“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!
IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew
டெல்லி அணியுடனான ஐபிஎல் போட்டியின்போது அந்த அணியின் பேட்ஸ்மேன்களான சால்ட் மற்றும் வார்னரிடம், பெங்களூர் வீரர் முகமது சிராஜ் வம்பிழுத்தது குறித்து இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை ட்விட்டரில் விமர்சித்திருந்தார். அதற்கு பெங்களூர் ரசிகர்கள் அவரை தகாத முறையில் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த விவகாரம் இப்போது வைரலாகி வருகிறது.
ஐபிஎல் தொடரின் 50 ஆவது லீக் போட்டி பெங்களூர் - டெல்லி இடையே சமீபத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 181 ரன்களை எடுத்தது. இந்தப் போட்டியில் மெதுவாக விளையாடினாலும் களத்தில் நின்று ஆட்டம் காட்டிய விராட் கோலி, அரை சதமடித்திருந்தார். அதன் பின்பு வந்த மஹிபால் லோம்ரோர் டெல்லி பந்துவீச்சை வெளுத்து வாங்கி அவரும் அரை சதத்தை பதிவு செய்து கெத்து காட்டினார்.
182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி வீரர்கள், பெங்களுர் பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். பொதுவாகவே தனது வேகப்பந்தின் மூலம் முதல் விக்கெட்டை விரைவாக எடுத்துக்கொடுப்பார் முகமது சிராஜ். ஆனால் இந்தப் போட்டியில் அவரது பந்துவீச்சையே வார்னரும், சால்ட்டும் பொளந்து கட்டினர். இதனால் 5 ஓவர்களுக்குள்ளாகவே டெல்லி அணி 50 ரன்களை கடந்து அசத்தியது.
அப்போது, 5 ஆவது ஓவரை வீசிய சிராஜின் பந்துவீச்சில் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரியை விளாசினார் சால்ட். அடுத்து ஒரு பந்தை டாட் பாலாக வீசிய சிராஜ், சால்ட்டிடம் வம்பிழுத்தார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. இதனை மறுமுனையில் பார்த்துக்கொண்டிருந்த டேவிட் வார்னர், சிராஜிடம் என்னவென்று விசாரிக்க... அவரிடமும் கை விரல்களை நீட்டி கோவமாக பேசினார் சிராஜ். இதனையடுத்து கள நடுவர்கள் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தினர். இதனால் ஆட்டத்தில் சில நேரம் பரபரப்பு நிலவியது.
முகமது சிராஜின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிகழ்வு குறித்து இந்திய வீராங்கனை ஷிகா பாண்டே ட்விட்டரில் "வம்பிழுப்பதால் போட்டிகளில் வெற்றிப்பெற முடியாது" என பதிவிட்டிருந்தார்.
இதற்கு பெங்களூர் அணியின் ரசிகர்கள் ஷிகா பாண்டேவை கடுமையாகவும் தரம்கெட்ட வார்த்தைகளாலும் விமர்சனம் செய்தனர். இதற்கு பதிலளிக்கும் விதமாக மற்றொரு ட்விட்டர் பதிவில் ஷிகா பாண்டே "முகமது சிராஜின் பவுலிங், எப்போதுமே எனக்கு வியப்பளிக்கும். அவர் தனது கரியரில் இதுவரை சாதித்திருக்கும் விஷயங்களென்பது நம்பமுடியாதது; பார்ப்போருக்கும் அது ஊக்கமளிக்கும் வகையில் இருக்கும்; அவர் சாதனைகளை வேறு யாருடனும் ஒப்பிடவும் முடியாது.
நான் கூறியவற்றை வேறு விதமாக மாற்ற முயற்சிப்போர், அதையெல்லாம் வேறு இடத்தில் வைத்துக்கொள்ளுங்கள். இதுபோன்ற விமர்சனங்கள் என்னை எதுவும் செய்யாது!" என்று கூறியுள்ளார்.