‘இது லிஸ்ட்லயே இல்லையே...’ ரோகித் சர்மாவின் ஆல்டைம் ஐபிஎல் சாதனையை உடைத்த சஞ்சு சாம்சன்!
2024 ஐபிஎல் தொடரானது மே 26ம் தேதி முடிவடையும் நிலையில், 2024 டி20 உலகக்கோப்பையானது ஜூன் 2ம் தேதி தொடங்கவிருக்கிறது. இதற்கான இந்திய அணி வரும் ஏப்ரல் இறுதிவாரம் அல்லது மே முதல்வாரம் தேர்ந்தெடுக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
நடப்பு ஐபில் தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்கள், டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறுவார்கள் என்பதால், இளம்வீரர்கள் தங்களுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திவருகின்றனர். ஆனால் அதேநேரத்தில் நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் சஞ்சு சாம்சனுக்கு டி20 உலகக்கோப்பையில் இடம்கிடைக்குமா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் இதுவரை நடந்த 5 போட்டிகளில் 157 ஸ்டிரைக்ரேட் மற்றும் 82 சராசரியுடன் 256 ரன்களை அடித்திருக்கும் சஞ்சுசாம்சன், ரோகித் சர்மாவின் 8 வருட ஐபிஎல் சாதனையை முறியடித்துள்ளார்.
கேப்டனாக ரோகித் சர்மாவின் சாதனையை முறியடித்த சஞ்சு சாம்சன்!!
தொடர்ச்சியான 4 வெற்றிகளுக்கு பிறகு குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய ராஜஸ்தான் அணி, தங்களுடைய முதல் தோல்வியை பதிவுசெய்தது. 196 ரன்கள் அடித்தபோதும் ராஜஸ்தான் ராயல்ஸ் பவுலர்களால் வெற்றியை தக்கவைக்க முடியவில்லை.
தோல்வியடைந்த போதிலும் குஜராத் அணிக்கு எதிராக 38 பந்துகளில் 7 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் பறக்கவிட்ட சஞ்சு சாம்சன் 68 ரன்கள் குவித்து, 8 வருட ரோகித் சர்மாவின் சாதனையை முறியடித்தார். ராஜஸ்தான் கேப்டனாக 50வது போட்டியில் விளையாடிய சஞ்சு சாம்சன், ஒரு ஐபிஎல் கேப்டன் 50வது போட்டியில் அடித்த அதிகபட்ச ரன்களை பதிவுசெய்தார். இதற்கு முன்பு 2016ம் ஆண்டு ரோகித்சர்மா மும்பை கேப்டனாக தன்னுடைய 50வது போட்டியில் 65 ரன்களை அடித்திருந்த நிலையில், 8 வருடத்திற்கு பிறகு தற்போது அதை உடைத்துள்ளார் சஞ்சு சாம்சன்.
IPL-ல் கேப்டனாக விளையாடிய 50வது போட்டியில் அதிக ரன்கள் அடித்தவர்கள்,
68* (38) - சஞ்சு சாம்சன் (RR) vs GT, 2024
65 (48) - ரோகித் சர்மா (MI) vs DC, 2016
59 (46) - கெளதம் கம்பீர் (KKR) vs RCB, 2013
45 (33) - டேவிட் வார்னர் (SRH) vs DC, 2021