நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறாத பாகிஸ்தான் அணி, தொடரிலிருந்து வெளியேறியது. இதனால், அவ்வணி மீது நிறைய விமர்சனம் கிளம்பியுள்ளது. குறிப்பாக, அவ்வணியின் பயிற்சியாளரான கேரி கிறிஸ்டனே அணியை கடுமையாக சாடியிருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்திருந்தன. அவர், “அணியில் ஒற்றுமை இல்லை; பாகிஸ்தான் ஓர் அணியே இல்லை” எனக் கூறியிருந்ததாகச் சொல்லப்படுகிறது.
மேலும், பாகிஸ்தான் முன்னாள் வீரர்களான வாசிம் அக்ரம், ஷாகித் அஃப்ரிடி, கம்ரான் அக்மல் முதலிய வீரர்கள் 2024 டி20 உலகக்கோப்பையில் பாபர் அசாமின் கேப்டன்சி மோசமாக இருந்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, டி20 உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக செயல்படாத வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் முனைப்பில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உள்ளது. இதனால், கேப்டன் பாபர் அசாம், இமான் வாசிம், அசாம் கான், சதாப் கான் மற்றும் ஹரிஷ் ரவுப் ஆகிய ஐந்து வீரர்கள் மட்டும் பாகிஸ்தானுக்கு செல்லாமல் லண்டன் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த அணிக்கு வரும் ஆகஸ்ட் மாதம் வரை எந்த அணியுடன் தொடர் இல்லை. அதனால் அதுவரை இந்த 5 வீரர்களும் அங்கேயே முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: 240 இடங்களுடன் நிறுத்தி மக்கள் பாஜவுக்கு பாடம் புகட்டிவிட்டனர்” - அசாதுதீன் ஒவைசி
இந்த நிலையில், அமெரிக்காவின் ஃப்ளோரிடா நகரில் ரசிகர் ஒருவருடன் பாகிஸ்தான் வீரர் ஹரிஷ் ரவுப் சண்டையிடும் வீடியோ வெளியானது. இது, சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில், ஹரிஷ் ரவுப் தனது எக்ஸ் பக்கத்தில், ”ரசிகர்களின் ஆதரவை எப்படி பார்க்கிறோமோ அப்படி தான் விமர்சனத்தையும் பார்க்கிறோம். ஆனால் என் குடும்பம், பெற்றோரை அநாகரிமாக விமர்சிக்கும்போது, பதிலடி கொடுக்க தயங்கமாட்டேன்” எனப் பதிவிட்டிருந்தார்.
இதையடுத்து, ஹரிஷ் ரவுப்புக்கு ஆதரவாக பலரும் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாகிஸ்தான் வீரர் ஷாகீன் அப்ரிடி, ”ஹரிஷ் ரவுப் நடத்தப்பட்ட விதம் முற்றிலும் அவமானகரமானது. இன்னொரு மனிதரை இழிவுபடுத்தும் உரிமை இங்கு யாருக்கும் இல்லை. அந்த வீடியோவால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. மனிதாபிமானத்தைவிட சொந்த விருப்புவெறுப்புகளுக்கு முன்னுரிமை அளிப்பது ஏன்? நாங்கள் அனைவரும் ஒற்றுமையுடன் ஹரிஷ் ரவுப்புக்கு ஆதரவாக உள்ளோம்” என தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் கேரி கிரிஸ்டனுக்கும் ஷாகீன் அப்ரிடி பதிலடி கொடுத்துள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவர் அணியில் ஒற்றுமை இல்லை எனக் கூறியிருந்தது விமர்சனமானது.