2024 ஐபிஎல் தொடரானது கடந்த மார்ச் 22ம் தேதி கோலாகலமாக சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கி நடைபெற்றுவருகிறது. 3 லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் தங்களுடைய முதல் வெற்றியை பதிவுசெய்துள்ளன. அதேநேரத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணிகள் மூன்று அணிகளும் தங்களுடைய முதல் மோதலில் தோல்வியை தழுவியுள்ளன.
இந்நிலையில் இன்றைய ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர்ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. ஜெய்ப்பூரில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்து விளையாடியது.
பலமான பேட்டிங் வரிசையை வைத்திருக்கும் ராஜஸ்தான் அணியில், தொடக்க வீரராக களமிறங்கிய ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் இருவரும் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை விரட்டிய ஜோஸ் பட்லர் நல்ல தொடக்கத்தை கொடுக்க, சிறந்த ஃபார்மில் இருக்கும் ஜெய்ஸ்வால் 2 பவுண்டரிகள், 1 சிக்சர் என அதிரடி காட்டினார். ஆனால் அதிகநேரம் நிலைக்கவிடாத லக்னோ பவுலர்கள் பட்லரை 11 ரன்னிலும், ஜெய்ஸ்வாலை 24 ரன்னிலும் வெளியேற்றி அசத்தினர்.
தொடக்க வீரர்கள் வெளியேறினாலும் 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் சாம்சன் மற்றும் ரியான் பராக் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 3 சிக்சர்கள் 1 பவுண்டரி என வானவேடிக்கை காட்டிய ரியான் பராக், 43 ரன்கள் குவித்து வெளியேறினார். இறுதிவரை களத்தில் நின்ற கேப்டன் சாம்சன் 3 பவுண்டரிகள் 6 சிக்சர்கள் என விளாசி 82 ரன்கள் குவிக்க, ராஜஸ்தான் அணி 193 ரன்களை எட்டியது.
ஒவ்வொருமுறையும் ஐபிஎல் தொடக்க போட்டிகளில் தரமான பேட்டிங்கை வெளிப்படுத்தும் சஞ்சு சாம்சன், இந்த ஐபிஎல் தொடரின் முதல் போட்டியிலும் ஒரு அபராமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 52 பந்துகளில் 3 பவுண்டரிகள் 6 சிக்சர்கள் என துவம்சம் செய்த சஞ்சு 82 ரன்கள் குவித்து, ஒரு பிரத்யேக பட்டியலில் தன்னுடைய பெயரை நிலைநிறுத்தியுள்ளார்.
கடந்த 2020ம் ஆண்டு ஐபிஎல் தொடரிலிருந்து ஒவ்வொரு ஐபில்லின் தொடக்க போட்டியிலும் அரைசதமடித்து அசத்தியுள்ளார் சஞ்சு சாம்சன். ஆனால் சோகம் என்னவென்றால் முதல் போட்டிக்கு பிறகு தொடர் முழுவதும் சஞ்சு சாம்சன் சோபித்ததே இல்லை. முதல் போட்டியின் அதிரடிக்கு பிறகு சுமாரான ஆட்டத்தை மட்டுமே வெளிப்படுத்தியிருக்கும் சஞ்சு, நடப்பு ஐபிஎல் தொடரில் என்னசெய்யப்போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
2020-லிருந்து தொடக்க போட்டிகளில் சஞ்சு சாம்சன்,
2020 vs CSK - 74(32)
2021 vs PK - 119(63)
2022 vs SRH - 55(27)
2023 vs SRH - 55(32)
2024 vs LSG - 82(52)
லக்னோ அணிக்கு எதிராக 82 ரன்களை அடித்திருக்கும் சஞ்சு சாம்சன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அதிக அரைசதங்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் ஜோஸ் பட்லர் மற்றும் அஜிங்கியா ரஹானேவின் சாதனையை சமன்செய்துள்ளார்.
ராஜஸ்தான் அணிக்காக ஜோஸ் பட்லர் மற்றும் அஜிங்கியா ரஹானே இருவரும் 23 அரைசதங்களை அடித்திருக்கும் நிலையில், சஞ்சு சாம்சனும் 23வது அரைசதத்தை பதிவுசெய்து அசத்தியுள்ளார்.
194 ரன்களை வெற்றி இலக்காக விளையாடிவரும் லக்னோ அணி, 13 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 122 ரன்களுடன் விளையாடிவருகிறது. இன்னும் 42 பந்துகளில் 72 ரன்கள் தேவையாக உள்ளது.