிஸும் அடுத்து பந்திலேயே அவுட்டாகி நடையைக் கட்டினார். கோலி - டூப்ளெஸ்ஸிஸ் இருவரும் `நட்புக்காக' சரத்குமார், விஜயகுமாரைப் போல் டக்கவுட்டில் விளையாடத் துவங்கினார்கள். மேக்ஸ்வெல்லும் ப்ரேஸ்வெல்லும் களத்தில் இருக்க, 19.2 ஓவரில் `ஆல் இஸ் வெல்' என ஆட்டத்தை முடித்தது ஆர்.சி.பி. 8 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸை வீழ்த்தி, சூப்பர் கிங்ஸ், சூப்பர் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களைப் பார்த்து கண் அடித்தது. சிறப்பாக ஆடிய சேஸிங் கிங் கோலிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. ஒரு ஆட்டத்தில் இரண்டு வீரர்கள் சதமடிப்பது இது மூன்றாவது முறை. ஆனால், எதிரெதிர் அணி வீரர்கள் அடிப்பது இதுவே முதல் முறை. ஆஹா!