2014-ல் அரசியலில் காவிக்கு நல்லகாலம் தொடங்கியதென்றால் 2016-லிருந்து கிரிக்கெட்டில்! டெக்கான் சார்ஜர்ஸுக்கு விடைகொடுத்து சன்ரைஸ்ரஸாக களமிறங்கி ஐ.பி.எல்லில் செட்டாக மூன்றாண்டுகள் பிடித்தது அந்த அணிக்கு. பொதுவாக அணி நிர்வாகம் ஒட்டுமொத்தமாக மாறும்போது அந்த அணி ஆட்டத்தை அணுகும் முறையும் மொத்தமாக மாறும், நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ. ஹைதராபாத் அணிக்கு அது பாசிட்டிவாகவே அமைந்தது. வார்னர் தலைமையில் கோப்பை. அதன்பின் தொடர்ந்து நான்காண்டுகள் ப்ளே ஆப்பிற்கு தகுதியும் பெற்றது. அதன்பின் தொடங்கியது பஞ்சாயத்து. கேப்டன் என்றும் பாராமல் வார்னரை பவுண்டரி லைனுக்கு வெளியே தண்ணீர் தூக்கவிட்டார்கள். வீரர்களுக்கு ஃபார்ம் அவுட் சகஜம்தான். ஆனால் கேப்டனையே இப்படி சப்ஸ்டிட்யூட்டாக மாற்றியதெல்லாம் இதற்கு முன் நடந்திடாதது.
அதற்கடுத்த ஆண்டில் நடந்தது இன்னும் அதிக டிராமா. உலகளவில் டி20 லீக் அணிகள் வாங்க போட்டிபோடும் ரஷித் கானை விட்டுக்கொடுத்தார்கள். கூடவே வார்னரையும். பேர்ஸ்டோவின் அதிரடியையும் அவர்கள் நம்பத் தயாராயில்லை. பயிற்சியாளரும் மாறினார். ஆனால் ரிசல்ட் என்னமோ அதே எட்டாவது இடம்தான். இந்த முறை வில்லியம்சனை வெளியே அனுப்பினார்கள். கோச் மூடியும் தெறித்து ஓடினார். 'ஏன் இவ்வளவு குழப்பம்' என ரசிகர்களை கேள்வி குடைய, கூலாய் வந்து இந்தாண்டிற்கான ஏல டேபிளில் வந்து அமர்ந்தது அணி நிர்வாகம். 'இப்ப என்ன பண்ணக் காத்திருக்காங்களோ' என பதட்டமானார்கள் ரசிகர்கள்.
ஆனால் நாள் முடிவில் நடந்ததே வேறு. ஏலத்தை மிகக் கச்சிதமாக பயன்படுத்தியது அந்த அணி தான். போன சீசனில் மிடில் ஆர்டர் வீக்காய் இருந்ததை உணர்ந்து அதைப் பலப்படுத்த வீரர்களை வாங்கியது, இந்திய ஓபனர் வேண்டுமென்று மயாங்க்கிற்காக ஒற்றைக்காலில் நின்றது. அணி நிர்வாகத்தின் ஸ்டைலான வளரும் இளம் வீரர்களை வாங்கியது என ஆல்ரவுண்டராக ஏலத்தில் கலக்கியது. இப்படி பார்த்து பார்த்து செதுக்கிய அணி கடந்த இரண்டு சீசன்களின் கசப்பை மறந்து ப்ளே ஆப் போகுமா?
ராகுல் திரிபாதி - ஒன் டவுன் ஆடக்கூடிய வீரர்களுள் இன்றைய தேதியில் இவர்தான் பெஸ்ட். அதுவும் ஐ.பி.எல்லில் பேய் பிடித்தது போல பேட்டிங் ஆடுவார். கடந்த இரண்டு சீசன்களில் ஆடிய 23 ஆட்டங்களில் 623 ரன்கள். சராசரி - 34.61, இவர் இருக்க பயமேன் என்று ஓபனர்களும் பிரஷர் இல்லாமல் ஆடுவார்கள்.
