சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய சென்னை அணிக்கு ருத்துராஜ் மற்றும் ரச்சின் ரவீந்திர சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். அதிரடியாக விளையாடிய இளம் வீரர் ரச்சின் 20 பந்துகளில் 46 ரன்களை எடுத்து ஆட்டம் இழந்தார். பின்னர் ஷிவம் துபே சிக்சர்களாக பறக்கவிட்டு அரைசதம் அடித்தார். அறிமுக வீரராக களமிறங்கிய சமீர் ரிஷ்வி முதல் பந்திலேயே சிக்சர் அடித்து ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தினார். 6 பந்துகளை எதிர்க்கொண்ட சமீர் 14 ரன்களை சேர்த்தார். 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 206 ரன்களை சேர்த்தது.
இமாலய இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் அணியில் கேப்டன் சுப்மன் கில் 8 ரன்களில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். மற்ற வீரர்களும் சென்னை அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினர். அதிகபட்சமாக சாய் சுதர்சன் 31 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்தார். இறுதியில் 143 ரன்களை மட்டுமே எடுத்து குஜராத் அணி தோல்வியை தழுவியது. தீபக் சாஹர், முஸ்தபிசூர், தேஷ்பாண்டே தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். அரைசதம் அடித்த சிவம் துபே ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இதுமட்டும்தானா நேற்று நடந்தது. ஷிவம் துபே என்ற தனிமனிதர் ஆடிய ருத்ர தாண்டவத்தை ஒட்டுமொத்த ரசிகர் கூட்டமும் பார்த்து ரசித்தது. கிட்டத்தட்ட 31 வயதான சிவம் துபே 2019 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமானார். இதுவரை 53 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 1,191 ரன்களை எடுத்துள்ளார். அதில் 7 அரை சதங்களும் அடக்கம்.
அதுவரை ஷாட் பால் ஆடத் தெரியாதவராக, கால்களை நகட்டி ஆடாதவராக, பெரிய இன்னிங்ஸ்களை ஆடதவராக அறியப்பட்ட சிவம் துபே, சென்னை அணியில் தோனிக்கு கீழ் வந்ததும் ‘சிக்ஸர் துபே’வாக அறியப்பட்டார். அவரது உயரம், அவரது பலம் போன்றவை மிகப்பெரிய சிக்ஸர்களை அடிப்பதில் அவருக்கு துணை நிற்கின்றன. 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மட்டும் 16 போட்டிகளில் மொத்தமாக 35 சிக்ஸர்களை விளாசினார் துபே.
சென்னை போன்ற ஆடுகளங்களில் ஆடும்போது, எதிரணியும் 2 அல்லது 3 ஸ்பின்னர்களைக் கொண்டே களமிறங்கும். அவர்களை எதிர்கொள்ளும் சிவம் துபே போன்ற ஒரு ஆட்டக்காரர், எதிரணியின் கணக்கை ஒன்றும் இல்லாமல் செய்துவிடுகிறார்.
நேற்றைய போட்டியில் கூட 23 பந்துகளில் 51 ரன்களை குவித்தார். அதில் 5 சிக்ஸர்கள் அடக்கம். தான் சந்தித்த முதல் பந்தையே சிக்ஸராக மாற்றினார். சாய் கிஷோர், முந்தைய பந்தில் ரஹானேவை வீழ்த்தி தெம்பாக அடுத்த பந்தை பந்துவீச, தொடர்ந்து இரு பந்துகளையும் சிக்ஸர்களாக மாற்றி, எதிரணியின் நம்பிக்கையை உடைத்தார் துபே. மற்றொரு ஸ்பின்னரான ரஷித் கானையும் துபே விட்டுவைக்கவில்லை. 14 ஆவது ஓவரின் இறுதிப் பந்தை deep mid wicketல் தூக்கி கடாசினார்.
துபேக்கு பவுன்சர் பந்தை எதிர்கொள்வதில் எப்போதும் சிக்கல் இருந்துள்ளது. ஓவருக்கு இரண்டு பவுன்சர்களை வீசலாம் என்று இந்தாண்டு கொண்டு வரப்பட்ட புதிய விதிமுறை துபேக்கு மேலும் சிக்கலாக பார்க்கப்பட்டது. ஆனால், நேற்று ஸ்பென்சர் வீசிய பவுன்சரை fine leg திசையில் அசால்ட்டாக சிக்சராக மாற்றினார் துபே. கண்களில் ஒத்திவைத்தார் போல் இருந்தது. பெங்களூர் உடனான போட்டியில் கூட துபே களமிறங்கியதும், அல்சாரி மற்றும் கேமரூன் கீரீனை டுப்ளசிஸ் பயன்படுத்தினார். ஆனால், அன்றும் தோனியின் கணக்கே வெற்றி பெற்றது. 28 பந்துகளில் 34 ரன்களை எடுத்தார். அவர் அடித்த ஒரு சிக்ஸரும் பவுன்சருக்கு எதிரானது.
