2024 டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் ஆப்கானிஸ்தான் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது தென்னாப்பிரிக்கா. 56 ரன்களுக்கு ஆப்கானிஸ்தானை ஆல் அவுட் ஆக்கிய தென்னாப்பிரிக்கா, 1 விக்கெட்டை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது. இதன்மூலம் முதல் முறையாக ஒரு உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருக்கிறது அந்த அணி!
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடந்து வரும் டி20 உலகக் கோப்பை போட்டி அரையிறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது. சூப்பர் 8 சுற்றிலிருந்து இந்தியா, ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
டரூபா பிரயன் லாரா ஸ்டேடியத்தில் நடந்த முதல் அரையிறுதியில் தென்னாப்பிரிக்க அணி ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டது. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற அணிகளைத் தோற்கடித்து பட்டையைக் கிளப்பிக்கொண்டிருந்த ஆப்கானிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவுக்கும் சவால் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எல்லாம் அப்படியே தலைகீழாக நடந்தது.
மிகவும் கடினமான ஆடுகளத்தில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார் ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷீத் கான். தொடர்ந்து நல்ல தொடக்கங்கள் கொடுத்து வந்த ஆப்கானிஸ்தான் ஓப்பனர்கள் இந்தப் போட்டியில் தடுமாறினார்கள். பெரிதாக ஏமாற்றினார்கள். முழு ஃபிட்னஸோடு இல்லாமல் களமிறங்கிய ரஹ்மானுல்லா குர்பாஸ், முதல் ஓவரின் கடைசி ஓவரிலேயே ஆட்டமிழந்தார். யான்சன் வீசிய பந்தில் எட்ஜாகி டக் அவுட் ஆனார் குர்பாஸ். யான்சனின் ஆட்டம் அதோடு நிற்கவில்லை.
தான் வீசிய அடுத்த ஓவரில் குல்பதின் நைப் விக்கெட்டையும் வீழ்த்தினார் அவர். 3 ஓவர்களின் முடிவில் 20/2 என தடுமாறிக்கொண்டிருந்த ஆப்கானிஸ்தானுக்கு இன்னும் பெரிய சிக்கலை ஏற்படுத்தினார் ரபாடா. நான்காவது ஓவரில் பந்துவீச வந்தவர், முதல் பந்திலேயே இப்ராஹிம் ஜத்ரானை போல்டாக்கினார். அடுத்து களமிறங்கிய முகமது நபி அதே ஓவரில் மூன்று பந்துகளில் சந்தித்து விட்டு போல்டாகி வெளியேறினார். ஐந்தாவது ஓவரில் கரோட்டாவையும் யான்சன் காலி செய்ய, ஆப்கானிஸ்தான் ஆடிப் போனது. பவர்பிளேவில் வெறும் 28 ரன்கள் மட்டுமே எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்தது அந்த அணி.
முதல் ஐந்து விக்கெட்டுகளை யான்சனும் ரபாடாவும் காலி செய்ய, அடுத்த 5 விக்கெட்டுகளையும் நார்கியாவும் ஷம்ஸியும் வாரிச் சுருட்டினர். இறுதியில் 56 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது ஆப்கானிஸ்தான் அணி. சர்வதேச டி20 அரங்கில் இதுதான் அந்த அணியின் குறைவான ஸ்கோர். ஆப்கானிஸ்தான் அணியில் அஸ்மத்துல்லா ஓமர்சாய் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எட்டினார். தென்னாப்பிரிக்க பௌலர்களில் யான்சன், ஷம்ஸி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், ரபாடா, நார்கியா இருவரும் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
எளிதான இலக்கை சேஸ் செய்த தென்னாப்பிரிக்க அணி, நிதானமாக சேஸ் செய்யத் தொடங்கியது. நல்ல ஃபார்மில் இருக்கும் குவின்டன் டி காக் இரண்டாவது ஓவரில் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்தத் தொடரின் டாப் விக்கெட் டேக்கர் ஃபசல்ஹக் ஃபரூக்கியின் பந்துவீச்சில் போல்டானார் அவர். அதன்பிறகு சுத்தமாக ஃபார்மிலேயே இல்லாத ரீஸா ஹெண்ட்ரிக்ஸ், எய்டன் மார்க்ரம் இருவரும் ஜோடி சேர்ந்தனர்.
ஆனால் இந்தப் போட்டியில் இருவருமே பொறுப்பாக பேட்டிங் செய்தனர். இருவரும் சரியான ஷாட்கள் ஆட, 8.5 ஓவர்களில் இலக்கை சேஸ் செய்தது தென்னாப்பிரிக்கா. 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி முதல் முறையாக ஒரு உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது அந்த அணி.
பவர்பிளேவிலேயே 3 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணிக்கு வில்லனாக அமைந்த மார்கோ யான்சன் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.