நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் 10 அணிகளில் ஒன்றான, ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணி, இறுதிப்போட்டியில் கோப்பையை கொல்கத்தா அணியிடம் தாரைவார்த்தது. எனினும் இந்த ஆண்டு இறுதிப்போட்டி வரை முன்னேறியதாலும் லீக் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாலும் அவ்வணியின் திறமை குறித்து பெரிதாகப் பேசப்பட்டு வருகிறது.
அவ்வணி இறுதிப்போட்டி வரை முன்னேறுவதற்கு ஆந்திராவைச் சேர்ந்த நிதிஷ் குமார் ரெட்டியும் ஒரு காரணம். அவர், நடப்புத் தொடரில் ஒரு ஆல்ரவுண்டராகவும் ஜொலித்தார். அவர், 13 போட்டிகளில் சராசரியாக 33.67 மற்றும் 142.92 ஸ்ட்ரைக்ரேட்டில் இரண்டு அரைசதங்கள் உட்பட 303 ரன்கள் குவித்தார்.
இதையும் படிக்க: கம்பீரின் ரகசியத்தை உடைத்த தினேஷ் கார்த்திக்... India Head Coach பதவிக்கு ஆபத்தா?
இந்த நிலையில், “தோனிக்கு திறமை உண்டு.. ஆனால் டெக்னிக் இல்லை. அதாவது, விராட் கோலி அளவுக்கு தோனியிடம் டெக்னிக் இல்லை” என நிதிஷ் குமார் ரெட்டி பேசி இருந்ததாக வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியது. இது, தோனி ரசிகர்கள் இடையே கடும் சலசலப்பை ஏற்படுத்தியது.
விராட் கோலியைவிட, தோனி மோசமான பேட்டர் என்று குறிப்பிடுவதுபோல அவர் பேசியிருந்ததை, அவர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர். இதனால் அவருக்கு எதிராகக் கண்டனப் பதிவுகளையும் தெரிவித்தனர்.
இந்த நிலையில் அவர் தனது பேட்டி குறித்து விளக்கமளித்துள்ளார். அதில், “நான் தோனியின் மிகப்பெரிய ரசிகன். என்னிடம், ‘திறமை முக்கியமா அல்லது மனநிலை முக்கியமா’ எனக் கேள்வி கேட்கப்பட்டது. நான் மனநிலைதான் முக்கியம் எனப் பதில் அளித்தேன். அப்போது தோனியை அதற்கு உதாரணமாகக் கூறினேன். ஒரு வெற்றியை தீர்மானிப்பதில் மனநிலை மிக முக்கிய பங்கு வகிப்பதாக நான் நம்புகிறேன்.
எனது முந்தைய பேட்டியில் நான் கூறியதை சிலர் முழுமையாக வெளியிடாமல் கத்தரித்து வெளியிட்டு வருகின்றனர். தவறான விஷயங்களை பரப்ப வேண்டாம். முழுக் கதையையும் கேட்டுவிட்டு முடிவு செய்யுங்கள்” என விளக்கம் அளித்திருப்பதுடன், அதுகுறித்த முழு வீடியோவையும் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் இணைத்து வெளியிட்டுள்ளார்.
இதையும் படிக்க: கைமாறும் CSK.. கைப்பற்றப் போகிறதா அதானி குழுமம்? வைரலாகும் செய்தி.. உண்மை என்ன?