இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ கிரிக்கெட் வீரர்களுடனான 2023-2024 ஆண்டுக்கான வருடாந்திர மத்திய ஒப்பந்தத்தை கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்டது.
வீரர்களின் ஒப்பந்த பட்டியலில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவிந்திர ஜடேஜா முதலிய 4 வீரர்கள் டாப் பட்டியலில் இணைக்கப்பட்ட அதேநேரத்தில், கடந்தாண்டு B மற்றும் C பிரிவுகளில் இணைக்கப்பட்டிருந்த ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் இருவரும் இந்தாண்டு ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டனர்.
ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் நீக்கப்பட்டதை குறிப்பிட்டு காட்டியிருந்த பிசிசிஐ, தேசிய அணிகளில் பங்கேற்று விளையாட முடியாத போது வீரர்கள் நிச்சயம் முதல்தர கிரிக்கெட் போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்ற பரிந்துரையையும் சுட்டிக்காட்டியது. இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் ரஞ்சிப்போட்டிகளை புறக்கணித்த நிலையில், பிசிசிஐ இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக நியாயம் கூறப்பட்டது.
அதேநேரம் கடந்த 2023 உலகக்கோப்பை தொடரில் 530 ரன்கள் மற்றும் அரையிறுதியில் சதமடித்த ஸ்ரேயாஸ் ஐயரை ஒப்பந்த பட்டியலில் இருந்து வெளியேற்றியது மிகப்பெரிய தண்டனை என்றும், வேண்டுமானால் கிரேடை குறைத்திருக்கலாம் என்ற கருத்தை ரசிகர்கள் வெளிப்படுத்தினர்.
இந்நிலையில் இர்ஃபான் பதான் மற்றும் ரவி சாஸ்திரி உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் மீதான பிசிசிஐ நடவடிக்கையை விமர்சித்தனர்.
பிசிசிஐ வருடாந்திர ஒப்பந்தத்தில் இடம்பெறாத நிலையில், டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் இடம்பெறவில்லை. மாறாக ரஞ்சிக்கோப்பையில் விளையாடமல் போனதால் தான் ஒப்பந்தத்தில் இடம்பெறவில்லை என கூறப்பட்ட நிலையில், ரஞ்சிக்கோப்பையில் பங்கேற்று விளையாடினார் ஸ்ரேயாஸ் ஐயர். ஆனால் அதற்குபிறகும் இந்திய அணியுடன் ஸ்ரேயாஸ் ஐயர் இணைக்கப்படவில்லை.
இந்நிலையில் பிசிசிஐ நடவடிக்கை குறித்து குற்றஞ்சாட்டியிருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர், “எனக்கு ஒரு அற்புதமான உலகக்கோப்பை இருந்தது. உலகக்கோப்பைக்கு பிறகு நான் ஓய்வு எடுக்க விரும்பினேன், எனது உடலில் குறிப்பிட்ட பகுதிகளில் வேலை செய்து வலிமையை மீட்டெடுக்க விரும்பினேன். ஆனால் அதற்குபிறகான இடைவெளியில் எனக்கும் பிசிசிஐ-க்கும் தகவல் தொடர்பு சரியாக இல்லாததால், சில முடிவுகள் எனக்கு சாதகமாக செல்லாமல் போய்விட்டது” என்று குற்றஞ்சாட்டினார்.
மேலும் பேசிய அவர், “நான் எனக்காகவே ரஞ்சிக்கோப்பையை விளையாட முடிவுசெய்தேன். நான் ரஞ்சி கோப்பை மற்றும் ஐபிஎல் கோப்பைகளை வென்றால் அது பிசிசிஐ எடுத்த முடிவுக்கு சரியான பதிலடியாக இருக்கும் என்று முடிவுசெய்தேன். அதிர்ஷ்டவசமாக அனைத்தும் சரியான இடத்திற்கு வந்துசேர்ந்துள்ளது, தற்போது நான் பேசிக்கொண்டிருக்கிறேன்" என்று தன் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.