2024 ஐபிஎல் தொடரானது திடீரென அனுபவம் அதிகம் இல்லாத இளம் கேப்டன்களின் கீழ் விளையாடப்படவிருக்கிறது. ஆர்சிபி கேப்டன் ஃபேஃப் டூபிளெசிஸ் மூத்த வீரராக இருந்தாலும் ஒரு ஐபிஎல் சீசனில் மட்டுமே ஐபிஎல் கேப்டனாக விளையாடியுள்ளார். தற்போது இருக்கும் 10 கேப்டன்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனான ஸ்ரேயாஸ் ஐயர் மட்டுமே 55 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி அனுபவம் வாய்ந்த ஐபிஎல் கேப்டனாக நீடிக்கிறார்.
இதற்கு முக்கிய காரணமாக அமைந்திருப்பது மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து ரோகித் சர்மாவும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து மகேந்திர சிங் தோனியும் கேப்டன்சி பொறுப்பை ஹர்திக் பாண்டியா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட்டிடம் ஒப்படைத்துள்ளனர். விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் மகேந்திர சிங் தோனி என்ற மூன்று சாம்பியன் வீரர்களின் கேப்டன்சி பயணம் ஐபிஎல் தொடரில் முடிவுக்கு வந்துள்ளது.
ஏற்கனவே கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு “புதிய ஐபிஎல் சீசனில், புதிய ரோலில் விளையாடவிருக்கிறேன்” என்று தோனி சமூகவலைதளத்தில் பதிவிட்டு பரபரப்பை கிளப்பினார். அதற்கேற்றார் போல் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கேப்டன்சி மாற்றம் குறித்து பேசியிருக்கும் ருதுராஜ் கெய்க்வாட், தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அணியில் தோனி, ஜடேஜா மற்றும் அஜிங்கியா ரஹானே முதலிய மூத்த வீரர்கள் இருப்பது பலமாக அமையும் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து சிஎஸ்கே வீடியோவில் பேசியிருக்கும் அவர், “உணர்வு நன்றாக இருக்கிறது. இது வெளிப்படையாக எனக்கு கிடைத்த ஒரு பாக்கியம். அதற்கும் மேல் இது ஒரு மிகப்பெரிய பொறுப்பு, அதை எதிர்கொள்ள நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். அணியில் இருக்கும் ஒவ்வொருவரும் போதுமான அனுபவமுள்ளவர்கள், அதனால் நான் பெரிதாக செய்வதற்கு ஒன்றும் இல்லை என்று நினைக்கிறேன். அதுமட்டுமல்லாமல் அணியில் மஹி பாய், ஜட்டு பாய் மற்றும் அஜ்ஜூ பாய் அனைவரும் உள்ளனர். அதனால் கவலைப்பட வேண்டியதில்லை, கேப்டன்சி செய்ய ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று ருதுராஜ் கூறியுள்ளார்.
கேப்டன்சி மாற்றம் குறித்து சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் கூறுகையில், “கேப்டன்கள் சந்திப்புக்கு சிறிது நேரத்திற்கு முன்புதான் எனக்கே இந்த விஷயம் தெரியும். இது அவருடைய முடிவு. இந்த முடிவுக்கு நாம் மரியாதை கொடுக்க வேண்டும். தோனி எது செய்தாலும் அது அணியின் நலனுக்காகவே இருக்கும். இந்த முடிவை எடுப்பதற்கு முன்பு நிச்சயம் தோனி ருதுராஜ் இடம் கலந்து பேசியிருப்பார். ஆனால், இன்று காலை தான் அணி உரிமையாளருக்கே இந்த முடிவை தெரிவித்தோம்” என்றார்.