ஹாரி ப்ரூக் - இங்கிலாந்தின் எதிர்காலம் என்றுதான் இவரை அழைக்கிறார்கள். கிரிக்கெட்டின் எல்லா பார்மட்டிலும் ஆதிக்கம் செலுத்தும் திறன் ஒருசிலருக்கே அமையும். அது ப்ரூக்கிற்கு நன்றாக அமைந்திருக்கிறது. இந்த ஓராண்டில் அவர் ஆடியிருக்கும் 45 டி20 போட்டிகளில் 1181 ரன்கள் எடுத்திருக்கிறார். ஸ்ட்ரைக் ரேட் 152. ஐ.பி.எல்லில் இவருக்கு இதுதான் முதல் சீசன் என்பதால் இவரைக் காண அணி பேதமின்றி காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.
வெரைட்டியான இந்திய பவுலிங் லைன் அப் - புவி, உம்ரான் மாலிக், நடராஜன் என வகைக்கு ஒன்றாய் இந்திய பவுலர்கள் இருப்பது இந்திய அணியில்தான். பவர்ப்ளேயில் புவனேஸ்வர் குமாரின் ஸ்விங் பேசும். மிடில் ஓவர்களை தன் வேகத்தால் கடத்துவார் உம்ரான். டெத் ஓவர்களில் தன் துல்லிய யார்க்கர்கள் கொண்டு கட்டுப்படுத்துவார் நடராஜன். ஹைதராபாத் ப்ளே ஆஃப்பிற்குள் நுழைய இந்த மும்மூர்த்திகளின் கூட்டணி முக்கியம்.
வீரர்களின் ஃபார்ம் - நடராஜன் காயம் காரணமாக ஒரு பெரிய இடைவேளைக்குப் பின் ஐ.பி.எல்லுக்கு வருகிறார். அவர் முன்பு போல டெத் ஓவர்களில் மிரட்டுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். மறுபக்கம் புவியின் சமீபத்திய ட்ராக்ரெக்கார்டும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. 2018-லிருந்து ஆடியிருக்கும் 56 ஐ.பி.எல் போட்டிகளில் 43 விக்கெட்களே வீழ்த்தியிருக்கிறார். பவர்ப்ளேயில் இவர் முன்புபோல ஆபத்தான பவுலராய் இருக்கவேண்டியது அவசியம்.
பவர்ப்ளே ரன்ரேட் - ஹைதராபாத் காலங்காலமாக பவுலிங்கை நம்பியே இருக்கும் அணி. எனவே பேட்டிங்கை மிக மெதுவாகவே தொடங்குவார்கள். கடந்த சீசனில் 7.01 என்கிற ரன்ரேட்டோடு கடைசி இடத்திலிருந்தது சன்ரைஸர்ஸ்தான். இந்த சீசனில் ஓபனிங் ஆடப்போகும் மயாங்க்கும் நேரமெடுத்து செட்டிலாகும் வீரர் என்பதால் ரன்ரேட் குறைவாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம். அது சில முக்கிய ஆட்டங்களில் அணியை பாதிக்கலாம்.
மார்க்ரம் - சன்ரைஸர்ஸ் அணியின் கேப்டன் மெட்டீரியல். தென்னாப்பிரிக்காவின் அண்டர் 19 கேப்டனாக இருந்தவர். இதே நிர்வாகத்தின் சன்ரைஸர்ஸ் கேப்டவுன் அணியை தென்னாப்பிரிக்க பிரிமியர் லீக்கில் வழிநடத்தி கோப்பை வெல்ல வைத்தவர். இந்த ஓராண்டில் 33 டி20 போட்டிகளில் ஆடி 1038 ரன்கள் குவித்திருக்கிறார். நடுநடுவே ஒன்றிரண்டு ஓவர்களும் போடக்கூடியவர் என்பதால் கேப்டனாயும் ஆல்ரவுண்டராயும் இவர் எடுக்கப்போகும் முடிவுகளை காணக் காத்திருக்கிறது கிரிக்கெட் உலகம்,
அபிஷேக் சர்மா - விக்ரமன் படத்தில் நாயகி ஹீரோவை அபரிதமாக நம்புவதைப் போலத்தான் அணி நிர்வாகம் இவரை நம்புகிறது. கடந்த சீசனில் ஓபனிங் இறங்கி 426 ரன்கள் வெளுத்தார். சமீபத்தில் முடிந்த சையது முஷ்டாக் அலி தொடரில் பவுலிங்கிலும் கலக்கினார். இவர் அதே ஃபார்மை தக்கவைக்கும்பட்சத்தில் சன்ரைஸர்ஸ் அணிக்கு நல்ல தொடக்கம் காத்திருக்கிறது.
