நேற்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான பிளே ஆஃப் ஆட்டத்தில் குஜராத் அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் பேயாட்டம் ஆடினார் என்றே சொல்லவேண்டும். 49 பந்துகளில் சதம் விளாசிய சுப்மன் கில், முடிவில் 60 பந்துகளில் 129 ரன்களை குவித்தார். இதில் 10 சிக்ஸர்களும், 7 பவுண்டரிகளும் அடங்கும். சுப்மன் கில்லின் இந்த அதிரடி இன்னிங்ஸ் மூலம் பல சாதனைகள் தகர்க்கப்பட்டது.
அந்தவகையில் சுப்மன் கில் தனது 78வது ரன்னை கடந்த போது இந்த சீசனில் 800 ரன்களை எட்டிய முதல் வீரர் ஆனார். இதுவரை 16 போட்டியில் 3 சதம், 4 அரைசதம் உட்பட 851 ரன் எடுத்துள்ளார். தவிர, ஒரு சீசனில் 800 ரன்களை கடந்த 4வது வீரரானார். ஏற்கனவே விராட் கோலி, ஜோஸ் பட்லர், டேவிட் வார்னர் இந்த இலக்கை எட்டினர்.
129 ரன் அடித்தது மூலம் இந்த சீசனில் ஒரு இன்னிங்சில் அதிக ரன் எடுத்த வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார். இதற்கு முன், மும்பைக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தானின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 124 ரன் எடுத்திருந்தது அதிகபட்ச ரன்னாக இருந்தது.
மேலும் ஐபிஎல் பிளே ஆஃப் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அடிக்கப்பட்ட அதிகபட்ச தனி நபர் ஸ்கோர் என்ற சாதனையை சுப்மன் கில் படைத்திருக்கிறார். இதற்குமுன் கடந்த 2014ஆம் ஆண்டு சி.எஸ்.கே.வுக்கு எதிராக பஞ்சாப் அணிக்காக களம் இறங்கிய ஷேவாக் 122 ரன்கள் அடித்தது சாதனையாக இருந்தது.
சுப்மன் கில்லின் ருத்ரதாண்டவத்தால் குஜராத் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் கம்பீரமாக நுழைந்துவிட்டது.
ஆட்டநாயகன் விருது வென்றபின் பேசிய சுப்மன் கில், “ஐபிஎல் தொடரில் நான் ஆடியதில் இதுதான் சிறந்த இன்னிங்ஸாக நான் கருதுகிறேன். நான் ஆரஞ்சு தொப்பியை வென்று விட்டேன் என்று எனக்கு தெரியாது. உண்மையில் நான் அப்போது ரெஸ்ட்ரூமுக்கு சென்று விட்டேன். ஏனெனில் விளையாடும்போது நிறைய வியர்வை கண்ணுக்குள் சென்று விட்டது.
மைதானத்தை பொறுத்தவரை பவுண்டரிகள் பெரிதாக இருந்து பவுலர்களும் சிறப்பாக செயல்பட்டார்கள் என்றால், டபுள்ஸ் ஓடி ரன் சேர்க்க வேண்டும். இதற்கு, எந்த பவுண்டரி சிறியதாக இருக்கிறது என்பதை கவனித்து அதற்கேற்ப அந்த திசையில் விளையாட வேண்டும். இதுதான் என்னுடைய திட்டமாக இருந்தது.
என்னுடைய வெற்றிக்கு காரணம் சூழலுக்கு தகுந்த மாதிரி ஒவ்வொரு பந்தையும் நான் எதிர்கொள்கிறேன் என்பதுதான். நேற்று ஒரே ஓவரில் மூன்று சிக்ஸர்கள் அடித்த பிறகுதான் ‘இது என்னுடைய நாள்’ என்று எனக்கு தோன்றியது. ஆடுகளமும் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது. இதனால் என்னுடைய ஷாட்டுகளை விருப்பம்போல் ஆடினேன்” என்று பேசியுள்ளார்.