துபே பவுன்சர்களை எதிர்கொள்வது குறித்து நேற்று பேசிய ருத்துராஜ் கெய்க்வாட், “துபே சென்னை அணிக்கு வந்தபோது, அணி நிர்வாகமும், தோனியும் தனிப்பட்ட முறையில் அவருடம் நேரம் செலவழித்தனர். அணியில் தனது பாத்திரம் என்ன? எந்த பந்துவீச்சாளரை அதிரடியாக ஆட வேண்டும் என்பது அவருக்கு தெரியும். அது எங்களுக்கு மிகப்பெரிய பலம்” என தெரிவித்தார்.
ஐபிஎல் தொடர்களில் பெங்களூர் அணியில் இரண்டு ஆண்டுகள் இருந்தவர், ராஜஸ்தான் அணியில் ஒரு வருடம் என மூன்று ஆண்டுகள் ஜொலிக்காத சிவம் துபே சென்னை அணியில் வந்து பிரகாசிப்பதன் காரணம் என்ன? ஏனெனில் இங்கு அவரைப் பட்டைத் தீட்ட தோனி என்ற கூர்வாள் இருந்தது. இன்னொரு பலமாக பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங் இருப்பது. கூடுதலாக சிஎஸ்கே நிர்வாகம் உருவாக்கியுள்ள அருமையான சூழல்.
ஆர்.சி.பி அணியில் அவரை வெளிப்படுத்த போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 2019 மொத்தமே 4 போட்டிகளில் தான் விளையாடினார். 40 ரன்கள் மட்டுமே எடுத்தார். 2020-ல் அதிகபட்சமாக 11 போட்டிகளில் ஆர்.சி.பி அணிக்காக விளையாடினார் துபே. ஆனாலும், மொத்தமே 129 ரன்கள் தான் எடுத்தார். அதன்பிறகு ராஜஸ்தான் அணியில் 9 போட்டிகளில் விளையாடி ஒரு அரைசதம் உட்பட 230 ரன்கள் எடுத்திருந்தார். சென்னை அணிக்கு வந்த 2021 ஆம் வருடத்தில் 11 போட்டிகளில் விளையாடி இரண்டு அரைசதம் உட்பட 289 ரன்கள் குவித்தார். கடந்த சீசன் தான் பெரிய வாய்ப்பாக அமைந்தது. 16 போட்டிகளில் விளையாடி 3 அரைசதம் உட்பட 418 ரன்கள் குவித்து ஸ்டார் பிளேயராக ஜொலித்தார்.
2022 ஆம் ஆண்டு ஏலத்தில் அவரை எடுத்ததில் இருந்தே துபேவை சுழலுக்கு எதிரான ஸ்பெஷலிஸ்டாக மாற்றியது. ஸ்பின் பந்துவீச்சுக்கு எதிராக அவரது ஸ்ட்ரைக் ரேட் 162.56.
“உன்னுடைய வேலை இதுதான்.. பந்துகளை வீச வேறு சிலர் இருக்கின்றனர். சிக்ஸர்களை அடிப்பதற்குத்தான் ஆள் வேண்டும். அதற்குத்தான் நீ வேண்டும்”. மெல்ல மெல்ல மெருகேறினார் துபே. பெங்களூர் அணிக்காக 15 போட்டிகளில் விளையாடி 169 ரன்களை மட்டுமே எடுத்த ஒருவர், சென்னை அணிக்காக 28 போட்டிகளில் விளையாடி 741 ரன்களை குவித்தது இதற்கொரு சான்று.
2019 ஆம் ஆண்டே பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமாகி இருந்தாலும், தொடர்ந்து பெரிய வாய்ப்புகள் ஏதும் இன்றியே இருந்தார் துபே. கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் அவரது ஆட்டம், வாழ்க்கை என அனைத்தையும் மாற்றியது. இந்தாண்டு ஜனவரியில் நடந்த ஆஃப்கானிஸ்தான் உடனான தொடரில் கூட இரண்டாவது டி20 போட்டியில் 32 பந்துகளில் 63 ரன்களைக் குவித்திருந்தார்.
நேற்றைய போட்டியில் ஆட்டநாயகன் விருதை பெற்ற துபே போட்டி முடிந்த பின் பேசுகையில், “சென்னை அணி மற்ற அணியை விட வேறுபட்டது. எனக்கு சுதந்திரத்தை அளித்தது. எதிரணி ஷாட் பந்துகளை வீசுவார்கள் என எனக்குத் தெரியும். நான் அதற்கு தயாராகவே இருக்கின்றேன்” என தெரிவித்திருந்தார்.
தோனி பட்டறையில் கூர் தீட்டப்பட்ட மற்றொரு வைரம் துபே. தனக்கான இடத்தை மேலும் உறுதி செய்தால், உலகக்கோப்பையில் அவருக்கான இடம் நிச்சயம்.