அபிஷேக் சர்மா, மயாங்க் அகர்வால், ராகுல் திரிபாதி, ஹாரி ப்ரூக், மார்க்ரம், ஹென்ட்ரிக் க்ளாசன், வாஷிங்டன் சுந்தர், மார்கோ ஜான்சன், புவனேஸ்வர் குமார், நடராஜன், உம்ரான் மாலிக்.
இந்த ஆண்டிலிருந்து இம்பேக்ட் ப்ளேயர் எனும் முறை ஐ.பி.எல்லில் அறிமுகமாகிறது. அதன்படி ப்ளேயிங் லெவன் தவிர ஐந்து பிளேயர்களை கேப்டன் மாற்றுவீரர்களாக அறிவிக்கலாம். அவர்களுள் ஒருவர் ஆட்டத்தின் தன்மை பொறுத்து பவுலராகவோ, பேட்ஸ்மேனாகவோ களமிறங்குவார். பவுலராய் களமிறங்குபவர் நான்கு ஓவர்களையும் வீசலாம். பேட்ஸ்மேனாய் களமிறங்குபவரும் அவுட்டாகும்வரை/ஓவர் முடியும்வரை விளையாடலாம். அப்படி பேட்ஸ்மேன் களமிறங்கும்பட்சத்தில் டெயில் எண்டில் இருக்கும் பவுலருக்கு பேட்டிங் வாய்ப்பு கிடைக்காது. அதே போல இவர்கள் களமிறங்கும்போது வெளியேறும் வீரர் அதன்பின் ஆட்டத்தின் எந்தக் கட்டத்திலும் திரும்ப பங்குகொள்ளமுடியாது.
இதன்படி சன்ரைஸ்ரஸ் அணியின் இம்பாக்ட் பிளேயர்கள் பட்டியல் பெரும்பாலும் இப்படி இருக்கவே வாய்ப்புகள் அதிகம்.
அப்துல் சமத் - மிடில் ஆர்டரில் ஒரு எக்ஸ்ட்ரா இந்திய பேட்ஸ்மேன் தேவைப்படும்போது.
அடில் ரஷித் - ப்ளேயிங் லெவனில் மூன்று வெளிநாட்டு வீரர்களே இருக்கும்பட்சத்தில் ரஷித்தின் ஸ்பின் திறமை பலமாய் கைகொடுக்கும்.
கார்த்திக் தியாகி - ஒரு எக்ஸ்ட்ரா இந்திய வேகப்பந்துவீச்சாளர் தேவைப்படும்போது.
விவ்ரந்த் சர்மா - ஒரு ஸ்பின் பவுலிங் ஆல்ரவுண்டர் தேவைப்படும்போது
அன்மோல்ப்ரீத் சிங் - ஒரு எக்ஸ்ட்ரா இந்திய பேட்ஸ்மேன் தேவைப்படும்போது.
இவ்வளவு தெளிவாய் ப்ளூப்ரின்ட் போட்டு டீம் எடுத்ததால் தவறுகள் நடக்க வாய்ப்புகள் குறைவு. ஆனால் சன்ரைஸர்ஸை பொறுத்தவரை மிகவும் எதிர்பார்க்கும் நேரத்தில் சொதப்பித் தள்ளுவார்கள். எதிர்பாரா நேரத்தில் அசரடிப்பார்கள். இந்தமுறை என்ன செய்யக் காத்திருக்கிறார்கள் என்பது அந்த வீரர்களுக்கே வெளிச்சம்.